உலக கோப்பையை அந்த அணிதான் வெல்லும்!! அடித்து சொல்லும் முன்னாள் ஜாம்பவான்

By karthikeyan VFirst Published Mar 15, 2019, 12:06 PM IST
Highlights

உலக கோப்பை நெருங்கிய நிலையில், இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய அணிகள் வலுவான அணிகளாக உள்ளன. இவை தவிர தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் அணிகளும் அண்மைக்காலமாக சிறப்பாக ஆடிவருகின்றன. ஆஃப்கானிஸ்தான் அணியும் வலுவாக உள்ளதால் அந்த அணியை குறைத்து மதிப்பிட முடியாது. 

உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், உலக கோப்பைக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன. 

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி ஆகிய இரு அணிகளில் ஒன்றுதான் உலக கோப்பையை வெல்லும் என பெரும்பாலான முன்னாள் வீரர்கள் கணித்து கருத்து தெரிவித்துள்ளனர்.

வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் ஆக்ரோஷமாக ஆடிவருகிறது. அந்த அணியில் கப்டில், வில்லியம்சன், டெய்லர், லதாம், கிராண்ட் ஹோம் ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர். எனவே அந்த அணியும் உலக கோப்பையில் கடும் நெருக்கடி கொடுக்கும். 

ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாமல் கடந்த ஓராண்டாக திணறிவந்த ஆஸ்திரேலிய அணி, இந்திய மண்ணில் இந்திய அணியை வீழ்த்தி புது உத்வேகத்துடன் காணப்படுகிறது. ஸ்மித் - வார்னர் இல்லாமலேயே அந்த அணி இந்திய அணியை வீழ்த்திவிட்டது. உஸ்மான் கவாஜா, ஆடம் ஸாம்பா, பாட் கம்மின்ஸ் ஆகியோர் நல்ல ஃபார்மில் அருமையாக ஆடிவருகின்றனர். எனவே ஸ்மித்தும் வார்னரும் அணிக்கு திரும்பிவிட்டால் வலுவான அணியாகிவிடும் ஆஸ்திரேலிய அணி. அதுமட்டுமல்லாமல் உலக கோப்பைக்கு அந்த அணியின் துணை பயிற்சியாளராக 2 உலக கோப்பையை வென்ற முன்னாள் கேப்டன் பாண்டிங் நியமிக்கப்பட்டுள்ளார். எனவே உலக கோப்பையில் ஆஸ்திரேலிய அணி சவாலான அணியாக திகழும். அந்த அணியை குறைத்து மதிப்பிட முடியாது. 

இதற்கிடையே, வெஸ்ட் இண்டீஸ் அணியும் அபாரமாக ஆடிவருகிறது. கெய்ல், ஷாய் ஹோப், ஹெட்மயர், பிராத்வெயிட், ஹோல்டர் என அந்த அணியும் வலுவாக திகழ்கிறது. இவை தவிர தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான் அணிகளும் சிறந்த அணிகள்தான். யாரும் கண்டுகொள்ளாத ஆஃப்கானிஸ்தான் அணியை குறைத்து மதிப்பிட முடியாது. அவர்கள் சிறந்த கிரிக்கெட்டை ஆடிவருகிறார்கள்.

இந்நிலையில், உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணி குறித்து ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகைக்கு ஷேன் வார்னே அளித்த பேட்டியில், இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு அணிகளும் கடந்த ஓராண்டாக சிறந்த கிரிக்கெட்டை ஆடிவருகின்றன. ஆனால் கடைசி 6 உலக கோப்பைகளில் 4 கோப்பையை ஆஸ்திரேலிய அணி வென்றுள்ளது. இதில் 1999ல் இங்கிலாந்தில் நடந்த உலக கோப்பையையும் ஆஸ்திரேலியாதான் வென்றது. (2019 உலக கோப்பை இங்கிலாந்தில் தான் நடக்க உள்ளதால் இதை குறிப்பிட்டுள்ளார் வார்னே). உலக கோப்பை போன்ற பெரிய தொடரில் ஆடுவதை எப்போதுமே ஆஸ்திரேலிய அணி விரும்பும். ஸ்மித்தும் வார்னரும் தடை முடிந்து திரும்புவதால், சிறப்பாக ஆடும் வேட்கையில் இருப்பார்கள். எனவே அவர்களும் திரும்பிய பிறகு ஆஸ்திரேலிய அணி மேலும் வலுப்பெறும். ஸ்மித்தும் வார்னரும் இல்லாமலேயே ஆஸ்திரேலிய அணி, இந்திய அணிக்கு எதிராக 360 ரன்களை வெற்றிகரமாக விரட்டி வென்றுள்ளது. எனவே ஆஸ்திரேலிய அணிதான் கோப்பையை வெல்லும் என்று நினைப்பதாக ஷேன் வார்னே கருத்து தெரிவித்துள்ளார். 

இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் கவாஸ்கர், இங்கிலாந்து அணிதான் உலக கோப்பையை வெல்லும் என்று கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 
 

click me!