என் மீது தான் தவறு.. மன்னிப்பு கேட்பதில் பாரபட்சம்.. சம்மந்தப்பட்ட நபரை விட்டுட்டு காசு கொடுக்குறவங்ககிட்ட மன்னிப்பு கேட்ட சர்ச்சை சஞ்சய்

By karthikeyan VFirst Published Dec 31, 2019, 10:44 AM IST
Highlights

இந்தியா - வங்கதேசம் இடையேயான பகலிரவு டெஸ்ட் போட்டியின்போது, பிங்க் நிற பந்து குறித்த விவாதத்தின்போது, ஆணவமாக தரம்தாழ்ந்து பேசியதற்காக சஞ்சய் மஞ்சரேக்கர் மன்னிப்பு கேட்டுள்ளார். 

இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர், தற்போது கிரிக்கெட் வர்ணனையாளராக உள்ளார். வர்ணனையின்போதும், டுவிட்டரிலும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து விமர்சனங்களையும் வசைகளையும் வாங்கி குவிப்பதையே சஞ்சய் மஞ்சரேக்கர் வழக்கமாக வைத்துள்ளார்.

இந்திய அணியின் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ஜடேஜாவை துண்டு துணுக்கு வீரர் என்று மட்டம்தட்டும் விதமாக கருத்து தெரிவித்து கடும் விமர்சனங்களை எதிர்கொண்டார். அதன்பின்னர் உலக கோப்பை அரையிறுதியில் ஜடேஜாவின் பேட்டிங்கை பார்த்துவிட்டு மன்னிப்பு கேட்டார்.

அதேபோல, வங்கதேசத்துக்கு எதிராக இந்திய அணி ஆடிய முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில், சக வர்ணனையாளரான ஹர்ஷா போக்ளேவை மட்டம்தட்டும் விதமாக பேசி கடும் சர்ச்சைக்குள்ளான சஞ்சய் மஞ்சரேக்கர், அந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.

இந்தியா - வங்கதேசம் இடையேயான பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. அந்த போட்டியில், இஷாந்த் சர்மா, ஷமி, உமேஷ் யாதவ் ஆகியோரின் துல்லியமான வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் வங்கதேச வீரர்கள் தலையிலும் உடம்பிலும் பயங்கரமாக அடி வாங்கினர். அதிலும் அந்த அணி வீரர்கள், இரண்டு இன்னிங்ஸ்களிலுமே பெரும்பாலும், லைட் வெளிச்சத்தில் இரவில்தான் ஆடினார்கள்.

வங்கதேச வீரர்கள் சரியாக ஆடாமல் உடம்பில் அடி வாங்கியதை அடுத்து, பிங்க் பந்து லைட் வெளிச்சத்தில் நன்றாக தெரிகிறதா? என்பது குறித்து அனைத்து வீரர்களிடம் கண்டிப்பாக கருத்து கேட்க வேண்டும் என்று வர்ணனையின்போது ஹர்ஷா போக்ளே தெரிவித்தார். ஹர்ஷா போக்ளேவின் இந்த கருத்துக்கு சஞ்சய் மஞ்சரேக்கர் முரண்பட, அந்த விவாதம் தொடர்ந்தது. இறுதியில் மஞ்சரேக்கரின் ஆணவமான கருத்துடன் அந்த விவாதம் சர்ச்சையில் முடிந்தது. மஞ்சரேக்கரின் ஆணவ பேச்சுக்கு ரசிகர்களும் நெட்டிசன்களும் கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.

அந்த விவாதம் இதோ...

ஹர்ஷா போக்ளே: லைட் வெளிச்சத்தில் பிங்க் பந்து கண்ணுக்கு நன்றாக தெரிகிறதா என்று அனைத்து வீரர்களிடமும் கருத்து கேட்க வேண்டும். 

சஞ்சய் மஞ்சரேக்கர்: அதற்கெல்லாம் அவசியமில்லை. ஸ்லிப்பில் நிற்கும் ஃபீல்டர்கள் கேட்ச் பிடிப்பதை வைத்தே பந்து நன்றாக தெரிகிறது என்பதை தெரிந்துகொள்ள முடிகிறது. எனவே பந்து கண்ணுக்கு தெரிகிறதா என்ற கேள்வி தேவையேயில்லை. 

ஹர்ஷா போக்ளே: நான் இரு அணிகளில் உள்ள அனைத்து வீரர்களிடமும் பந்து கண்ணுக்கு தெரிகிறதா என்று கேட்கப்போகிறேன்.

சஞ்சய் மஞ்சரேக்கர்: வீரர்களிடம் நீங்கள் கேட்கலாம். ஆனால் கிரிக்கெட் ஆடிய அனுபவம் கொண்ட எங்களை போன்ற வீரர்களுக்கு களத்தில் என்ன நடக்கிறது என்ற சூழலை புரிந்துகொள்ள முடியும்.(மஞ்சரேக்கரின் தன்னடக்கமான இந்த கருத்துதான் சர்ச்சையானது)

ஹர்ஷா போக்ளே: கிரிக்கெட் ஆடிய அனுபவம் கொண்டிருந்தாலும், கற்றுக்கொள்வதில் தவறில்லை. வீரர்களிடம் இதுபோன்ற கருத்துகளை இதற்கு முன் கேட்டிருக்கவில்லையென்றால், டி20 போட்டி, பகலிரவு போட்டிகள் எல்லாம் இப்போது இருந்திருக்கவே இருந்திருக்காது. அனைத்து வீரர்களிடமும் கருத்து கேட்பதுதான் சரியானது.

மஞ்சரேக்கர்: உங்கள் கருத்தை குறித்துக்கொள்கிறேன். ஆனால் ஏற்றுக்கொள்ள மாட்டேன். 

இவ்வாறாக அந்த விவாதம் நடந்து முடிந்தது. இந்த சம்பவத்தை அடுத்து சஞ்சய் மஞ்சரேக்கர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இந்நிலையில், இது நடந்து சுமார் ஒன்றரை மாதம் ஆன நிலையில், அந்த விவகாரத்தில் தனது செயல்பாட்டிற்கு வருத்தம் தெரிவித்துள்ள சஞ்சய் மஞ்சரேக்கர், மன்னிப்பும் கேட்டுள்ளார். 

இதுகுறித்து பேசியுள்ள சஞ்சய் மஞ்சரேக்கர், அந்த குறிப்பிட்ட விவாதத்தில் நான் கட்டுப்பாட்டை இழந்து பேசியிருக்கிறேன். அதற்கு என்னுடைய வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன். அது என்னுடைய தவறுதான். தொழில்முறைக்கு எதிராக பேசியிருக்கிறேன். எனவே அந்த சம்பவத்தில் எனது செயல்பாட்டிற்காக தயாரிப்பாளர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று மஞ்சரேக்கர் தெரிவித்துள்ளார். 

ஹர்ஷா போக்ளேவிடம் மன்னிப்பு கேட்கக்கூடாது என்பதற்காக மிகவும் கவனமாக வார்த்தைகளை பயன்படுத்தியிருக்கிறார். அதாவது வர்ணனைக்கு பணம் கொடுக்கும் நிறுவனத்தின் தயாரிப்பாளர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். தொழில்முறையாக நான் பேசவில்லை என்று கூறியிருக்கிறாரே தவிர, கிரிக்கெட் எக்ஸ்பர்ட் ஹர்ஷா போக்ளேவை மட்டம்தட்டி பேசியது தவறு என்று சொல்லவில்லை. சஞ்சய் மஞ்சரேக்கர் மன்னிப்பு கேட்பதில் கூட சர்ச்சை தான்... 
 

click me!