உலக கோப்பை 2019: தொடரின் நாயகன் அவருதான்.. விராட் கோலிலாம் இல்ல.. அடித்து சொல்லும் முன்னாள் ஜாம்பவான்

By karthikeyan VFirst Published Jun 5, 2019, 11:00 AM IST
Highlights

இந்த உலக கோப்பை தொடரில் யார் தொடர் நாயகனாக இருப்பார் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவான் ஷேன் வார்னே கருத்து தெரிவித்துள்ளார். 

உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. உலக கோப்பை தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை இன்று எதிர்கொள்கிறது. இந்த உலக கோப்பையை இந்தியா அல்லது இங்கிலாந்துதான் வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து ஆடுகளங்கள் பேட்டிங்கிற்கு சாதகமாக உள்ளதால் ஹை ஸ்கோரிங் தொடராக அமைய உள்ளது. 

இந்த உலக கோப்பையில் ஒவ்வொரு அணியும் ஒவ்வொரு அணியுடனும் மோதுகிறது. அதனால் இதன் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எகிறியிருப்பதோடு இந்த உலக கோப்பையில் நிறைய வீரர்களின் மீதும் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. விராட் கோலி, ரோஹித் சர்மா, ஜோஸ் பட்லர், டேவிட் வார்னர், தோனி, வில்லியம்சன், ஸ்மித், பேர்ஸ்டோ, டி காக், ஜோ ரூட், ஷாய் ஹோப், பாபர் அசாம் என பல சிறந்த வீரர்கள் ஆடுகின்றனர். பவுலர்களை பொறுத்தமட்டில் பும்ரா, ஆர்ச்சர், ரஷீத் கான், ரபாடா ஆகியோரின் மீது அதிக கவனம் உள்ளது. 

நிறைய சிறந்த வீரர்கள் ஆடினாலும் பெரும்பாலான முன்னாள் வீரர்கள், விராட் கோலி, பட்லர், பேர்ஸ்டோ, வார்னர் ஆகிய பேட்ஸ்மேன்கள் தான் இந்த தொடரில் ஜொலிக்கப்போவதாக எதிர்பார்க்கின்றனர். இவர்களில் ஒருவரின் பெயரைத்தான் குறிப்பிடுகின்றனர். பவுலர்களை பொறுத்தமட்டில் பும்ரா, ரபாடா, ஆர்ச்சர், ரஷீத் கான் ஆகியோர் மீது எதிர்பார்ப்பு நிலவுகிறது. 

இந்நிலையில், இந்த உலக கோப்பை தொடரில் யார் தொடர் நாயகனாக இருப்பார் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் ஜாம்பவான் ஷேன் வார்னே கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள ஷேன் வார்னே, டேவிட் வார்னர் தான் தொடர் நாயகனாக இருப்பார். வார்னர் அவரது திறமையை இன்னும் நிரூபித்து காட்ட வேண்டியிருக்கிறது. அவர் அபாரமாக ஆடிவருகிறார். அவர் தான் தொடர் நாயகன் என்று வார்னே தெரிவித்துள்ளார். மேலும் பாட் கம்மின்ஸ், ஆண்ட்ரே ரசல், பட்லர் ஆகிய மூவரும் இந்த உலக கோப்பையில் ஜொலிப்பார்கள் என வார்னே தெரிவித்துள்ளார். எதிர்பார்ப்பு அதிகமுள்ள விராட் கோலி மற்றும் பும்ராவின் பெயர்களை எல்லாம் வார்னே குறிப்பிடவில்லை. 

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டு தடை முடிந்து, மீண்டும் ஆஸ்திரேலிய அணிக்காக ஆடிய முதல் போட்டியிலேயே(உலக கோப்பை தொடரின் போட்டி) ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிராக அபாரமாக ஆடி 89 ரன்களை குவித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் ஆஸ்திரேலிய அணியை வெற்றி பெற செய்தார் வார்னர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

click me!