இந்த பையன் ரொம்ப ஸ்பெஷல் தாதா.. வெறும் இரண்டே ஷாட்டில் தோனியின் திறமையை கண்டறிந்த மாஸ்டர் பிளாஸ்டர்

By karthikeyan VFirst Published Aug 16, 2020, 4:03 PM IST
Highlights

தோனியின் ஆரம்பக்கட்டத்தில் அவரது பேட்டிங்கை பார்த்து கங்குலியிடம் தான் பேசியது குறித்து மனம் திறந்துள்ளார் சச்சின் டெண்டுல்கர்.
 

இந்திய அணியில் 2004ம் ஆண்டு அறிமுகமான தோனி, 2019ம் ஆண்டு வரை இந்திய அணியில் ஆடினார். கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஒரு போட்டியில் கூட ஆடாத தோனி, ஐபிஎல்லுக்காக தயாராகிவரும் நிலையில், திடீரென நேற்று சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தார்.

தோனி இந்திய அணிக்காக 90 டெஸ்ட், 350 ஒருநாள் மற்றும் 98 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார். 332 போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தியுள்ள தோனி, இந்திய அணிக்கு 3 விதமான ஐசிசி கோப்பைகளையும் வென்று கொடுத்த கேப்டன் தோனி. இன்றைக்கு சர்வதேச கிரிக்கெட்டின் சகாப்தமாக திகழும் தோனியின் கெரியரில் ஆரம்பக்கட்டம் அவ்வளவு எளிதானதாக அமையவில்லை. 

தோனி 2004ல் வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் தான் அறிமுகமானார். அறிமுக போட்டியில் முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டானார் தோனி. அதன்பின்னர் அடுத்த போட்டியில் 12 ரன்களும், அதற்கடுத்த போட்டியில் 7 ரன்களும் தான் அடித்தார். அதற்கடுத்த ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தனது முதல் சதத்தை பதிவு செய்த தோனி 148 ரன்கள் அடித்தார். இலங்கைக்கு எதிராக 183 ரன்களை குவித்த தோனி, இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலமாக உருவெடுத்தார். தோனி ஸ்கோர் செய்யாதபோதிலும், அவரது ஆட்டத்தை கண்ட சச்சின் டெண்டுல்கர், தோனி மிகச்சிறந்த வீரராக வருவார் என்பதை கணித்துவிட்டார். 

தோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில், தோனி குறித்து ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சச்சின் பேசியுள்ளார். 

தோனி குறித்து பேசிய சச்சின் டெண்டுல்கர், நான் முதன்முதலில் தோனியை வங்கதேச சுற்றுப்பயணத்தில் தான் பார்த்தேன். அவர் அதிரடியாக பேட்டிங் ஆடுவார் என்று நானும் கங்குலியும் கேள்விப்பட்டோம். ஆனால் அந்த தொடரில் தோனி பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. ஆனால் அவர் ஆடிய ஒருசில ஷாட்டுகள் அபாரமாக இருந்தன. சிறப்பாக ஆடினார். அதிலும் லாங் ஆஃபில் ஒரு ஷாட் அடித்தார். அந்த ஷாட்டை பார்த்து நானும் தாதாவும்(கங்குலி) ஒரு ஸ்பெஷலான வீரரை கண்டறிந்துவிட்டதை அன்றே உணர்ந்தோம். இந்த பையன்(தோனி) பெரிய கிஃப்ட் என்று தாதாவிடம் நான் அன்றைக்கே சொன்னேன். பேட்டை வேகமாக விளாசக்கூடிய பேட்ஸ்மேன் தோனி. நல்ல வெயிட் கொடுத்தும் ஆடியதால் நல்ல பவரை ஜெனரேட் செய்து தோனியால் ஆடமுடிந்தது என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
 

click me!