அஷ்வின்லாம் தேறமாட்டார்.. அந்த பையனை மீண்டும் ODI அணியில் சேர்க்கணும்..! சஞ்சய் மஞ்சரேக்கர் கருத்து

By karthikeyan VFirst Published Jan 24, 2022, 9:16 PM IST
Highlights

ஒருநாள் கிரிக்கெட் அணியில் குல்தீப் யாதவை மீண்டும் சேர்க்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று சஞ்சய் மஞ்சரேக்கர் கருத்து கூறியுள்ளார்.
 

தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்த இந்திய அணி டெஸ்ட் தொடரை 2-1 என இழந்த நிலையில், ஒருநாள் தொடரில் ஒரு போட்டியில் கூட ஜெயிக்காமல் 3-0 என ஒயிட்வாஷ் ஆனது. 

ஒருநாள் தொடரில் இந்திய அணியின் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என எதுவுமே தென்னாப்பிரிக்காவுக்கு நிகராக இல்லை. இந்திய அணியின் சொதப்பலான ஆட்டத்தால் தான் தோல்வியடைந்தது. 

இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங், ஆல்ரவுண்டர் ஆப்சன், பவுலிங் காம்பினேஷன் ஆகிய மூன்றும் மிகப்பெரிய கேள்விக்கும் விவாதத்துக்கும் உள்ளாகியுள்ளது.

4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒருநாள் அணியில் இடம்பிடித்த சீனியர் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஷ்வின் பவுலிங்கில் சோபிக்கவில்லை. முதல் போட்டியில் 53 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்திய அஷ்வின், 2வது போட்டியில் 68 ரன்கள் விட்டுக்கொடுத்து விக்கெட்டே வீழ்த்தவில்லை. 3வது போட்டியில் அஷ்வின் ஆடவில்லை.

ரிஸ்ட் ஸ்பின்னர் யுஸ்வேந்திர சாஹலும் சோபிக்கவில்லை. இந்நிலையில், மீண்டும் சைனாமேன் குல்தீப் யாதவை அணியில் எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக சஞ்சய் மஞ்சரேக்கர் கருத்து கூறியுள்ளார்.

2017ம் ஆண்டிலிருந்து 2019 வரை குல்தீப் - சாஹல் ஸ்பின் ஜோடி வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தியது. கடந்த 2018 தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் குல்தீப் யாதவ் அபாரமாக பந்துவீசியிருந்தார். வெளிநாடுகளில் குல்தீப் யாதவ் மிகச்சிறப்பாக பந்துவீசி மிடில் ஓவர்களில் இந்திய அணிக்கு தேவைப்பட்டபோதெல்லாம் விக்கெட்டுகளை வீழ்த்தி கொடுத்தவர் குல்தீப் யாதவ்.

இந்நிலையில், அவரை மீண்டும் இந்திய ஒருநாள் அணியில் சேர்க்க வேண்டும் என்று சஞ்சய் மஞ்சரேக்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள சஞ்சய் மஞ்சரேக்கர், குல்தீப் யாதவை மீண்டும் ஒருநாள் அணியில் சேர்க்க இதுதான் சரியான நேரம். நான் எப்போதுமே குல்தீப்பின் ஆதரவாளர். டி20 கிரிக்கெட்டில் குல்தீப்பை ஆடவைக்காததன் பின்னணியை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. குறிப்பாக சிறிய மைதானங்களில் குல்தீப்பை ஆடவைக்க முடியாது.

ஆனால் ஒருநாள் கிரிக்கெட்டில், அதிலும் தென்னாப்பிரிக்கா மாதிரியான ஆடுகளங்களில் கண்டிப்பாக குல்தீப் யாதவ் சிறந்த தேர்வாக இருப்பார். ஆட்டத்தையே மாற்றக்கூடிய கேம் சேஞ்சராக இருப்பார். மிடில் ஓவர்களில் சிறப்பாக பந்துவீசி 3-4 விக்கெட்டுகளை வீழ்த்தவல்லவர் குல்தீப். அஷ்வின் ஏதோ ஒரு அதிர்ஷ்டத்தில் மீண்டும் ஒருநாள் அணியில் இடம்பிடித்திருக்கிறார். ஆனால் அவரது பவுலிங்கில் எந்த மாற்றமும் இல்லை. எனவே இதுமாதிரியான ஆடுகளங்களில் பந்தை திருப்பக்கூடிய சிறந்த ரிஸ்ட் ஸ்பின்னரை மீண்டும் அணிக்குள் கொண்டுவர வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று சஞ்சய் மஞ்சரேக்கர் தெரிவித்துள்ளார்.
 

click me!