நடராஜன் ஏன் சிறந்த பவுலர்னு நிரூபிச்சுட்டாரு..! சாம் கரன் புகழாரம்

By karthikeyan VFirst Published Mar 29, 2021, 2:37 PM IST
Highlights

நடராஜன் கடைசி ஓவரை மிகச்சிறப்பாக வீசியதாகவும், அவர் சிறந்த பவுலர் என்பதை நிரூபித்துவிட்டதாகவும் சாம் கரன் புகழாரம் சூட்டினார்.
 

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, தவான்(67), ரிஷப் பண்ட்(78) மற்றும் ஹர்திக் பாண்டியாவின்(64) அதிரடி அரைசதங்களால் 50 ஓவரில் 329 ரன்களை குவித்தது.

330 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணி, 200 ரன்னுக்கே 7 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அதன்பின்னர் 8வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சாம் கரனும் அடில் ரஷீத்தும் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடினர். அந்த பார்ட்னர்ஷிப்பை இந்திய அணி கொஞ்சம் அசால்ட்டாக விட்டுவிட்டதால், அது பில்ட் ஆனது. 8வது விக்கெட்டுக்கு 9 ஓவரில் 57 ரன்களை சேர்த்தனர். அடில் ரஷீத்தை 19 ரன்னில் வீழ்த்தி ஷர்துல் தாகூர் மீண்டும் பிரேக் கொடுத்தார்.

அதன்பின்னர் மார்க் உட் சாம் கரனுக்கு ஒத்துழைப்பு கொடுக்க, உட்டை முடிந்தவரை ஒருமுனையில் நிறுத்திவிட்டு மறுமுனையில் தனி ஒருவனாக அபாரமாக ஆடி போராடிய சாம் கரன் அரைசதம் கடந்து, தனது சதத்தையும் அணியின் வெற்றியையும் நோக்கி சென்றார்.

கடைசி ஓவரில் இங்கிலாந்தின் வெற்றிக்கு 14 ரன் தேவைப்பட்டது. அந்த ஓவரை அபாரமாக வீசிய நடராஜன், கடைசி ஓவரில் வெறும் 6 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தார். அதனால் 7 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்திய அணி. தனி ஒருவனாக கடைசி வரை கடுமையாக போராடிய சாம் கரன், 95 ரன்களுடன் களத்தில் இருந்தும் அவருக்கு மறுமுனையில் ஆதரவு இல்லாததால் இங்கிலாந்து தோற்றது.

இங்கிலாந்து அணி தோற்றிருந்தாலும், ஆட்டநாயகன் விருது சாம் கரனுக்கே வழங்கப்பட்டது. ஆட்டநாயகன் விருதை வென்ற சாம் கரன் பேசும்போது, நாங்கள் இந்த போட்டியில் ஜெயிக்கவில்லை. ஆனால் நான் ஆடிய விதம் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இது மிகச்சிறந்த அனுபவம். முடிந்தவரை நானே அதிகமான பந்துகளை எதிர்கொண்டு, போட்டியை கடைசி வரை எடுத்துச்செல்ல விரும்பினேன். கடைசி ஓவரில் 14 ரன்னை தடுப்பது கடினம். ஆனால் நடராஜன் மிகச்சிறப்பாக பந்துவீசி, அவர் ஏன் சிறந்த பவுலர் என்பதை நிரூபித்தார். மைதானத்தின் ஒரு பகுதி சிறியது; புவனேஷ்வர் குமாரும் அபாரமாக வீசினார். இந்த இன்னிங்ஸ் ஒரு சிறந்த அனுபவம் என்றார் சாம் கரன்.
 

click me!