ஆமாங்கய்யா நான் பண்ணது தப்புதான்.. ஒப்புக்கொண்ட ஷகிப் அல் ஹசனுக்கு 2 ஆண்டு தடை

By karthikeyan VFirst Published Oct 30, 2019, 9:50 AM IST
Highlights

சூதாட்டத் தரகர் தன்னை தொடர்புகொண்டதை ஐசிசி ஊழல் தடுப்பு அமைப்புக்கு தெரியப்படுத்தாத குற்றத்துக்காக ஷகிப் அல் ஹசனுக்கு 2 ஆண்டுகள் தடை விதித்துள்ளது ஐசிசி. 
 

இரண்டு ஆண்டுகளுக்கு முன், ஷகிப் அல் ஹசனை சூதாட்டத்தில் ஈடுபடும்படி, தரகர் ஒருவர் அணுகியுள்ளார். ஆனால் ஷகிப் அல் ஹசன் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டார். சூதாட்டத்தில் ஈடுபட மறுத்துவிட்டாலும், அதை அணி நிர்வாகத்திடமும், ஐசிசி ஊழல் தடுப்பு அமைப்பிடமும் தெரியப்படுத்தாமல் விட்டுவிட்டார் ஷகிப். 

ஐசிசி ஊழல் தடுப்பு விதிமுறைப்படி, இந்த தகவலை தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் ஷகிப் அதை செய்ய தவறிவிட்டார். இதுபோன்ற தரகர்களின் போன் கால்களை எதார்த்தமாக ஆய்வு செய்த ஐசிசி, அவர்களில் ஒரு குறிப்பிட்ட தரகர் ஷகிப்பை தொடர்புகொண்டதை கண்டறிந்தது. ஷகிப் அல் ஹசன் சூதாட்டத்தில் ஈடுபட மறுப்பு தெரிவித்திருந்தாலும் அந்த விஷயத்தை தெரியப்படுத்தாதது ஐசிசி விதிப்படி தவறு. 

எனவே இதுகுறித்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார் ஷகிப். இதையடுத்து அவருக்கு 2 ஆண்டுகள் தடை விதித்துள்ளது ஐசிசி. இந்த 2 ஆண்டுகளில் முதல் ஓராண்டில் எந்தவிதமான கிரிக்கெட் போட்டியிலும் ஷகிப் அல் ஹசன் ஆடமுடியாது. இந்த ஓராண்டில் ஐசிசி ஊழல் தடுப்பு வகுப்புகளில் பங்கேற்பதோடு, மறுவாழ்வு திட்டங்களிலும் பங்கேற்க வேண்டும். இந்த ஓராண்டில் மேலும் எந்த தவறும் செய்யாமல் ஐசிசி வழிகாட்டல்களை சரியாக பின்பற்றி செயல்பட்டால், ஓராண்டில் தடை முடிய வாய்ப்புள்ளது. 

இந்தியாவிற்கு எதிரான டி20 மற்றும் டெஸ்ட் ஆகிய தொடர்களுக்குமான வங்கதேச அணிக்கு ஷகிப் அல் ஹசன் தான் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், இப்போது அவருக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால், வேறு கேப்டன்களின் தலைமையில் வங்கதேச அணி இந்திய அணியை எதிர்கொள்கிறது. வலுவான இந்திய அணியை எதிர்கொள்ளும்போது, அனுபவமான ஆல்ரவுண்டரான ஷகிப் அல் ஹசன் அணியில் இல்லாதது அந்த அணிக்கு மிகப்பெரிய இழப்பு. 
 

click me!