டெஸ்ட் கிரிக்கெட்டில் செம ரெக்கார்டு.. கபில் தேவ், ஸ்ரீநாத் ஆகிய ஜாம்பவான்களுடன் இணைந்த ஷமி

By karthikeyan VFirst Published Oct 6, 2019, 4:09 PM IST
Highlights

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்த ஷமி, கபில் தேவ், ஸ்ரீநாத் ஆகிய சிறந்த ஃபாஸ்ட் பவுலர்களின் பட்டியலில் இணைந்துள்ளார். 

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையே விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 502 ரன்களையும், தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 431 ரன்களையும் அடித்தன. 

71 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 323 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து 395 ரன்கள் என்ற இலக்குடன் நான்காம் நாளான நேற்றைய ஆட்டத்தின் இறுதியில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர் எல்கரை ஜடேஜா நேற்றே வீழ்த்திவிட்டார். இதையடுத்து ஒரு விக்கெட் இழப்பிற்கு 11 ரன்கள் எடுத்திருந்த நிலையில், நான்காம் நாள் ஆட்டம் முடிந்தது.

கடைசி நாளான இன்றைய ஆட்டம் தொடங்கிய இரண்டாவது ஓவரிலேயே டி ப்ருய்னை அஷ்வின் வீழ்த்தினார். ஆடுகளம் ஸ்பின்னிற்கு சாதகமாக திகழும் நிலையில், முதல் இன்னிங்ஸில் சோபிக்காத ஷமி, இரண்டாவது இன்னிங்ஸில் அசத்தலாக வீசினார். பவுமா, டுப்ளெசிஸ், டி காக் ஆகிய மூவரையும் சோபிக்கவிடாமல் கிளீன் போல்டாக்கி அனுப்பினார். 

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து ஆடிய மார்க்ரமை, ஜடேஜா தனது பவுலிங்கில் தானே கேட்ச் பிடித்து வெளியேற்றினார். அதே ஓவரில் ஃபிளாண்டர் மற்றும் கேசவ் மஹாராஜ் ஆகிய இருவரையும் வீழ்த்தினார். ஒரே ஓவரில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் ஜடேஜா. 

அதன்பின்னர் முத்துசாமியும் டேன் பீட்டும் இணைந்து பெரிய பார்ட்னர்ஷிப் அமைத்தனர். முத்துசாமியும் பீட்டும் இணைந்து 9வது விக்கெட்டுக்கு 90 ரன்களை சேர்த்தனர். இந்திய அணியின் பவுலிங்கை சிறப்பாக சமாளித்து ஆடிய பீட் அரைசதம் அடித்தார். முத்துசாமியும் நன்றாக ஆடினார். இருவரும் இணைந்து 32 ஓவர்கள் பேட்டிங் ஆடி இந்திய அணியை மிரட்டினர். ஒருவழியாக அரைசதம் அடித்த பீட்டை ஷமி 56 ரன்களில் வீழ்த்தி பிரேக் கொடுத்தார். இதையடுத்து களத்திற்கு வந்த ரபாடாவையும் ஷமியே வீழ்த்தினார். 191 ரன்களுக்கு தென்னாப்பிரிக்க அணி ஆல் அவுட்டானதை அடுத்து 203 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இரண்டாவது இன்னிங்ஸில் ஷமி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 

முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட் கூட வீழ்த்தாத ஷமி, இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார். இதன்மூலம் இந்தியாவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய ஐந்தாவது ஃபாஸ்ட் பவுலர் என்ற என்ற பெருமையை ஷமி பெற்றார். 

இதற்கு முன்னதாக கர்சன் காவ்ரி, கபில் தேவ், மதன் லால், ஸ்ரீநாத் ஆகிய நான்கு ஃபாஸ்ட் பவுலர்களும் இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். தற்போது அவர்களுடன் ஷமியும் இணைந்துள்ளார். கர்சன் 1977ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக மும்பையில் நடந்த போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கபில் தேவ் மற்றும் மதன் லால் ஆகிய இருவரும் 1981ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக மும்பையில் நடந்த போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 1996ம் ஆண்டு அகமதாபாத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ஸ்ரீநாத் இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அந்த பட்டியலில் ஷமியும் இணைந்துள்ளார். 
 

click me!