சூப்பர் ஓவரும் டிரா ஆயிட்டா என்ன செய்றது..? மாஸ்டர் பிளாஸ்டர் கொடுக்கும் ஐடியா

By karthikeyan VFirst Published Jul 18, 2019, 10:24 AM IST
Highlights

இறுதி போட்டியின் முடிவு தீர்மானிக்கப்பட்ட விதம் பல முன்னாள் ஜாம்பவான்களையும் ரசிகர்களையும் அதிருப்தியடைய செய்தது. ஏனெனில் இரு அணிகளுமே கோப்பைக்கு தகுதியான அணிகள் தான். நியூசிலாந்து அணி கடுமையாக போராடியது. கோப்பையை இரு அணிகளுக்கும் பகிர்ந்து கொடுக்க முடியாது என்றாலும் வெற்றி சரியான முறையில் தீர்மானிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதே அனைவரின் கருத்து.
 
இங்கிலாந்து - நியூசிலாந்து இடையேயான இறுதி போட்டி மாதிரியான ஒரு போட்டியை காண்பது மிகவும் அரிது. உலக கோப்பை வரலாற்றில் இப்படியொரு இறுதி போட்டி இதுவரை நடந்ததில்லை, இனிமேலும் நடக்க வாய்ப்பிருக்கிறதா என்பதும் சந்தேகம்தான். அந்தளவிற்கு அருமையான த்ரில்லான போட்டி அது. 

லண்டன் லார்ட்ஸில் நடந்த உலக கோப்பை இறுதி போட்டியில் இங்கிலாந்தும் நியூசிலாந்தும் மோதின. அந்த போட்டி டிரா ஆனதால் சூப்பர் ஓவர் வீசப்பட்டது. சூப்பர் ஓவரிலும் இரு அணிகளுமே தலா 15 ரன்கள் அடித்ததால் சூப்பர் ஓவரும் டிரா ஆனது. இதையடுத்து அந்த போட்டியில் அதிக பவுண்டரிகள் அடித்த அணி என்பதன் அடிப்படையில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு கோப்பையும் வழங்கப்பட்டது. 

இறுதி போட்டியின் முடிவு தீர்மானிக்கப்பட்ட விதம் பல முன்னாள் ஜாம்பவான்களையும் ரசிகர்களையும் அதிருப்தியடைய செய்தது. ஏனெனில் இரு அணிகளுமே கோப்பைக்கு தகுதியான அணிகள் தான். நியூசிலாந்து அணி கடுமையாக போராடியது. கோப்பையை இரு அணிகளுக்கும் பகிர்ந்து கொடுக்க முடியாது என்றாலும் வெற்றி சரியான முறையில் தீர்மானிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதே அனைவரின் கருத்து.

முன்னாள் வீரர்கள் பலரும் ஐசிசி விதிகளில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்நிலையில் சூப்பர் ஓவரிலும் டிரா ஆனால் என்ன செய்ய வேண்டும் என்று மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய சச்சின் டெண்டுல்கர், உலக கோப்பை ஃபைனலில் சூப்பர் ஓவர் டிரா ஆனதால், மீண்டும் ஒரு சூப்பர் ஓவர் வீசி போட்டியின் முடிவை தீர்மானித்திருக்க வேண்டும். அதிக பவுண்டரிகளின் அடிப்படையில் முடிவை தீர்மானிக்காமல் மற்றொரு சூப்பர் ஓவர் போட்டிருந்திருக்கலாம். உலக கோப்பை இறுதி போட்டியில் மட்டுமல்ல, ஒவ்வொரு போட்டியுமே முக்கியம்தான் எனவே அனைத்து போட்டிகளுக்குமே இதை செயல்படுத்தலாம் என்று சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார். 
 
click me!