சச்சின் கெரியரில் மறக்க முடியாத தினம் மார்ச் 9.. ஆஸி.,யை அடித்து நொறுக்கிய டெண்டுல்கர்.. கெரியரில் சிறந்த சதம்

Published : Mar 09, 2020, 12:38 PM ISTUpdated : Mar 09, 2020, 12:44 PM IST
சச்சின் கெரியரில் மறக்க முடியாத தினம் மார்ச் 9.. ஆஸி.,யை அடித்து நொறுக்கிய டெண்டுல்கர்.. கெரியரில் சிறந்த சதம்

சுருக்கம்

சச்சின் டெண்டுல்கர் 100 சர்வதேச சதங்கள் அடித்திருந்தாலும், அவரது முக்கியமான சதங்களில் ஒன்று, அடிக்கப்பட்ட தினம் இன்று.  

ஆல்டைம் பெஸ்ட் பேட்ஸ்மேன்களில் முக்கியமானவரான சச்சின் டெண்டுல்கர், 24 ஆண்டுகள் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் ஆடி சதங்களையும் சாதனைகளையும் குவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் மொத்தமாக 100 சதங்களை விளாசியுள்ளார். 

சச்சின் 100 சதங்கள் அடித்திருந்தாலும் அவரது கெரியரில் முக்கியமான சதம் 22 ஆண்டுகளுக்கு முன் இதே மார்ச் 9ம் தேதி அடிக்கப்பட்டதுதான். இந்தியா - ஆஸ்திரேலியா இடையே 1998ல் சென்னை சேப்பாக்கத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்த சச்சினின் சதம் தான் அது. 
 
1998ல் மார்ச் 6ம் தேதி தொடங்கிய அந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் நயன் மோங்கியா - நவ்ஜோத் சிங் சித்து ஆகிய இருவரும் அரைசதம் அடித்தனர். மூன்றாம் வரிசையில் இறங்கிய ராகுல் டிராவிட்டும் அரைசதம் அடித்தார். ஆனால் அவர்கள் மூவரைத்தவிர வேறு யாருமே சரியாக ஆடவில்லை. அவர்களும் அரைசதத்துக்கு பின்னர் பெரிய இன்னிங்ஸ் ஆடவில்லை. எனவே இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 257 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

 மார்ச் 6ம் தேதி தொடங்கிய இந்த போட்டியில் மார்ச் 7ம் தேதி காலை இந்திய அணி ஆல் அவுட்டானது. அதன்பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்ஸில் 328 ரன்கள் அடித்தது. ஆஸ்திரேலிய அணி, இந்த போட்டியின் மூன்றாம் நாளான மார்ச் 8ம் தேதியன்று, டீ பிரேக்கிற்கு முன் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட்டானது. 

71 ரன்கள் பின் தங்கிய நிலையில், இரண்டாம் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர் நயன் மோங்கியா 18 ரன்களில் ஆட்டமிழக்க, சித்துவும் ராகுல் டிராவிட்டும் இணைந்து மூன்றாம் நாள் ஆட்டத்தை முடித்தனர். இருவருமே அரைசதம் அடித்தனர். நான்காம் நாள்(மார்ச் 9) ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே சித்து அவுட்டாக, அதன்பின்னர் களத்திற்கு வந்த சச்சின் டெண்டுல்கர், அந்த இன்னிங்ஸில் அருமையாக ஆடி சதமடித்தார். 

ராகுல் டிராவிட் 56 ரன்களில் அவுட்டாக, அசாருதீனுடன் இணைந்து சச்சின் ஆடிய ஆட்டம் அபாரமானது. அந்த போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, பந்துகளை அதிகமாக வீணடிக்காமல் அதிரடியாக ஆடி சதமடித்த சச்சின் டெண்டுல்கர். ஷேன் வார்ன், காஸ்ப்ரோவிக்ஸ் ஆகியோரின் பவுலிங்கெல்லாம், சச்சின் பேட்டிங்கிற்கு முன் சுத்தமாக எடுபடவில்லை. 191 பந்தில் 14 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 155 ரன்களை குவித்து அசத்தினார் சச்சின். சச்சினின் அதிரடி சதத்தால் இரண்டாவது இன்னிங்ஸில் 107 ஓவரில் 418 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது இந்திய அணி. 

ஆட்டத்தின் நான்காம் நாளின் கடைசி செசனில் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 348 ரன்கள் என்ற இலக்கை விரட்டியது. ஆனால் வெறும் 168 ரன்களுக்கே ஆல் அவுட்டானதால் இந்திய அணி 179 ரன்கள் வித்தியாசத்தில் அந்த போட்டியில் அபார வெற்றி பெற்றது. முதல் இன்னிங்ஸின் முடிவில் 71 ரன்கள் பின் தங்கியிருந்த இந்திய அணியை, 347 ரன்கள் முன்னிலை பெற வைத்தது சச்சின் டெண்டுல்கரின் அந்த அபாரமான இன்னிங்ஸ்தான். 

Also Read - ஒப்புக்கு சப்பாணி ரிஷப் பண்ட்.. உறுதி செய்த இந்திய அணி

டெஸ்ட் போட்டி என்றாலே மந்தமாகத்தான் ஆட வேண்டும் என்ற மனநிலை கொண்ட தற்போதைய வீரர்கள் சிலர், சூழலுக்கு ஏற்றவாறு, வெற்றியை நோக்கி ஆடும்போது எப்படி பேட்டிங் ஆட வேண்டும் என்பதை கற்றுக்கொள்ள சச்சினின் அந்த இன்னிங்ஸை பார்க்கலாம்.
 

PREV
click me!

Recommended Stories

டி20 உலகக்கோப்பை டிக்கெட் வெறும் 100 ரூபாய் தான்! எப்படி புக் செய்வது? முழு விவரம் இதோ!
IND vs SA 2nd T20: குயின்டன் டி காக் சிக்சர் மழை.. அர்ஷ்தீப், பும்ரா மோசமான பவுலிங்.. இந்தியாவுக்கு இமாலய இலக்கு!