டி20 கிரிக்கெட்டில் 3ம் வரிசையில் விராட் கோலிக்கு மாற்று வீரர் இவரா..? ரசிகர்கள் செம ஹேப்பி

By karthikeyan VFirst Published Feb 25, 2022, 3:21 PM IST
Highlights

டி20 கிரிக்கெட்டில் விராட் கோலி பேட்டிங் ஆடும் 3ம் வரிசையில் அவருக்கு சரியான மாற்று வீரர் யார் என்று முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கார் கருத்து கூறியுள்ளார்.
 

கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த டி20 உலக கோப்பையில் இந்திய அணி அரையிறுதிக்குக்கூட முன்னேறாமல், சூப்பர் 12 சுற்றுடனேயே வெளியேறியது. எனவே இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடக்கும் டி20 உலக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது.

ராகுல் டிராவிட்டின் பயிற்சியில், ரோஹித் சர்மாவின் கேப்டன்சியில் இந்திய அணி டி20 உலக கோப்பைக்காக தயாராகிவருகிறது. டாப் ஆர்டரில் ரோஹித்துடன் இஷான் கிஷன் நன்றாக ஆடுகிறார். அதிரடியாக ஆடி நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுக்கிறார். கேஎல் ராகுல் அணிக்குள் வந்துவிட்டால், கேஎல் ராகுல் மற்றும் இஷான் கிஷன் ஆகிய இருவரில் யார் ரோஹித்துடன் தொடக்க வீரராக இறங்குவார் என்பது பெரும் கேள்வியாக உள்ளது. இஷான் கிஷன் தொடக்க வீரராக இறங்கினால் கேஎல் ராகுல் மிடில் ஆர்டரில் ஆடுவார். ஏற்கனவே சூர்யகுமார் யாதவ் மற்றும் வெங்கடேஷ் ஐயர் அவர்களுக்கான இடத்தை கெட்டியாக பிடித்துவிட்டதால், ஷ்ரேயாஸ் ஐயருக்கு ஆடும்லெவனில் நிரந்தர இடம் என்பது சந்தேகமாகவுள்ளது.

ஆனால் கோலி ஆடாத போட்டிகளில் எல்லாம் ஷ்ரேயாஸ் ஐயர் தான் மூன்றாம் வரிசையில் இறக்கப்படுகிறார். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் கோலி ஓய்வில் சென்றுவிட்டதால் அந்த போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர்தான் 3ம் வரிசையில் இறங்கி ஆடினார். இலங்கைக்கு எதிரான டி20 தொடரிலும் கோலி ஆடாத நிலையில், முதல் போட்டியில் 3ம் வரிசையில் இறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர், 28 பந்தில் 57 ரன்கள் அடித்து அசத்தினார்.

இந்நிலையில், ஷ்ரேயாஸ் ஐயர் தான் 3ம்வரிசையில் விராட் கோலிக்கு சரியான மாற்று வீரர் என்று கூறியுள்ளார் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கார்.

இதுகுறித்து கருத்து கூறியுள்ள சஞ்சய் பங்கார், இந்திய அணியின் பென்ச் வலிமை செம வலுவாக உள்ளது. கோலி ஆடாத போட்டிகளில் ஷ்ரேயாஸ் ஐயர் தொடர்ந்து 3ம் வரிசையில் இறக்கப்படுகிறார். எனவே விராட் கோலி காயத்தால் ஆடமுடியாமல் போனால், 3ம் வரிசையில் அவருக்கு சரியான மாற்று வீரராக ஷ்ரேயாஸ் ஐயர் இருப்பார். அணி நிர்வாகம் ஷ்ரேயாஸை அப்படித்தான் பார்க்கிறது என நினைக்கிறேன் என சஞ்சய் பங்கார் தெரிவித்தார்.
 

click me!