சர்ஃபராஸை கேப்டன்சிலியிலிருந்து நீக்குங்க.. வலுக்கும் எதிர்ப்புகள்

By karthikeyan VFirst Published Sep 21, 2019, 1:11 PM IST
Highlights

சர்ஃபராஸ் அகமது ஒருநாள் மற்றும் டி20 அணிகளை சிறப்பாக வழிநடத்த வேண்டுமென்றால், அவரை டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. பாகிஸ்தான் அணி லீக் சுற்றின் முடிவில் 11 புள்ளிகளை பெற்றும் நெட் ரன்ரேட் அடிப்படையில் நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு சென்றதால் பாகிஸ்தான் அணி வெளியேறியது. 

உலக கோப்பை தொடரின் போது பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ஃபராஸ் அகமதுவின் கேப்டன்சி மற்றும் ஃபிட்னெஸ் ஆகியவை கடும் விமர்சனத்துக்கும் கிண்டலுக்கும் ஆளானது. ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவுக்கு எதிரான அடுத்தடுத்த தோல்விகளுக்கு பிறகு மீண்டெழுந்து தொடர் வெற்றிகளை பெற்றபோதிலும் பாகிஸ்தான் அணியால் அரையிறுதிக்கு முன்னேற முடியவில்லை. 

மூன்றுவிதமான அணிகளுக்கும் கேப்டனாக இருப்பது சர்ஃபராஸ் அகமதுவிற்கு அதிக அழுத்தத்தை கொடுப்பதால், அவரால் ஒரு பேட்ஸ்மேனாகவும் சிறப்பாக செயல்படமுடியாமல் போகிறது. கேப்டன்சி அழுத்தம், அவரது ஆட்டத்தையும் பாதிக்கிறது என்பதால், டெஸ்ட் அணியின் கேப்டன்சி பொறுப்பிலிருந்து அவரை நீக்க வேண்டும் என்று உலக கோப்பைக்கு பின்னர் அக்தர் மற்றும் ஜாகீர் அப்பாஸ் ஆகியோர் கருத்து தெரிவித்திருந்தனர். 

பாகிஸ்தான் அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் மற்றும் தேர்வுக்குழு தலைவராக மிஸ்பா உல் ஹக் பொறுப்பேற்ற பின்னர், ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனாக சர்ஃபராஸ் அகமதுவே மீண்டும் தொடர்வார் என அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், ஏற்கனவே தான் கூறியிருந்த கருத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார் ஜாகீர் அப்பாஸ். 

இதுகுறித்து பேசியுள்ள ஜாகீர் அப்பாஸ், மூன்றுவிதமான அணிக்கும் கேப்டனாக செயல்படும் அந்த நெருக்கடியை சர்ஃபராஸ் அகமதுவால் சமாளிக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை.ம் எனவே ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கு மட்டும் சர்ஃபராஸ் அகமது கேப்டனாக செயல்படுவது நல்லது. டெஸ்ட் போட்டிதான் கிரிக்கெட்டின் கஷ்டமான ஃபார்மட். டெஸ்ட் போட்டியில் கேப்டன்சி செய்வது அவ்வளவு எளிதல்ல. எனவே சர்ஃபராஸ் அகமது டெஸ்ட் கேப்டன்சியிலிருந்து ஒதுங்கிவிட்டு, ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டனாக மட்டும் செயல்படுவது நல்லது என்று ஜாகீர் அப்பாஸ் தெரிவித்துள்ளார். 

2017ம் ஆண்டிலிருந்து மூன்றுவிதமான அணிகளுக்கும் சர்ஃபராஸ் அகமது கேப்டனாக செயல்பட்டுவருகிறார். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அவரது தலைமையில் பாகிஸ்தான் அணி சிறப்பாக ஆடினாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் படுமோசமாக சொதப்பி தரவரிசையில் 7ம் வரிசையில் உள்ளது. 

இந்நிலையில், முன்னாள் கேப்டன் ஷாஹித் அஃப்ரிடியும் சர்ஃபராஸை டெஸ்ட் கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பேசிய அஃப்ரிடி, சர்ஃபராஸ் அகமது டெஸ்ட் கேப்டனாக இல்லையென்றால், ஒருநாள் மற்றும் டி20 அணிகளை வழிநடத்துவது அவருக்கு எளிதாக இருக்கும். மூன்று அணிகளுக்கும் கேப்டனாக செயல்படுவது சர்ஃபராஸ் அகமது மீதான அழுத்தத்தையும் சுமையையும் அதிகரிக்கும் என்று அஃப்ரிடி கருத்து தெரிவித்துள்ளார். 
 

click me!