Latest Videos

ஒற்றை ஆளாய் கடைசி வரை போராடிய சாம் கரன்..! ஒருவழியா கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்று தொடரை வென்ற இந்தியா

By karthikeyan VFirst Published Mar 28, 2021, 10:33 PM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்று 2-1 என தொடரை வென்றது இந்திய அணி.
 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றதால், தொடர் 1-1 என சமனடைந்தது. எனவே தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடந்தது.

புனேவில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, இந்தியாவை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, தவான்(67), ரிஷப் பண்ட்(78) மற்றும் ஹர்திக் பாண்டியாவின்(64) அதிரடி அரைசதங்களால் 50 ஓவரில் 329 ரன்களை குவித்தது. ஹர்திக் பாண்டியா 39வது ஓவரில் ஆட்டமிழக்கும்போது இந்தியாவின் ஸ்கோர் 265 ரன்கள். பாண்டியா ஆட்டமிழந்த பின்னர் ரன் வேகம் குறைந்தது. பாண்டியா கடைசி வரை ஆடியிருந்தால் இந்திய அணி மெகா ஸ்கோரை அடித்திருக்கும்.

இதையடுத்து 330 ரன்கள் என்ற இலக்கை விரட்ட தொடங்கியது இங்கிலாந்து அணி. இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜேசன் ராய், புவனேஷ்வர் குமார் வீசிய முதல் ஓவரிலேயே 3 பவுண்டரிகளுடன் 14 ரன்களை விளாசினார். ஆனால் அதற்கு பதிலடியாக அந்த ஓவரின் கடைசி பந்திலேயே ராயை வீழ்த்தினார் புவனேஷ்வர் குமார்.

அதன்பின்னர் பேர்ஸ்டோவையும் ஒரு ரன்னில் புவனேஷ்வர் குமார் வீழ்த்த 28 ரன்களுக்கே 2 விக்கெட்டுகளை இழந்தது இங்கிலாந்து. பென் ஸ்டோக்ஸ் களத்திற்கு வந்ததுமே அவரை வீழ்த்தும் வாய்ப்பை புவனேஷ்வர் குமார் ஏற்படுத்தி கொடுத்தார். ஆனால் எளிமையான அந்த கேட்ச்சை ஹர்திக் பாண்டியா கோட்டைவிட, அதன்பின்னர் ஒருசில பவுண்டரிகளை விளாசிய ஸ்டோக்ஸை நிலைக்கவிடாமல் 35 ரன்னில் நடராஜன் வீழ்த்த, பட்லரை 15 ரன்னில் ஷர்துல் தாகூர் வெளியேற்றினார். 

மாலனும் லிவிங்ஸ்டனும் சிறப்பாக ஆடிய நிலையில் லிவிங்ஸ்டனை 36 ரன்னில் ஷர்துல் வீழ்த்த, அரைசதம் அடித்த மாலன் 50 ரன்னில் ஆட்டமிழந்தார். மொயின் அலி 29 ரன்னில் ஆட்டமிழக்க, 200 ரன்னுக்கு 7 விக்கெட்டுகளை இழந்துவிட்டது இங்கிலாந்து அணி.

அதன்பின்னர் 8வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சாம் கரனும் அடில் ரஷீத்தும் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடினர். அந்த பார்ட்னர்ஷிப்பை இந்திய அணி கொஞ்சம் அசால்ட்டாக விட்டுவிட்டதால், அது பில்ட் ஆனது. 8வது விக்கெட்டுக்கு 9 ஓவரில் 57 ரன்களை சேர்த்தனர். அடில் ரஷீத்தை 19 ரன்னில் வீழ்த்தி ஷர்துல் தாகூர் மீண்டும் பிரேக் கொடுத்தார்.

அதன்பின்னர் மார்க் உட் சாம் கரனுக்கு ஒத்துழைப்பு கொடுக்க, உட்டை முடிந்தவரை ஒருமுனையில் நிறுத்திவிட்டு மறுமுனையில் தனி ஒருவனாக அபாரமாக ஆடி போராடிய சாம் கரன் அரைசதம் கடந்து, தனது சதத்தையும் அணியின் வெற்றியையும் நோக்கி சென்றார்.

கடைசி ஓவரில் இங்கிலாந்தின் வெற்றிக்கு 14 ரன் தேவைப்பட்டது. முதல் பந்தில் ரன் கிடைக்கவில்லை. 2வது பந்தில் சிங்கிள் அடித்தார் சாம் கரன். 3வது பந்தில் ஸ்டிரைட் திசையில் மார்க் உட் அடிக்க, அதற்கு 2 ரன் ஓட முயன்றனர். ஆனால் ஹர்திக் பாண்டியா விட்ட த்ரோவை ரிஷப் பண்ட் சரியாக பிடித்து அடிக்க, மார்க் உட் ரன் அவுட்டானார்.

கடைசி 3 பந்தில் தேவையான ரன் கிடைக்கவில்லை. 50 ஓவரில் 322 ரன் அடித்ததையடுத்து, 7 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, 2-1 என தொடரை வென்றது.
 

click me!