டி20 உலக கோப்பை: கடைசி நேர காயத்தால் கோப்பையை இழந்த பாகிஸ்தான்! ஆட்டத்தை தலைகீழாக திருப்பிய துரதிர்ஷ்ட சம்பவம்

By karthikeyan VFirst Published Nov 13, 2022, 7:36 PM IST
Highlights

டி20 உலக கோப்பை ஃபைனலில் பாகிஸ்தான் அடித்தது 137 ரன்களாக இருந்தாலும், பாகிஸ்தான் ஃபாஸ்ட் பவுலர்கள் அபாரமாக பந்துவீசி இங்கிலாந்துக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர். தொடர்ச்சியான மிரட்டல் ஓவர்களால் கிட்டத்தட்ட வெற்றிக்கே வாய்ப்பிருக்கிறது என்றளவிற்கு பந்துவீசினர். ஆனால் ஷாஹீன் அஃப்ரிடி அவரது கடைசி 2 ஓவர்களை வீச முடியாமல் காயமடைந்தது ஆட்டத்தை தலைகீழாக திருப்பி, போட்டியின் முடிவை இங்கிலாந்துக்கு முழுக்க முழுக்க சாதகமாக்கியது.
 

டி20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் வெற்றிகரமாக நடந்துமுடிந்தது. இன்று மெல்பர்னில் நடந்த ஃபைனலில் பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி 2வது முறையாக டி20 உலக கோப்பையை வென்றது.

மெல்பர்னில் நடந்த ஃபைனலில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி 20  ஓவரில் 137 ரன்கள் மட்டுமே அடித்தது. இந்த தொடர் முழுக்க அபாரமாக பந்துவீசிய இங்கிலாந்தின் சாம் கரன், இந்த போட்டியிலும் அபாரமாக பந்துவீசி 4 ஓவரில் வெறும் 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து, முகமது ரிஸ்வான்(15), ஷான் மசூத் (38) மற்றும் முகமது நவாஸ்(5) ஆகிய 3 முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தினார் சாம் கரன்.

டி20 உலக கோப்பை: தொடர் நாயகன் விருதை வென்ற சாம் கரன்! 8 வீரர்களை ஓரங்கட்டி சாம் கரன் விருதை வெல்ல இதுவே காரணம்

138 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணியில் அலெக்ஸ் ஹேல்ஸ்(1), ஜோஸ் பட்லர் (26), ஹாரி ப்ரூக் (20) ஆகியோர் ஏமாற்றமளித்தாலும், பென் ஸ்டோக்ஸ் நிலைத்து நின்று நிதானத்தை கையாண்டு பொறுப்புடன் பேட்டிங் ஆடி அரைசதம் அடித்து கடைசிவரை களத்தில் நின்று போட்டியை ஜெயித்து கொடுத்தார். 19வது ஓவரில் இலக்கை அடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 2வது முறையாக டி20 உலக கோப்பையை வென்றது. இதற்கு முன் 2010ல் பால் காலிங்வுட் கேப்டன்சியில் இங்கிலாந்து அணி டி20 உலக கோப்பையை வென்றது.

இங்கிலாந்து அணி இலக்கை எளிதாக விரட்டிவிடவில்லை. மற்ற வீரர்கள் எல்லாம் ஆட்டமிழக்க, பென் ஸ்டோக்ஸ் மட்டும் நிலைத்து நின்று ஆடினார். ஆனால் அவரும் ஹாரிஸ் ராஃப், நசீம் ஷாவின் வேகத்திற்கு தாக்குப்பிடிக்க முடியாமல் தான் ஆடினார். ஆனால் இலக்கு குறைவானது என்பதால் ஆட்டத்தை கடைசி வரை எடுத்துச்சென்றால் வெற்றி பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் பாகிஸ்தான் ஃபாஸ்ட் பவுலர்களுக்கு விக்கெட்டை மட்டும் விட்டுக்கொடுக்காமல் தட்டுத்தடுமாறி ஆட்டத்தை எடுத்துச்சென்றார். 

