அணி நிர்வாகிகளுக்கு பயந்து மனைவியை கபோர்டில் ஒளியவைத்த கிரிக்கெட் வீரர்.. உலக கோப்பையில் நடந்த சுவாரஸ்யம்

By karthikeyan VFirst Published Jul 1, 2020, 2:37 PM IST
Highlights

1999 உலக கோப்பையில், தனது மனைவியை ஒளியவைத்த சம்பவம் குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஸ்பின்னர் சக்லைன் முஷ்டாக் மனம் திறந்து பகிர்ந்துள்ளார். 
 

1999 உலக கோப்பையில், தனது மனைவியை ஒளியவைத்த சம்பவம் குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஸ்பின்னர் சக்லைன் முஷ்டாக் மனம் திறந்து பகிர்ந்துள்ளார். 

பாகிஸ்தான் அணியின் மிகச்சிறந்த ஸ்பின்னர் சக்லைன் முஷ்டாக். தூஸ்ரா பந்தை கண்டுபிடித்தவரே சக்லைன் முஷ்டாக் தான். 1995லிருந்து 2004 வரை பாகிஸ்தான் அணிக்காக 49 டெஸ்ட் மற்றும் 169 ஒருநாள் போட்டிகளில் ஆடி முறையே 208 மற்றும் 288 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 

மிகச்சிறந்த ஸ்பின்னரான சக்லைன் முஷ்டாக், Beyond the show என்ற நிகழ்ச்சியில் ரௌனக் கபூரிடம் பேசும்போது, 1999 உலக கோப்பை குறித்த சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார். 

1999ல் இங்கிலாந்தில் நடந்தது உலக கோப்பை தொடர். அந்த உலக கோப்பையின் இறுதி போட்டி வரை சென்ற பாகிஸ்தான் அணி, ஆஸ்திரேலியாவிடம் தோற்று, கோப்பையை இழந்தது. அந்த தொடரின் இடையே பாகிஸ்தான் வீரர்களின் குடும்ப உறுப்பினர்களை, திருப்பியனுப்பும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற வீரர்கள் அனைவரும் திருப்பியனுப்பிடிவிட்ட நிலையில், தான் மட்டும் தனது மனைவியை ஒளியவைத்து காப்பாற்றியது குறித்து நினைவுகூர்ந்துள்ளார். 

அந்த சம்பவம் குறித்து பேசிய சக்லைன் முஷ்டாக், எனக்கு 1998 டிசம்பரில் திருமணம் நடந்தது. 1999 உலக கோப்பையில் நான் ஆடுகிறேன். என்னுடன் எனது மனைவியும் என்னுடன் தான் இருந்தார். பகல் முழுதும் தீவிர பயிற்சியில் ஈடுபடுவேன். மாலை நேரத்தில் மனைவியுடன் இருப்பேன். அதில் ஒரு பிரச்னையும் இல்லை; சிக்கலும் இல்லை. நன்றாகத்தான் சென்றுகொண்டிருந்தது. ஆனால் உலக கோப்பையின் தொடரின் இடையே திடீரென, குடும்ப உறுப்பினர்களை திருப்பியனுப்புமாறு சொன்னார்கள்.

அப்போதைய தலைமை பயிற்சியாளர் ரிச்சர்ட் பைபஸிடம் சென்று, எல்லாம் நன்றாகத்தானே சென்றுகொண்டிருக்கிறது. பிறகு ஏன், திடீர் மாற்றம் என்று கேட்டேன். காரணமும் அவசியமும் இல்லாமல் செய்யப்படும் மாற்றங்களை நான் விரும்பமாட்டேன். எனவே அந்த முடிவை நான் பின்பற்றப்போவதில்லை என அப்போதே முடிவெடுத்துவிட்டேன்.

எனது அணி மேலாளரும் பயிற்சியாளர்களும் அவ்வப்போது வந்து, யாரும் இருக்கிறார்களா என்று அறைகளை சோதனை செய்வார்கள். அப்படி ஒரு முறை, மேலாளர் வந்து தட்டும்போது, எனது மனைவியை கபோர்டில் ஒளியவைத்துவிட்டேன். மேலாளர் வந்து பார்த்துவிட்டு சென்றார். அவருக்கு பின்னால் பயிற்சியாளர்கள் வந்தார்கள். அப்போதும் என் மனைவி கபோர்டில் இருந்ததால், அவர்களும் மேலோட்டமாக பார்த்துவிட்டு சென்றார்கள். அந்த தொடர் முழுதும் அப்படித்தான் பாதுகாத்தேன். இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. உலக கோப்பைக்கு பின், நான் இங்கிலாந்தில் கவுண்டி ஆடியதால், நான் தங்குவதற்காக லண்டனில் ஒரு வீடு ஏற்பாடு செய்திருந்தார்கள். எனவே உலக கோப்பைக்கு பின் என் மனைவியை அந்த வீட்டில் தங்கவைத்துவிட்டு, நான் கவுண்டியில் ஆடினேன் என்று சக்லைன் முஷ்டாக் தெரிவித்துள்ளார்.
 

click me!