சின்ன பசங்களுக்கு நீங்கலாம் ஹீரோ மாதிரி.. கொஞ்சம் பொறுப்புணர்வோடு நடந்துக்கங்க.. சேவாக் அறிவுரை

By karthikeyan VFirst Published Jan 13, 2020, 5:11 PM IST
Highlights

கிரிக்கெட் வீரர்களுக்கு இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் வீரேந்திர சேவாக், ஒரு வேண்டுகோளை அறிவுரையாக விடுத்துள்ளார். 

கிரிக்கெட் உட்பட அனைத்து விளையாட்டுகளிலும் எதிரணியில் அல்லது எதிர்முனையில் ஆடும் வீரர்களை சீண்டி வம்பிழுத்து அவர்களை மனதளவில் வீழ்த்த முனைவது இயல்புதான்.

கிரிக்கெட்டில் முன்பெல்லாம் ஆஸ்திரேலிய வீரர்கள் தான் இதுபோன்ற ஸ்லெட்ஜிங்கில் ஈடுபடுவதில் வல்லவர்களாக திகழ்ந்தார்கள். ஆனால் இப்போதெல்லாம் அனைத்து அணி வீரர்களுமே படுபயங்கரமாக ஸ்லெட்ஜிங் செய்கின்றனர். 

Also Read - கோலி லெவலே வேற.. அவரோடலாம் ஸ்மித்தை ஒப்பிடவே முடியாது.. கம்பீர் தடாலடி

ஸ்லெட்ஜிங் செய்வது தவறல்ல. ஆனால் அது லிமிட்டாக இருக்க வேண்டும். சில நேரங்களில் சில வீரர்கள், வெறுப்புணர்வை உமிழ நினைப்பதால், அது கெட்ட வார்த்தைகளாகவும் கேட்பதற்கு அருவருத்தக்க வார்த்தைகளாகவும், அவர்களது வாயிலிருந்து வந்து விழுகின்றது. அதுபோன்ற வெறுப்புணர்வை கக்கும் விதமான அசிங்கமான வார்த்தைகளை வீரர்கள் தவிர்க்க வேண்டும் என்று சேவாக் வலியுறுத்தியுள்ளார். 

தென்னாப்பிரிக்கா - இங்கிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், கடைசி நாளில் தோல்வியை தவிர்த்து போட்டியை டிரா செய்யும் முனைப்பில் தென்னாப்பிரிக்க வீரர் பிளாண்டர் ஆடிக்கொண்டிருந்தபோது, ஃபீல்டர் விட்ட த்ரோவை பிடிக்க இடைஞ்சலாக இருந்ததால், பிளாண்டரை கெட்ட வார்த்தையில் திட்டினார் இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர். அது, அப்படியே ஸ்டம்ப் மைக்கில் கேட்டதால், பட்லர் விதிமீறி நடந்தது உறுதியானது. அதனால் பட்லருக்கு போட்டி ஊதியத்தில் 15 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டது. 

இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து பேசிய சேவாக், அனைத்து கிரிக்கெட் வீரர்களுக்கும் ஒரு வேண்டுகோளையும் அறிவுரையாக விடுத்துள்ளார். இதுகுறித்து பேசிய சேவாக், களத்தில் அசிங்கமான கெட்ட வார்த்தைகளை பேசுவது ஆரோக்கியமான விஷயமல்ல. அவுட் செய்த பிறகு, அவர் என்னவோ சொல்கிறாரே.. என்ன சொல்கிறார்? என்று எனது குழந்தைகள் என்னிடம் கேட்கின்றனர். அப்போது என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் டிவி ஒலியை குறைத்துவிடுவேன். குழந்தையின் கண்ணை நேருக்கு நேர் பார்ப்பதையே தவிர்த்துவிடுவேன். 

Also Read - ஒட்டுமொத்த உலக கோப்பையிலயே இந்திய அணி எடுத்த மோசமான முடிவு இதுதான்.. அப்ப மிஸ் பண்ணதை இப்ப பார்க்க ஆவலா இருக்கேன்.. கம்பீர் ஆர்வம்

கிரிக்கெட்டை பார்க்கும் குழந்தைகளுக்கும் சிறுவர்களுக்கும் வீரர்கள், ஹீரோக்கள். அவர்கள் வீரர்களை ஹீரோக்களாக பார்க்கின்றனர். ஸ்லெட்ஜிங் செய்யலாம். அது டெஸ்ட் கிரிக்கெட்டை சுவாரஸ்யமாக்கும். ஆனால் கெட்ட வார்த்தைகள் பேசுவதை தவிர்த்துவிடுங்கள். குழந்தைகளும் சிறுவர்களும் உங்களை ஹீரோக்களாக பார்க்கின்றனர் என்பதை உணர்ந்து பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று சேவாக் வேண்டுகோள் விடுத்துள்ளார். 
 

click me!