உலக கோப்பை அணியில் தினேஷ் கார்த்திக்கின் இடம் உறுதி!!

By karthikeyan VFirst Published Mar 15, 2019, 11:21 AM IST
Highlights

தினேஷ் கார்த்திக் கிடைத்த வாய்ப்புகளை நன்றாக பயன்படுத்தி ஆடியபோதும், அவர் சிறந்த விக்கெட் கீப்பராக திகழும் நிலையிலும், அவரைவிட ரிஷப் பண்ட்டுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. 

உலக கோப்பை நெருங்கிய நிலையில், உலக கோப்பை அணிக்கான 12-13 வீரர்கள் உறுதியாகிவிட்டனர். ஒன்றிரண்டு இடங்களுக்கான வீரர்களை தேர்வு செய்யும் பணி நடந்துவருகிறது. 

உலக கோப்பைக்கான அணிக்கு தேவைப்படும் வீரர்களில் ஒருவர் ரிசர்வ் விக்கெட் கீப்பர். தோனிக்கு மாற்று விக்கெட் கீப்பர் ஒருவர் தேவை. அந்த இடத்திற்கு அனுபவ விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கை காட்டிலும் ரிஷப் பண்ட்டிற்கே அணி நிர்வாகம் முக்கியத்துவம் கொடுத்தது. 

தினேஷ் கார்த்திக் கிடைத்த வாய்ப்புகளை நன்றாக பயன்படுத்தி ஆடியபோதும், அவர் சிறந்த விக்கெட் கீப்பராக திகழும் நிலையிலும், அவரைவிட ரிஷப் பண்ட்டுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் கடைசி இரண்டு போட்டிகளில் ஆடிய ரிஷப் பண்ட், விக்கெட் கீப்பிங்கில் படுமோசமாக சொதப்பியதுடன் பேட்டிங்கிலும் சோபிக்கவில்லை. 

இந்திய அணிக்கு உலக கோப்பைக்கு முந்தைய கடைசி தொடரான ஆஸ்திரேலிய தொடரில் மாற்று விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திற்கு பதிலாக ரிஷப் பண்ட் சேர்க்கப்பட்டார். இதன்மூலம் உலக கோப்பைக்கான கதவு தினேஷ் கார்த்திக்கிற்கு சாத்தப்பட்டதாக கருதப்பட்டது. ரிஷப் பண்ட்டை பரிசோதிக்கும் விதமாக கடைசி 2 போட்டிகளில் ஆடவைக்கப்பட்டார். 

மொஹாலியில் நடந்த நான்காவது போட்டியில் கேட்ச், ஸ்டம்பிங் ஆகியவற்றை தவறவிட்டார் ரிஷப் பண்ட். பேட்ஸ்மேன் அடிக்கத் தவறிய பந்துகளையும் கூட தவறவிட்டு பவுண்டரிக்கு வழிவகுத்து கொடுத்தார். ஒரு விக்கெட் கீப்பர் இந்த லெட்சணத்தில் விக்கெட் கீப்பிங் செய்தால்,அது அணியின் வெற்றியை கடுமையாக பாதிக்கும் என்பதில் துளியும் ஐயமில்லை. இவரை உலக கோப்பை அணியில் எடுத்தால், தோனி ஆடாத போட்டிகளில் அணியை தோல்விப்பாதைக்கு இவரே அழைத்து செல்லக்கூடிய அபாயம் உள்ளது. ரிஷப் பண்ட் இன்னும் நிறைய மேம்பட வேண்டியிருக்கிறது. அதன்பின்னர் உலக கோப்பை போன்ற பெரிய தொடரில் ஆடவைக்கலாம் அல்லது தோனி ஓய்வுபெற்ற பிறகு வேறு வழியே இல்லாமல் இவரை ஆடவைத்து தேற்றலாம். அந்த வகையில் கிடைத்த வாய்ப்புகளை ரிஷப் பண்ட் கெடுத்துக் கொண்டதை அடுத்து தினேஷ் கார்த்திக்கிற்கான வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. 

