நான் 99 சதம் அடிச்சவன்.. ஆனாலும் எனக்கே அட்வைஸ்..! இனிமையாக பேசி கடுமையாக தாக்கிய சச்சின்

By karthikeyan VFirst Published Aug 15, 2020, 6:05 PM IST
Highlights

சச்சின் டெண்டுல்கர் தனது 100வது சதத்தை அடிக்க தாமதமானபோது, தனக்கு வந்த அறிவுரைகள் குறித்து பேசியுள்ளார். 
 

கிரிக்கெட்டின் கடவுள் என்றழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர், இந்திய அணிக்காக 24 ஆண்டுகளில், 200 டெஸ்ட் மற்றும் 463 ஒருநாள் போட்டிகளில் ஆடி மொத்தமாக 34 ஆயிரத்துக்கும் அதிகமான ரன்களை குவித்து, சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார் .

சர்வதேச கிரிக்கெட்டின் ஆல்டைம் பெஸ்ட் பேட்ஸ்மேன்களில் முதன்மையானவரான சச்சின் டெண்டுல்கர், அதிக சர்வதேச ரன்கள், அதிக சதங்கள் ஆகிய சாதனைகளை தன்னகத்தே கொண்டுள்ளவர். தனது கெரியரில் வாசிம் அக்ரம், ஆம்ப்ரூஸ், வால்ஷ், மெக்ராத், வக்கார் யூனிஸ், முத்தையா முரளிதரன், ஷேன் வார்ன், ஆலன் டொனால்டு, ஷான் போலாக், ஷேன் பாண்ட், அக்தர், பிரெட் லீ உள்ளிட்ட பல தலைசிறந்த பவுலர்களின் பவுலிங்கை எதிர்கொண்டு ஆடி ரன்களை குவித்தவர். 

100 சர்வதேச சதங்களை விளாசி சாதனை நாயகனாக திகழும் சச்சின் டெண்டுல்கர், முதல் சதத்தை அடித்த 30வது ஆண்டுதினம் நேற்று. இதையடுத்து அதுகுறித்து டுவிட்டரில் பகிர்ந்துகொண்ட சச்சின் டெண்டுல்கர், 99 சதத்தை அடித்துவிட்ட தன்னால், 100வது சதத்தை அடிக்க நீண்டகாலம் ஆனது குறித்தும் அப்போது அவருக்கு பல தரப்பில் இருந்து வந்த அறிவுரைகள் குறித்தும் பேசியிருக்கிறார். 

99 சதங்களை அடித்திருந்த சச்சின் டெண்டுல்கர், 100வது சதத்தை அடிக்க ஓராண்டு எடுத்துக்கொண்டார். அந்த ஓராண்டில் 11 டெஸ்ட் மற்றும் 12 ஒருநாள் போட்டிகளில் ஆடியபோதும், அதில் ஒரு இன்னிங்ஸில் கூட அவரால் சதமடிக்க முடியவில்லை. சச்சின் ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்கு மேல், பொதுவாகவே 90 ரன்களை கடந்துவிட்டால், பதற்றம் ஏற்பட்டு அவுட்டாகிவிடுவார் என்ற பார்வை இருந்தது. அதற்கு அவர் அதிகமான முறை அந்த மாதிரி அவுட்டானதுதான் காரணம். எனவே அதேபோலவே 99 சதங்களை அடித்துவிட்ட சச்சினுக்கு கூடுதலாக ஒரு சதம் என்பது பெரிய விஷயமே இல்லை. ஆனாலும் அவரால் அதை எளிதாக அடிக்க முடியவில்லை. 

ஓராண்டு கழித்தே 100வது சதத்தை சச்சின் டெண்டுல்கர் அடித்தார். இந்த இடைப்பட்ட காலத்தில், சச்சின் டெண்டுல்கர் பெரிய லெஜண்ட் பேட்ஸ்மேன் என்பதையெல்லாம் மறந்து கிரிக்கெட் ரசிகர்கள், முன்னாள் வீரர்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் அவருக்கு அறிவுரை சொல்ல ஆரம்பித்தனர். சச்சினை மிகப்பெரிய லெஜண்ட்டாக நினைத்து கொண்டாடியவர்களும் கூட, அவர் பெரிய லெஜண்ட் என்பதை மறந்து அவருக்கு அறிவுரை சொன்னார்கள். 

அதைத்தான் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய சச்சின் டெண்டுல்கர், முதல் சதத்திற்கும் 100வது சதத்திற்கும் என்ன வித்தியாசம் என்று என்னிடம் கேட்கிறார்கள். முதல் சதமடிக்கும்போது, இன்னும் 99 சதங்கள் அடிப்பேன் என்று தெரியாது. நான் 99 சதங்களுடன் தேங்கிய சமயத்தில், என்னை செய்ய வேண்டும்,ம் என்ன செய்யக்கூடாது என்று, நான் ஏற்கனவே 99 சதங்கள் அடித்தவன் என்பதையும் மறந்து ஏராளமானோர் ஏராளமான அறிவுரைகளை வழங்கினார்கள். இதுதான் முதல் சதத்திற்கும் 100வது சதத்திற்குமான வித்தியாசம்.

முதல் சதமடித்த போட்டியில், தொடரை வெல்லும் வாய்ப்பை அணிக்கு உறுதிப்படுத்தினேன். அதுவும் இந்திய சுதந்திர தின சமயத்தில் அணிக்கு பெருமை சேர்த்த தருணம் அது. இந்தியாவுக்காக ஆட கிடைத்த வாய்ப்பு எனக்கு கிடைத்த கௌரவமாக கருதுகிறேன் என்றார் சச்சின்.

தனக்கு அட்வைஸ் செய்தவர்களை வெளிப்படையாக கடிந்துகொள்ளாமல் இனிமையான வார்த்தைகளின் மூலம் மிகவும் அட்வைஸ் சொன்னவர்களை தாக்கியுள்ளார் சச்சின் டெண்டுல்கர்.
 

click me!