கண்டிப்பா அது தப்புதான்.. மௌனம் கலைத்த மாஸ்டர் பிளாஸ்டர்

By karthikeyan VFirst Published Jul 18, 2019, 11:09 AM IST
Highlights

அரையிறுதியில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெறும் 240 ரன்கள் என்ற இலக்கை விரட்டமுடியாமல் தோற்று வெளியேறியது அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. 

உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியாக பார்க்கப்பட்ட இந்திய அணி, அரையிறுதியில் நியூசிலாந்திடம் தோற்று வெளியேறியது. இந்திய அணி, 240 ரன்கள் என்ற இலக்கை விரட்டமுடியாமல் தோற்றது அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. 

டாப் ஆர்டரையே இந்திய அணி அதிகமாக சார்ந்திருந்த நிலையில், அரையிறுதி போட்டியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சோபிக்காதது இந்திய அணிக்கு பெரும் பாதிப்பாக அமைந்தது. இந்திய அணியில் மிடில் ஆர்டர் சிக்கல் இருந்துவந்த நிலையில் டாப் ஆர்டரும் சொதப்பியதால் இந்திய அணி தோல்வியை தழுவ வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. 

ஆனால் அப்போதும் கூட இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு இருந்தது. ஆனால் பேட்டிங் ஆர்டரை கடைசி நேரத்தில் மாற்றியதால்தான் தோற்க நேரிட்டது. இந்திய அணி 5 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில், ஐந்தாம் வரிசையில் தோனியை இறக்கிவிட்டு ரிஷப் பண்ட்டுடன் ஆடவிட்டிருக்க வேண்டும். அனுபவ வீரரான தோனி, ரிஷப்பை வழிநடத்தி பார்ட்னர்ஷிப் அமைத்து சரிவிலிருந்து மீட்டெடுத்திருப்பார். அதன்பின்னர் ஹர்திக்கையும் தினேஷ் கார்த்திக்கையும் இறக்கியிருந்தால் அவர்கள் கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடி வெற்றி பெற்றிருக்கக்கூடும். ஏனெனில் ஜடேஜாவும் டாப் ஃபார்மில் ஆடினார்.

ஆனால் தினேஷ் கார்த்திக்கை ஐந்தாம் வரிசையிலும் ஹர்திக்கை ஆறாம் இடத்திலும் இறக்கிவிட்டு தோனியை ஏழாம் வரிசைக்கு பின்னுக்குத்தள்ளி இறக்கிவிட்டனர். அதுதான் இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது. தோனியை ஏழாம் வரிசையில் இறக்கியதை கவாஸ்கர், கங்குலி ஆகியோர் கடுமையாக விமர்சித்திருந்தனர். 

இந்நிலையில், இதுகுறித்து சச்சின் டெண்டுல்கரும் தனது கருத்தை அதிரடியாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய சச்சின் டெண்டுல்கர், தோனியை ஐந்தாம் வரிசையில் இறக்கியிருக்க வேண்டும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இந்திய அணி இருந்த நிலையில், ஐந்தாம் வரிசையில் தோனியை இறக்கியிருந்தால் பார்ட்னர்ஷிப் அமைத்து இன்னிங்ஸை பலப்படுத்தியிருப்பார். அதன்பின்னர் ஹர்திக்கை ஆறாம் வரிசையிலும் தினேஷ் கார்த்திக்கை ஏழாம் வரிசையிலும் இறக்கியிருக்கலாம் என்று சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். 
 

click me!