முதல் முறையாக ரஞ்சி கோப்பையை வென்று வரலாறு படைத்த சவுராஷ்டிரா

By karthikeyan VFirst Published Mar 13, 2020, 4:02 PM IST
Highlights

முதல் முறையாக ரஞ்சி தொடரை வென்று சாதனை படைத்துள்ளது சவுராஷ்டிரா அணி. 
 

சவுராஷ்டிரா அணியில் சிறந்த வீரர்கள் பலர் இருந்தும் கூட, அந்த அணி ஒருமுறை கூட ரஞ்சி கோப்பையை வெல்லாமல் இருந்தது. 2012-13, 2015-16, 2018-2019 ஆகிய மூன்று ரஞ்சி தொடரிலும் இறுதி போட்டி வரை சென்றும், அந்த அணியால் கோப்பையை வெல்ல முடியாமல் போனது. 

இந்நிலையில், இந்த முறை கோப்பையை வெல்ல வேண்டும் என்ற தீவிரத்தில் அந்த அணி, தொடர் முழுவதும் வெறித்தனமாக ஆடியது. குறிப்பாக அந்த அணியின் கேப்டன் ஜெய்தேவ் உனாத்கத் அருமையாக பந்துவீசி இந்த தொடரில் மொத்தமாக 67 விக்கெட்டுகளை வீழ்த்தி சவுராஷ்டிரா கோப்பையை வெல்ல காரணமாக திகழ்ந்தார். 

இறுதி போட்டியில் பெங்கால் அணியை எதிர்கொண்ட சவுராஷ்டிரா அணி, முதலில் பேட்டிங் ஆடியது. ரஞ்சி இறுதி போட்டி டிராவில் முடிந்தால், முதல் இன்னிங்ஸில் அதிக ரன்கள் அடித்த அணிக்குத்தான் கோப்பை வழங்கப்படும். எனவே முதல் இன்னிங்ஸில் அதிகமான ரன்னை அடிப்பதை மட்டுமே குறிக்கோளாகக்கொண்டு ஆடியது சவுராஷ்டிரா அணி. 

சவுராஷ்டிரா அணி வீரர்கள் பரோட், விஷ்வராஜ் ஜடேஜா, புஜாரா ஆகிய மூவரும் அரைசதம் அடித்தனர். அர்ப்பித் வசவாடா சதமடித்தார். விஷ்வராஜ் ஜடேஜா மட்டுமே ஓரளவிற்கு வேகமாக ஆடி ஸ்கோர் செய்தார். புஜாரா 237 பந்துகளில் வெறும் 66 ரன்கள் அடித்தார். வசவாடா, 287 பந்தில் 106 ரன்கள் அடித்தார். மொத்தமாக சவுராஷ்டிரா அணி 172 ஓவர்கள் பேட்டிங் ஆடி 425 ரன்கள் அடித்தது. 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய பெங்கால் அணி, சவுராஷ்டிரா அணிக்கு அந்த அணியின் பாணியிலேயே பதிலடி கொடுத்தது. நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபிக்கும் விதமாக பெங்கால் அணி பேட்டிங் ஆடியது. தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களிலும் மனோஜ் திவாரி 35 ரன்களிலும் ஆட்டமிழக்க, பெங்கால் அணி, 124 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. ஆனால் அதன்பின்னர் சுதிப் சட்டர்ஜியும் ரிதிமான் சஹாவும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடினர். மூன்றாவது விக்கெட்டுக்கு சஹாவும் சட்டர்ஜியும் இணைந்து 101 ரன்களை சேர்த்தனர். 

சிறப்பாக ஆடிய இருவருமே அரைசதம் அடித்தனர். சட்டர்ஜி 241 பந்தில் 81 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, அவரை தொடர்ந்து சிறிது நேரத்திலேயே 64 ரன்களுக்கு சஹாவும் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் அனுஸ்துப் மஜூம்தர் பொறுப்பை தனது தோள்களில் சுமந்து சிறப்பாக ஆடினர். நான்காம் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 354 ரன்கள் அடித்திருந்தது. 

பெங்கால் அணியின் கையில் 4 விக்கெட்டுகள் இருந்த நிலையில், கோப்பையை வெல்ல அந்த அணிக்கு வெறும் 72 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. ஆனால் சவுராஷ்டிரா கேப்டன் ஜெய்தேவ் உனாத்கத்தின் அருமையான பவுலிங்கின் விளைவாக, 381 ரன்களுக்கே பெங்காலை சுருட்டியது சவுராஷ்டிரா. கடைசி நாளான இன்றைய ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் மஜூம்தரை 63 ரன்களுக்கு வீழ்த்திய உனாத்கத், அதே ஓவரின் கடைசி பந்தில் ஆகாஷ் தீப்பை ரன் அவுட் செய்தார். அர்னாப் நந்தி ஒருமுனையில் நிலைத்து நின்று 40 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் நிற்க, முகேஷ் குமார் மற்றும் இஷான் போரெல் ஆட்டமிழந்தனர். கடைசி விக்கெட்டான இஷான் போரெலையும் உனாத்கத் தான் வீழ்த்தினார். 

இதையடுத்து பெங்கால் அணி 381 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. எனவே முதல் இன்னிங்ஸ் முடிவில் 44 ரன்கள் முன்னிலை பெற்ற சவுராஷ்டிரா அணி தான் கோப்பையை வெல்லப்போகிறது என்பது உறுதியான பின்னரும், சவுராஷ்டிரா அணி, கடைசி நாளான இன்றைய ஆட்டத்தில், போட்டியை முடிக்க வேண்டிய கடமைக்காக, இரண்டாவது இன்னிங்ஸில் 34 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 105 ரன்கள் அடித்திருந்த நிலையில், போட்டி முடிக்கப்பட்டது. 

Also Read - கொரோனா எதிரொலி.. ஐபிஎல்லை ஒத்திவைத்தது பிசிசிஐ

முதல் இன்னிங்ஸில் 44 ரன்கள் முன்னிலை பெற்ற சவுராஷ்டிரா அணி, முதல் முறையாக ரஞ்சி கோப்பையை வென்று உனாத்கத் தலைமையில் சாதனை படைத்தது. 
 

click me!