உலக கோப்பை அணியில் மாற்று விக்கெட் கீப்பராக, 15 பேர் கொண்ட அணியில் தினேஷ் கார்த்திக் இடம்பிடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. உலக கோப்பை அணியில் தினேஷ் கார்த்திக் கண்டிப்பாக இருப்பார் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும், ஐபிஎல்லில் தினேஷ் கார்த்திக் கேப்டனாக இருக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் துணை பயிற்சியாளருமான சைமன் கேடிச் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

தினேஷ் கார்த்திக் குறித்து பேசிய சைமன் கேடிச், தினேஷ் கார்த்திக் நீண்ட நெடிய அனுபவம் கொண்டவர். அவர் இக்கட்டான பல சூழல்களில் இந்திய அணிக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் கூட சிறப்பாக ஆடி அணியை காப்பாற்றியுள்ளார். தினேஷ் கார்த்திக்கிற்கு பந்துவீசுவது கடினம். அவர் ஒரு சிறந்த மற்றும் அனுபவம் கொண்ட வீரர். எனவே அவர் உலக கோப்பைக்கான 15 வீரர்களை கொண்ட அணியில் கண்டிப்பாக இடம்பெறுவார் என்று சைமன் கேடிச் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

2004ம் ஆண்டே இந்திய அணியில் அறிமுகமான தினேஷ் கார்த்திக், அணியில் தனக்கான இடம் கிடைக்காமல் தவித்துவருகிறார். இந்திய அணியில் அறிமுகமாகி 15 ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும் வெறும் 91 ஒருநாள் போட்டிகளிலும் 26 டெஸ்ட் போட்டிகளிலும் மட்டுமே ஆடியுள்ளார். அவ்வப்போது அணியில் சேர்க்கப்படுவதும் நீக்கப்படுவதுமாகவே இருந்தார். அவரும் தொடர்ச்சியாக இந்திய அணியில் தனக்கான இடத்திற்காக காத்து கொண்டிருந்தார். ஆனால் இந்திய அணியில் அவருக்கான இடம் கிடைக்கவே இல்லை. 

தனக்கான அடையாளத்தையும் அங்கீகாரத்தையும் தேடிக்கொண்டிருந்த தினேஷ் கார்த்திக், கடந்த  ஆண்டு நடந்த நிதாஹஸ் டிராபி டி20 தொடரின் இறுதி போட்டியில் கடைசி பந்தில் சிக்ஸர் விளாசி இந்திய அணியை திரில் வெற்றி பெற செய்தார். அதன்பிறகு தொடர்ச்சியாக டி20 அணியில் தினேஷ் கார்த்திக் எடுக்கப்பட்டார்.

உலக கோப்பையை மனதில் வைத்து இந்திய அணியின் மிடில் ஆர்டர் சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில் தினேஷ் கார்த்திக்கிற்கும் அணியில் இடமளிக்கப்பட்டது. தினேஷ் கார்த்திக், அவருக்கு கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி நன்றாக ஆடினார். பெரிய இன்னிங்ஸை ஆட அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் கிடைத்த வாய்ப்புகளில் நன்றாகவே ஆடினார். குறிப்பாக போட்டியை வெற்றிகரமாக முடித்துவைக்கும் ஃபினிஷர் வேலையை நன்றாக செய்தார். எனினும் அவரை விட ரிஷப் பண்ட்டிற்கு அணி நிர்வாகமும் தேர்வுக்குழுவும் முக்கியத்துவம் அளித்தன. தற்போது ரிஷப் பண்ட் படுமோசமாக சொதப்பியதால் தினேஷ் கார்த்திற்கான வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. அவரை உலக கோப்பை அணியில் எடுப்பது கிட்டத்தட்ட உறுதியான விஷயம். 
 

click me!