ரோஹித்துடன் தொடக்க வீரராக இறங்கப்போவது யார்..? ரசிகர்களுக்கு காத்திருக்கும் செம சர்ப்ரைஸ்

By karthikeyan VFirst Published Dec 3, 2019, 11:19 AM IST
Highlights

அண்மைக்காலமாகவே தவான் மிகவும் மந்தமாக பேட்டிங் ஆடிவருகிறார். அடுத்தடுத்து இளம் வீரர்கள் வரிசைகட்டி நிற்கும் நிலையில், தவானின் மந்தமான பேட்டிங் அணியில் அவரது இடத்தை சந்தேகத்திற்குரியதாக ஆக்குகிறது. 
 

வங்கதேசம், தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு எதிரான டி20 தொடர்களில் மிகவும் மந்தமாக ஆடிய தவான், சையத் முஷ்டாக் அலி தொடரிலும் அப்படித்தான் ஆடினார். ஆனாலும் அவருக்கு வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இந்திய அணியில் இடம் கிடைத்திருந்தது. 

ஆனால் சையத் முஷ்டாக் அலி தொடரில் ஆடியபோது காயமடைந்ததால், அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டு சஞ்சு சாம்சன் அணியில் இணைந்துள்ளார். வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடருக்கான அணியில் இடம்பெற்றிருந்த சஞ்சு சாம்சனுக்கு ஒரு போட்டியில் கூட ஆட வாய்ப்பு கொடுக்காமல், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரில் அவர் புறக்கணிக்கப்பட்டிருந்த நிலையில், தவான் காயத்தால் வெளியேறியதால் அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. 

தவான் இல்லாததால் ரோஹித்துடன் ராகுல் தொடக்க வீரராக இறங்குவதற்கான வாய்ப்புதான் உள்ளது. மூன்றாம் வரிசையில் கோலி, நான்காம் வரிசையில் ஷ்ரேயாஸ் ஐயர், ஐந்தாம் வரிசையில் ரிஷப் பண்ட் என அடுத்தடுத்து உறுதியான பேட்டிங் ஆர்டர்கள் உள்ளன. மனீஷ் பாண்டேவும் நல்ல ஃபார்மில் இருப்பதால் அவரையும் ஆடும் லெவனில் இருந்து புறந்தள்ள முடியாது. வாஷிங்டன் சுந்தர் சையத் முஷ்டாக் அலி தொடரில் பேட்டிங்கில் மிரட்டிவிட்டார். ஜடேஜா இருக்கிறார். 

எனவே ஆடும் லெவனில் இடம்பெறுவதற்கு வீரர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. தொடக்க வீரர் தவானுக்கு பதிலாக சஞ்சு சாம்சன் அணியில் எடுக்கப்பட்டிருக்கும் நிலையில், அவரையே டி20 போட்டிகளில் தொடக்க வீரராக இறக்கலாம் என அவரது பயிற்சியாளர் பிஜூ ஜார்ஜ் கருத்து தெரிவித்துள்ளார். 

டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்கு பிஜூ அளித்த பேட்டியில், சஞ்சு சாம்சன் முதல் போட்டியில் கண்டிப்பாக ஆடவேண்டும். தவானுக்கு பதிலாக அணியில் இணைந்திருக்கும் அவரை தொடக்க வீரராக இறக்க வேண்டும். சஞ்சு சாம்சனின் நம்பிக்கையும் ஆதிக்கம் செலுத்தி ஆடுவதும்தான் அவரது வெற்றிக்கான காரணிகள். 

அவர் ஒரு ரஞ்சி போட்டியில் ஆடியது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. மிகவும் மோசமான அந்த பிட்ச்சில், பவுலர் ஷார்ட் பந்து ஒன்றை புல் ஷாட் ஆடினார். பந்து எட்ஜானது, ஃபீல்டர் கேட்ச் பிடித்ததால் சாம்சன் ஆட்டமிழந்தார். பின்னர் இரண்டாவது இன்னிங்ஸில் அதேமாதிரி பவுலர் வீசிய ஷார்ட் பந்து ஒன்றை அபாரமாக ஆடி பவுண்டரிக்கு அனுப்பினார் சாம்சன். அந்த இன்னிங்ஸில் 70க்கு அதிகமாக ரன் அடித்தார். செய்த தவறுகளிலிருந்து விரைவாக பாடம் கற்றுக்கொண்டு, சூழலை எளிதாக உள்வாங்கிக்கொள்ளக்கூடியவர் சஞ்சு சாம்சன் என பிஜூ ஜார்ஜ் தெரிவித்துள்ளார். 
 

click me!