
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் சவுத்தாம்ப்டனில் நடந்துவருகிறது. முதல் நாள் ஆட்டம் முழுவதும் மழையால் பாதிக்கப்பட்டதால், 2ம் நாளான இன்றுதான் ஆட்டம் தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிவரும் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மாவும் ஷுப்மன் கில்லும் நன்றாக ஆடி நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 62 ரன்களை சேர்த்தனர். ரோஹித் சர்மா 34 ரன்களில் ஆட்டமிழக்க, அவரை தொடர்ந்து கில் 28 ரன்களில் ஆட்டமிழந்தார். புஜாரா 8 ரன்னில் ஆட்டமிழக்க, கோலியும் ரஹானேவும் இணைந்து சிறப்பாக ஆடிவருகின்றனர்.
இந்த போட்டியில் இந்திய அணி ஜடேஜா மற்றும் அஷ்வின் ஆகிய 2 ஸ்பின்னர்களுடன் ஆடும் அதேவேளையில், நியூசிலாந்து அணி ஸ்பின்னரே இல்லாமல் முழுக்க முழுக்க ஃபாஸ்ட் பவுலர்களுடன் ஆடுகிறது.
இங்கிலாந்து கண்டிஷன் பொதுவாகவே ஸ்விங்கிற்கு சாதகமாக இருக்கும். அதிலும் சவுத்தாம்ப்டனில் மழை பெய்ததால் கண்டிஷன் ஸ்பின்னிற்கு ஒத்துழைக்காது என்பதாலும், இந்திய வீரர்கள் ஸ்பின் பவுலிங்கை திறம்பட எதிர்கொள்வார்கள் என்பதாலும், ஒரு ஸ்பின்னரை கூட அணியில் எடுக்காமல், டிம் சௌதி, டிரெண்ட் போல்ட், நீல் வாக்னர், கைல் ஜாமிசன் ஆகிய ஃபாஸ்ட் பவுலர்கள் மற்றும் ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டர் காலின் டி கிராண்ட்ஹோம் ஆகிய 5 ஃபாஸ்ட் பவுலர்களுடன் நியூசிலாந்து ஆடுகிறது.
நியூசிலாந்து அணியின் இந்த அணி தேர்வை விமர்சித்துள்ளார் ஷேன் வார்ன். இதுகுறித்து ஷேன் வார்ன் பதிவிட்ட டுவீட்டில், நியூசிலாந்து அணி ஒரு ஸ்பின்னரை கூட எடுக்காதது பெரிய ஏமாற்றம். ஆட ஆட கால்தடங்கள் பதிந்துவருகின்றன. எனவே பந்து போகப்போக திரும்பும் என்று ஷேன் வார்ன் தெரிவித்துள்ளார்.