குல்தீப் - சாஹல் ஜோடியின் வீழ்ச்சிக்கு இதுதான் காரணம்.! குல்தீப் மீண்டும் ஜொலிக்க சல்மான் பட் கொடுக்கும் ஐடியா

By karthikeyan VFirst Published May 20, 2021, 9:22 PM IST
Highlights

குல்தீப்  - சாஹல் ரிஸ்ட் ஸ்பின் ஜோடியின் வீழ்ச்சிக்கான காரணத்தை கூறி, அதிலிருந்து மீண்டு மீண்டும் இந்திய அணியில் ஜொலிப்பதற்கான ஆலோசனையையும் கூறியுள்ளார் பாக்., முன்னாள் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் சல்மான் பட்.
 

இந்திய அணியில் கேப்டன் மற்றும் அணி நிர்வாகத்தின் நம்பிக்கையை பெற்று அதிவேகமாக வளர்ந்து, வளர்ந்த அதேவேகத்தில் வீழ்ந்த ஒரு வீரர் இடது கை ரிஸ்ட் ஸ்பின்னர்(சைனாமேன்) குல்தீப் யாதவ்.

அஷ்வின் - ஜடேஜா ஸ்பின் ஜோடியின் இடத்தை பிடித்த குல்தீப் - சாஹல் ஜோடியால், அஷ்வின் - ஜடேஜா அளவிற்கு நீடித்து நிலைக்க முடியவில்லை. 2017-2018ம் ஆண்டுகளில் அதிவேகமாக வளர்ந்து, இந்திய அணிக்காக ஒவ்வொரு போட்டியிலும் விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிகளை பெற்றுக்கொடுத்த குல்தீப் - சாஹல் ஸ்பின் ஜோடி, 2019லிருந்து வீழ்ச்சியை சந்திக்க ஆரம்பித்தது. அதற்கு பின்னர் இருவரும் இணைந்து இந்திய அணிக்காக ஆடவேயில்லை.

3 விதமான போட்டிகளிலும் அபாரமாக பந்துவீசி வந்த குல்தீப் யாதவ், 2019 ஐபிஎல்லில் மரண அடி வாங்கினார். அதன்பின்னர் இந்திய அணியிலிருந்து மட்டுமல்லாது ஐபிஎல்லில் அவர் ஆடும் அணியில் கூட ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்காமல் ஓரங்கட்டப்பட்டார்.
 
3 விதமான சர்வதேச போட்டிகளுக்கான இந்திய அணியிலும் ஆடிவந்த குல்தீப், இப்போது எந்தவிதமான போட்டியிலும் ஆடுவதில்லை. இந்நிலையில், குல்தீப் - சாஹலின் வீழ்ச்சிக்கான காரணத்தை கூறியுள்ள பாகிஸ்தான் முன்னாள் வீரர் சல்மான் பட், அதிலிருந்து மீண்டு மீண்டும் ஜொலிப்பதற்கான ஐடியாவும் கூறியுள்ளார்.

குல்தீப் குறித்து பேசிய சல்மான் பட், டெஸ்ட் ஃபார்மட்டில் ஆடாதது எந்த வீரரையுமே பாதிக்கும். தொடர்ச்சியாக வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் மட்டுமே ஆடிவரும் பவுலர்களுக்கு லைன் & லெந்த் பாதிக்கப்படும். அதற்கு காரணம், விரைவாக பந்துவீசி முடிக்க வேண்டும் என்பதில் மட்டுமே கவனம் செலுத்துவார்கள். 

ஆனால் டெஸ்ட் ஃபார்மட்டில் ஆடுவதுதான் திறன் மற்றும் கண்ட்ரோலை கற்றுக்கொடுக்கும். குல்தீப் மற்றும் சாஹல் ஆகிய இருவரையும் டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரிதாக பார்த்ததில்லை. அஷ்வின் - ஜடேஜாவிற்குத்தான் முன்னுரிமை. குல்தீப்பிற்கு தன்னம்பிக்கை குறைந்துள்ளது. எனவே அவர் ரஞ்சி கிரிக்கெட்டில் ஆடி, அதில் சிறப்பாக பந்துவீசுவது, இழந்த அவரது ஃபார்மையும், நம்பிக்கையையும் திரும்பப்பெற்று ஜொலிக்க உதவும் என்று சல்மான் பட் தெரிவித்துள்ளார்.
 

click me!