பாகிஸ்தான் அணியின் புதிய கேப்டனின் பெயரை அறிவித்தார் தேர்வுக்குழு தலைவர் மிஸ்பா உல் ஹக்

By karthikeyan VFirst Published Sep 14, 2019, 10:32 AM IST
Highlights

பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஒருவர் ஃபிட்னெஸே இல்லாமல் தொப்பையுடன் இருப்பதை இப்போதுதான் முதன்முறையாக பார்க்கிறேன் என்றும், இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்ததை அடுத்து, மூளையில்லா முட்டாள் கேப்டன் என்றும் சர்ஃபராஸ் அகமதுவை அக்தர் கடுமையாக விமர்சித்திருந்தார். 

உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. பாகிஸ்தான் அணி லீக் சுற்றின் முடிவில் 11 புள்ளிகளை பெற்றும் நெட் ரன்ரேட் அடிப்படையில் நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு சென்றதால் பாகிஸ்தான் அணி வெளியேறியது. 

உலக கோப்பை தொடரின் போது பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ஃபராஸ் அகமதுவின் கேப்டன்சி மற்றும் ஃபிட்னெஸ் ஆகியவை கடும் விமர்சனத்துக்கும் கிண்டலுக்கும் ஆளானது. ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவுக்கு எதிரான அடுத்தடுத்த தோல்விகளுக்கு பிறகு மீண்டெழுந்து தொடர் வெற்றிகளை பெற்றபோதிலும் பாகிஸ்தான் அணியால் அரையிறுதிக்கு முன்னேற முடியவில்லை. 

உலக கோப்பை நடந்துகொண்டிருந்தபோதும், உலக கோப்பையில் தோற்று வெளியேறிய பின்னரும் பாகிஸ்தான் கேப்டன் சர்ஃபராஸ் அகமது கடுமையாக விமர்சிக்கப்பட்டார். 

பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஒருவர் ஃபிட்னெஸே இல்லாமல் தொப்பையுடன் இருப்பதை இப்போதுதான் முதன்முறையாக பார்க்கிறேன் என்றும், இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்ததை அடுத்து, மூளையில்லா முட்டாள் கேப்டன் என்றும் சர்ஃபராஸ் அகமதுவை அக்தர் கடுமையாக விமர்சித்திருந்தார். அதன்பின்னர் அண்மையில் கூட, ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கு சர்ஃபராஸை நீக்கிவிட்டு ஹாரிஸ் சொஹைலை கேப்டனாக்க வேண்டும் என்று அக்தர் கருத்து தெரிவித்திருந்தார். 

டெஸ்ட் அல்லது ஒருநாள்-டி20 அணிகளில் ஏதாவது ஒன்றில் சர்ஃபராஸ் அகமது கேப்டன் பொறுப்பை துறந்துவிட்டு தனது ஆட்டத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று முன்னாள் வீரர் ஜாகீர் அப்பாஸ் வலியுறுத்தியிருந்தார். ஏதாவது ஒரு ஃபார்மட்டில் கேப்டன்சியிலிருந்து விலகுவதுதான் சர்ஃபராஸ் அகமது மீதான நெருக்கடியை குறைக்கும் எனவும் ஜாகீர் அப்பாஸ் கருத்து தெரிவித்திருந்தார். 

உலக கோப்பையுடன் பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் குழுவின் பதவிக்காலம் முடிந்த நிலையில், அவர்களது பதவிக்காலத்தை நீட்டிக்க விரும்பாத பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், அவர்களை நீக்கியது. இதையடுத்து அணியின் புதிய தலைமை பயிற்சியாளராகவும் தேர்வுக்குழு தலைவராகவும் மிஸ்பா உல் ஹக் நியமிக்கப்பட்டார். 

இலங்கை அணி பாகிஸ்தானுக்கு சென்று ஒருநாள் மற்றும் டி20 தொடரில் ஆடவுள்ள நிலையில், பாகிஸ்தான் அணியின் ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கு சர்ஃபராஸ் அகமதுவே கேப்டனாக தொடர்வார் என தேர்வுக்குழு தலைவரும் தலைமை பயிற்சியாளருமான மிஸ்பா உல் ஹக் தெரிவித்தார். துணை கேப்டனாக, விராட் கோலியுடன் ஒப்பிடப்படும் சிறந்த பேட்ஸ்மேனான பாபர் அசாம் நியமிக்கப்பட்டுள்ளார். 

சர்ஃபராஸ் அகமது டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாக சோபிக்கவில்லை என்றாலும், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் அவரது தலைமையில் பாகிஸ்தான் அணி சிறப்பாக செயல்பட்டிருக்கிறது. 2017ல் சாம்பியன்ஸ் டிராபியை வென்றதோடு, டி20 தரவரிசையில் முதலிடத்தையும் பிடித்தது. 
 

click me!