சேவாக் மாதிரி அந்த பையன்.. இவ்வளவு சீக்கிரமா ஓரங்கட்டுறீங்க! கில்லுக்கு ஒரு நியாயம்; இவனுக்கு ஒரு நியாயமா?

By karthikeyan VFirst Published May 14, 2021, 6:05 PM IST
Highlights

இந்திய அணிக்கு வீரேந்திர சேவாக் செய்ததை பிரித்வி ஷாவால் செய்ய முடியும் என்று முன்னாள் வீரர் சரண்தீப் சிங் தெரிவித்துள்ளார்.
 

இந்திய கிரிக்கெட் எதிர்காலத்தின் சிறந்த வீரர்களில் ஒருவர் பிரித்வி ஷா. பிறவி பேட்ஸ்மேனான பிரித்வி ஷா, அவரது ஒழுக்கம் மற்றும் ஃபிட்னெஸ் ஆகிய விஷயங்களில் உள்ள பிரச்னையால் இந்திய அணியில் நிரந்தர இடம்பிடிக்க முடியாமல் திணறிவருகிறார்.

2018-19 ஆஸி சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் அணியில் அறிமுகமான பிரித்வி ஷா, அந்த தொடரில் காயத்தால் விலகிய நிலையில், அதன்பின்னர் நடந்த வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் சிறப்பாக ஆடினார். அதன்பின்னர் சரியாக ஆடாததால், மயன்க் அகர்வாலிடம் தனது ஓபனிங் ஸ்லாட்டை இழந்த பிரித்வி ஷா, கடைசியாக கடந்த ஆஸி., சுற்றுப்பயணத்தின் முதல் டெஸ்ட்டில் ஆடினார்.

ஆனால் படுமோசமான ஃபார்மினால், முதல் இன்னிங்ஸில் டக் அவுட்டானார். 2வது இன்னிங்ஸில் 4 ரன் மட்டுமே அடித்தார். அதனால் அடுத்த போட்டியில் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட பிரித்வி ஷா, விஜய் ஹசாரே தொடரில் அபாரமாக ஆடி, விஜய் ஹசாரே தொடரின் ஒரு சீசனில் அதிக ரன்களை(827 ரன்கள்) குவித்த வீரர் என்ற சாதனையை படைத்ததுடன், ஐபிஎல்லிலும் அபாரமாக ஆடினார்.

ஆனாலும் அவர் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கான அணியில் இடம்பெறவில்லை. ரோஹித் சர்மா, மயன்க் அகர்வால், ஷுப்மன் கில், கேஎல் ராகுல் ஆகிய 4 தொடக்க வீரர்கள் எடுக்கப்பட்டுள்ளனர். பிரித்வி ஷாவுக்கு இடம் கிடைக்கவில்லை.

பிரித்வி ஷா அண்மைக்காலமாக நல்ல ஃபார்மில் இருந்தபோதிலும் அணியில் எடுக்கப்படாத பிரித்வி ஷா மீண்டும் இந்திய அணியில் இடம்பெற வேண்டுமென்றால், உடல் எடையை குறைத்து ஃபிட்டாக வேண்டும் என்று அவருக்கு தேர்வாளர்கள் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில், பிரித்வி ஷா குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய முன்னாள் கிரிக்கெட் வீரர் சரண்தீப் சிங், இந்திய அணிக்கு சேவாக் என்ன செய்தாரோ, அதேமாதிரியான பங்களிப்பை செய்யக்கூடிய திறன் பெற்றவர் பிரித்வி ஷா. அவரது கெரியரின் தொடக்க காலத்திலேயே அவசரப்பட்டு அவரை ஓரங்கட்டியிருக்கக்கூடாது.  ஆஸி.,யில் சொதப்பியதற்கு பின்னர், உள்நாட்டு போட்டிகளில் அதிகமான ரன்களை குவித்த பிரித்வி ஷா, அவரது பேட்டிங் டெக்னிக்கில் இருந்த குறைபாடுகளையும் கலைந்துள்ளார். 

ஐபிஎல்லில் பிரித்வி ஷா ஆடிய விதத்தை நாம் பார்த்தோம். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சரியாக ஆடாதபோதிலும், ஷுப்மன் கில்லுக்கு அணியில் வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. ஆனால் பிரித்வி ஷா மட்டும் ஓரங்கட்டப்பட்டுள்ளார் என்று சரண்தீப் சிங் தெரிவித்துள்ளார்.

click me!