எல்லா பந்தையும் சிக்ஸர் அடிக்க நெனச்சா முடியுமா..? அரிய வாய்ப்பை தவறவிட்ட சஞ்சு சாம்சன்

By karthikeyan VFirst Published Jan 31, 2020, 1:21 PM IST
Highlights

நியூசிலாந்துக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் தொடக்க வீரராக இறங்க கிடைத்த அரிய வாய்ப்பை சஞ்சு சாம்சன் சரியாக பயன்படுத்தி கொள்ளாமல் நழுவவிட்டார். 
 

சஞ்சு சாம்சன் மிகத்திறமையான பேட்ஸ்மேன். கேரளாவை சேர்ந்த சஞ்சு சாம்சன், உள்நாட்டு போட்டிகளிலும் இந்தியா ஏ அணியிலும் தொடர்ச்சியாக சிறப்பாக ஆடியதை தொடர்ந்து இந்திய அணியிலும் அவருக்கு இடம் கிடைத்தது. ஆனால் வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளுக்கு எதிரான தொடர்களில் இந்திய அணியில் இடம்பெற்றிருந்தாலும் ஆடும் லெவனில் அவருக்கு வாய்ப்பே கிடைக்கவில்லை. 

ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங் என இரண்டிலுமே சொதப்பிவந்த நிலையில், சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற குரல்கள் வலுத்தன. இந்நிலையில் இலங்கைக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. அந்த போட்டியில், களமிறங்கிய முதல் பந்திலேயே சிக்ஸர் விளாசிய சாம்சன், இரண்டாவது பந்திலேயே ஆட்டமிழந்தார். 

நியூசிலாந்துக்கு எதிராக நடந்துவரும் டி20 தொடருக்கான இந்திய அணியிலும் சாம்சன் உள்ளார். ஆனால் முதல் 3 டி20 போட்டிகளில் அவருக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்திய அணி முதல் 3 போட்டிகளிலும் வென்று தொடரை வென்றுவிட்டதால், வெலிங்டனில் நடந்துவரும் நான்காவது டி20 போட்டியில், ரோஹித் சர்மாவுக்கு ஓய்வளிக்கப்பட்டு சஞ்சு சாம்சனுக்கு அணியில் வாய்ப்பளிக்கப்பட்டதோடு, தொடக்க வீரராகவும் களமிறக்கப்பட்டார். 

இந்திய அணியில் இடம்பிடிப்பதற்கு, இளம் வீரர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. திறமையான வீரர்கள் வரிசைகட்டி நிற்கின்றனர். எனவே கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி அணியில் தனக்கான இடத்தை உறுதி செய்துகொள்வதுதான் புத்திசாலித்தனம். ஆனால் மீண்டும் ஒருமுறை தனக்கு கிடைத்த அரிய வாய்ப்பை சாம்சன் வீணடித்தார். 

கேஎல் ராகுலுடன் தொடக்க வீரராக இறங்கிய சாம்சன், முதல் ஓவரில் நிதானமாக ஆடி இரண்டு சிங்கிள்களை அடித்த சஞ்சு சாம்சன், இரண்டாவது ஓவரின் முதல் பந்தில் அபாரமாக ஒரு சிக்ஸர் அடித்தார். அந்த சிக்ஸர் காண்பதற்கு கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்தது. அருமையான ஷாட் அது. 94 மீட்டர் தொலைவிற்கு சென்றது அந்த சிக்ஸர். அதற்கடுத்த பந்தில் ரன் அடிக்காத சஞ்சு சாம்சன், அடுத்த பந்தை மீண்டும் தூக்கியடித்தார். ஆனால் இந்த முறை ஷாட் சரியாக கனெக்ட் ஆகாமல், எட்ஜ் ஆனதால் இரண்டாவது ஓவரிலேயே 8 ரன்களில் வெளியேறி ஏமாற்றமளித்தார்.

சாம்சனை தொடர்ந்து விராட் கோலி மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். 
 

click me!