13வது ஓவரில் ஹாரி ப்ரூக்கின் கேட்ச்சை பிடிக்கும்போது ஷாஹீன் அஃப்ரிடியின் வலது முழங்காலில் காயம் ஏற்பட்டது. அதனால் களத்தைவிட்டு வெளியேறினார். அவர் களத்தை விட்டு வெளியேறும்போது, எஞ்சிய 7 ஓவர்களில் 2 ஓவர்கள் அவருக்கு மீதமிருந்தது. லேசான காயம் தான் என்பதால் அவர் சிறிய சிகிச்சைக்கு பிறகு திரும்பி வந்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

அவர் களத்தைவிட்டு வெளியே சென்ற பின், 14 மற்றும் 15வது ஓவர்களை நசீம் ஷா மற்றும் ஹாரிஸ் ராஃப் ஆகிய இருவரும் அபாரமாக வீசி நம்பிக்கையளித்தனர். 14வது ஓவரில் நசீம் ஷா வெறும் 2 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தார். 15வது ஓவரில் ஹாரிஸ் ராஃப் 8 ரன் கொடுத்தார். அந்த 2 ஓவரில் மொத்தமாகவே இங்கிலாந்துக்கு 10 ரன்கள் மட்டுமே கிடைக்க, 15 ஓவரில் இங்கிலாந்து அணி 97 ரன்கள் அடித்திருந்தது. கடைசி 5 ஓவரில் 41 ரன்கள் இங்கிலாந்துக்கு தேவைப்பட்டது. கடைசி 5 ஓவரில் ஷாஹீன் அஃப்ரிடிக்கு 2 ஓவர்கள் மீதமிருந்தது. அவர் அந்த 2 ஓவரை வீசியிருந்தால் ஆட்டமே மாறியிருக்கும். ஏனெனில் பாகிஸ்தான் ஃபாஸ்ட் பவுலர்கள் அந்தளவிற்கு நெருக்கடியை உருவாக்கியிருந்தனர். ஆனால் 16வது ஓவரை வீசவந்த ஷாஹீன் அஃப்ரிடி, முதல் பந்தை மட்டும் வீசிவிட்டு வலியால் மீண்டும் பெவிலியன் திரும்பினார். அதனால் எஞ்சிய 5 பந்துகளை வேறு பவுலர் வீச நேர்ந்தது. அந்த 5 பந்துகளை இஃப்டிகார் அகமது வீச, அந்த 5 பந்தில் பென் ஸ்டோக்ஸ் ஒரு பவுண்டரியும் ஒரு சிக்ஸரும் அடிக்க, ஆட்டம் பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் இருந்து இங்கிலாந்துக்கு கைமாறியது.

IPL 2023:அவர் எங்க ஆளு; எங்களுக்கே கொடுத்துருங்க! குஜராத் டைட்டன்ஸிடமிருந்து 2 வீரர்களை கேட்டு வாங்கிய கேகேஆர்

முகமது வாசிம் வீசிய அடுத்த ஓவரில் மொயின் அலி 3 பவுண்டரிகள் அடிக்க, இங்கிலாந்துக்கு இலக்கை விரட்டுவது எளிதானது. கடைசியில் 19வது ஓவரிலேயே ஆட்டத்தை முடித்து இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. ஒருவேளை ஷாஹீன் அஃப்ரிடி அந்த 2 ஓவர்களை வீசியிருந்தால் பாகிஸ்தான் ஃபாஸ்ட் பவுலர்கள் நெருக்கடியை அதிகப்படுத்தி வெற்றியை சாத்தியமாக்கியிருக்கக்கூடும். பென் ஸ்டோக்ஸ் நின்றதாலும், இங்கிலாந்து அணியின் பேட்டிங் டெப்த் வலுவாக இருந்ததாலும், இங்கிலாந்து அணி கடைசி வரை ஆட்டத்தை எடுத்துச்சென்றால் இலக்கு எளிதானது என்பதால் அடித்திருக்கும். ஆனால் பாகிஸ்தான் அணிக்கும் ஒரு வாய்ப்பு இருந்திருக்கும். ஷாஹீன் அஃப்ரிடி பந்துவீசமுடியாததால் அந்த ஒரு வாய்ப்பு பறிபோனது.
 

click me!