Kohli vs Ganguly: இந்திய கிரிக்கெட்டின் நலனுக்காக கங்குலி பேசி ஆகணும்..! பாக்., முன்னாள் வீரர் அட்வைஸ்

By karthikeyan VFirst Published Dec 16, 2021, 5:38 PM IST
Highlights

இந்திய கிரிக்கெட்டின் நலனுக்காக, விராட் கோலி விவகாரத்தில் பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி பேச வேண்டும் என்று சல்மான் பட் அறிவுறுத்தியுள்ளார்.
 

டி20 உலக கோப்பையுடன் விராட் கோலி இந்திய டி20 அணியின் கேப்டன்சியிலிருந்து விலகினார். இந்திய ஒருநாள் அணியின் கேப்டன்சியிலிருந்தும் விராட் கோலி விலகிவிடுவார் என்ற தகவல் வெளியாகிவந்தது. ஆனால் ஒருநாள் அணியின் கேப்டன்சியிலிருந்து விலகும் ஐடியா கோலிக்கு இல்லை.

ஆனாலும், வெள்ளைப்பந்து கிரிக்கெட் அணிகளை (ஒருநாள் மற்றும் டி20) வெவ்வேறு கேப்டன்கள் வழிநடத்துவது சரியாக இருக்காது என்பதால், ஒருநாள் கேப்டன்சியும் ரோஹித்திடமே ஒப்படைக்கப்பட்டது.

தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்துக்கான டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டபோதே, இந்த அறிவிப்பும் வெளியானது. ஒருநாள் அணியின் கேப்டன்சியிலிருந்து விராட் கோலி நீக்கப்பட்டு ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டார். 

இந்த கேப்டன்சி மாற்றம் தொடர்பாக பல்வேறு தகவல்கள் வலம்வந்தன. ஒருநாள் அணியின் கேப்டன்சியிலிருந்து விலக கோலிக்கு 48 மணி நேரம் அவகாசம் கொடுக்கப்பட்டதாகவும், அதற்குள் கோலி கேப்டன்சியிலிருந்து விலக மறுத்ததால், அவர் கேப்டன்சியிலிருந்து நீக்கப்பட்டதாகவும் பேசப்பட்டது. கோலி பிசிசிஐ மீது அதிருப்தியில் இருப்பதாகவும், ரோஹித்தின் கேப்டன்சியில் ஆட விரும்பாததால் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து விலக்கு கேட்டதாகவும் தகவல் வெளியானது.

இதற்கிடையே, ஒருநாள் அணியின் கேப்டன்சி மாற்றம் குறித்து பேசிய பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி, விராட் கோலியை டி20 கேப்டன்சியிலிருந்து விலகவேண்டாம் என்று பிசிசிஐ கேட்டுக்கொண்டதாகவும், ஆனால் அவர் அதை ஏற்க மறுத்து கேப்டன்சியிலிருந்து விலகியதாகவும் கூறினார். மேலும், அதன்விளைவாக வெள்ளைப்பந்து அணிகளுக்கு ஒரே கேப்டனை நியமிக்க வேண்டும் என்று தேர்வாளர்கள் விரும்பியதால் தான், கோலி நீக்கப்பட்டு ரோஹித் கேப்டனாக நியமிக்கப்பட்டதாகவும் கங்குலி கூறியிருந்தார்.

ஆனால், டி20 கேப்டன்சியிலிருந்து விலகும் தனது முடிவை பிசிசிஐயிடம் தெரிவித்ததும், அதை பிசிசிஐ எந்த மறுப்பும் தெரிவிக்காமல் ஏற்றுக்கொண்டதாகவும், தன்னிடம் பிசிசிஐ சார்பில் யாரும் டி20 கேப்டன்சியிலிருந்து விலக வேண்டாம் என்று அறிவுறுத்தவில்லை என்றும் விராட் கோலி தெரிவித்தார்.

கங்குலி கூறிய கருத்துக்கு முரண்பாடாக இருந்தது கோலி கூறியது. ஆனால் செப்டம்பர் மாதமே பிசிசிஐ தரப்பிலிருந்து விராட்கோலியிடம், டி20 கேப்டன்சியிலிருந்து விலகவேண்டாம் என்று கூறியதாகவும், கோலி சொல்வதில் நியாயமில்லை என்றும் பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறியதாக தகவல் வெளியானது.

இவ்வாறாக இந்த விவகாரம் குறித்து பல்வேறு முரண்பாடான கருத்துகள் வலம்வரும் நிலையில், இதுகுறித்து பிசிசிஐ தலைவர் கங்குலி தான் தெளிவுபடுத்த வேண்டும் என்று இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் வலியுறுத்திய நிலையில், பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட்டும் அதையே தான் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள சல்மான் பட், இந்திய கிரிக்கெட்டின் நலனுக்காக கங்குலி பதில் சொல்ல வேண்டும். கங்குலி பிசிசிஐயின் தலைவர். அப்படியிருக்கையில், விராட் கோலி பொதுவெளியில் அவரது கருத்துடன் முரண்படுவது சாதாரண விஷயமல்ல. விராட் கோலியை டி20 கேப்டன்சியிலிருந்து விலகவேண்டாம் என்று பிசிசிஐ வலியுறுத்தியதாக கங்குலி கூறுகிறார். மறுபுறம், அப்படியொரு சம்பவம் நடக்கவேயில்லை என்று கோலி கூறுகிறார். இரண்டும் முற்றிலும் முரண்பட்ட கருத்துகள். இது சரியல்ல. இது கேப்டன்சி சம்மந்தப்பட்ட விஷயமல்ல. ஏனெனில் ரோஹித்தும் சிறந்த கேப்டன் தான். ஆனால் கேப்டன்சி மாற்றம் ஸ்மூத்தாக நடந்திருக்க வேண்டும் என்று சல்மான் பட் கருத்து கூறியிருக்கிறார்.
 

click me!