வசைபாடியவரின் மூக்கை உடைத்த ஜடேஜா.. மனம்வருந்தி மன்னிப்பு கேட்ட மஞ்சரேக்கர்

By karthikeyan VFirst Published Jul 11, 2019, 12:48 PM IST
Highlights

அரையிறுதியில் ஜடேஜாவின் ஆட்டம் மஞ்சரேக்கரின் விமர்சனத்துக்கு பதிலடியாக அமைந்தது. ஜடேஜா 10 ஓவர் பந்துவீசி 34 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார். ஃபீல்டிங்கிலும் வழக்கம்போலவே மிரட்டிய ஜடேஜா, பேட்டிங்கும் அபாரமாக ஆடினார். 
 

ஜடேஜாவை துண்டு துணுக்கு வீரர் என்று விமர்சித்த முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர், அரையிறுதியில் ஜடேஜாவின் பேட்டிங்கை பார்த்துவிட்டு அவரிடம் மனம் வருந்தி மன்னிப்பு கேட்டுள்ளார். 

உலக கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில்  240 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணி 92 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில், அதன்பின்னர் ஜடேஜா தனி நபராக கடுமையாக போராடினார். நியூசிலாந்து வீரர்கள் சற்றும் எதிர்பார்த்திராத அளவிற்கு பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி மிரட்டினார். ஜடேஜா அதிரடியாக ஆடிக்கொண்டிருக்க, ரன்ரேட் அதிகமாக தேவைப்பட்ட நிலையிலும் தோனி மந்தமாக ஆடியதால் ஜடேஜா மீதான அழுத்தம் அதிகரித்தது. 

எனவே பெரிய ஷாட் அடித்தே தீர வேண்டிய கட்டாயத்தில் ஆடிய ஜடேஜா, 48வது ஓவரில் 77 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் இந்திய அணியின் தோல்வி உறுதியானது. இந்திய அணி 221 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்திய அணி தோற்றாலும், ஜடேஜாவின் பேட்டிங் அபாரமானது. அவ்வளவு எளிதாக யாராலும் மறக்கமுடியாது. 

இந்நிலையில், அரையிறுதியில் ஜடேஜாவின் பேட்டிங்கை கண்டு வியந்த மஞ்சரேக்கர், ஏற்கனவே ஜடேஜாவை இழிவுபடுத்தும் விதமாக தான் கூறிய கருத்துக்கு மன்னிப்பு கேட்டுள்ளார். துண்டு துணுக்கு(பிட்ஸ் அண்ட் பீஸஸ்) வீரருக்கெல்லாம் நான் ரசிகர் கிடையாது என்று இலங்கை அணிக்கு எதிரான போட்டியின்போது வர்ணனையாளர் சஞ்சய் மஞ்சரேக்கர், ஜடேஜாவை நக்கலாக இழிவுபடுத்தினார். 

உங்களை(சஞ்சய் மஞ்சரேக்கர்)விட நான் அதிகமான போட்டிகளில் ஆடியுள்ளேன். எனவே கொஞ்சம் மரியாதையாக பேசுங்கள் என்று ஜடேஜா பதிலடி கொடுத்திருந்தார். அதன்பின்னர் மஞ்சரேக்கர், அரையிறுதியில் ஆடுவதற்கான தனது அணியை தேர்வு செய்திருந்தார். அதில் ஆடும் லெவனில் ஜடேஜாவின் பெயரை சேர்க்கவில்லை. இப்படியாக தொடர்ந்து ஜடேஜாவை குறைத்து மதிப்பிட்டு வந்தார் மஞ்சரேக்கர். 

இந்நிலையில், அரையிறுதியில் ஜடேஜாவின் ஆட்டம் மஞ்சரேக்கரின் விமர்சனத்துக்கு பதிலடியாக அமைந்தது. ஜடேஜா 10 ஓவர் பந்துவீசி 34 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார். ஃபீல்டிங்கிலும் வழக்கம்போலவே மிரட்டிய ஜடேஜா, பேட்டிங்கும் அபாரமாக ஆடினார். 

இதையடுத்து ஜடேஜா குறித்த தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்டுள்ளார் மஞ்சரேக்கர். இதுகுறித்து பேசிய மஞ்சரேக்கர், ஜடேஜாவின் இதற்கு முந்தைய கடைசி 40 இன்னிங்ஸ்களில் அவரது அதிகபட்ச ஸ்கோரே 33 தான். ஆனால் ஜடேஜா இன்று ஆடிய விதம் அபாரமானது. பவுலிங், ஃபீல்டிங், பேட்டிங் என அனைத்திலுமே மிரட்டிவிட்டார். இன்று நாம் பார்த்த ஜடேஜா, இதற்கு முன் பார்த்த ஜடேஜாவிலிருந்து முற்றிலும் மாறுபட்டவர். அவர் மீதான எனது பார்வை தவறு என்று உணர்த்திவிட்டார். அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று மஞ்சரேக்கர் தெரிவித்துள்ளார். 
 

click me!