தடை முடிந்து வந்தவரை ஓரங்கட்டிய ஆஸ்திரேலிய அணி.. நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான அணி அறிவிப்பு

By karthikeyan VFirst Published Dec 3, 2019, 10:28 AM IST
Highlights

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற கையோடு, நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

பாகிஸ்தான் அணியின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் முடிந்த நிலையில், அடுத்ததாக நியூசிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது. 

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான போட்டிகள் என்பதால் இரு அணிகளுமே வெற்றி முனைப்பில் உள்ளன. ஆஸ்திரேலிய அணியால் பாகிஸ்தானை எளிதாக வீழ்த்தியதைப்போல நியூசிலாந்தை வீழ்த்திவிட முடியாது. கேன் வில்லியம்சன், டெய்லர், வாட்லிங், டாம் லேதம், ஹென்ரி நிகோல்ஸ் ஆகிய சிறந்த வீரர்கள் நியூசிலாந்து அணியில் உள்ளனர். ஃபாஸ்ட் பவுலிங்கிலும் இரு அணிகளும் சமபலத்துடன் திகழ்கின்றன. 

எனவே இந்த தொடர் கடும் சவாலானதாக இருக்கும். பெர்த், மெல்போர்ன், சிட்னி ஆகிய இடங்களில் போட்டிகள் நடக்கவுள்ளன. இந்த தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் இடம்பெற்ற அதே வீரர்கள் தான் நியூசிலாந்துக்கு எதிரான தொடருக்கான அணியிலும் இடம்பெற்றுள்ளனர். ஆனால் பான்கிராஃப்ட் மட்டும் இல்லை. பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தடை அனுபவித்த பான்கிராஃப்ட், தடை முடிந்து மீண்டும் அணியில் இணைந்த நிலையில், வார்னர் மற்றும் பர்ன்ஸ் தொடக்க வீரர்களாக இறங்குவதால், டாப் ஆர்டரில் அவருக்கான தேவையில்லாததால் அணியிலிருந்து புறக்கணிக்கப்பட்டுள்ளார். மூன்றாம் வரிசையில் லபுஷேன் இறங்குவதால் அதிலும் அவருக்கு இடமில்லை. எனவே பான்கிராஃப்ட் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். 

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி:

டேவிட் வார்னர், ஜோ பர்ன்ஸ், மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித், மேத்யூ வேட், டிராவிஸ் ஹெட், டிம் பெய்ன்(கேப்டன், விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், ஜோஷ் ஹேசில்வுட், மைக்கேல் நெசெர், ஜேம்ஸ் பாட்டின்சன். 
 

click me!