டி20 உலக கோப்பை தான் கோலியின் கேப்டன்சி கெரியரை தீர்மானிக்கும் கடைசி சான்ஸ்..!

By karthikeyan VFirst Published Jul 2, 2021, 8:15 PM IST
Highlights

டி20 உலக கோப்பை தான் விராட் கோலியின் கேப்டன்சி கெரியரை தீர்மானிக்கும் கடைசி வாய்ப்பாக இருக்கும் என்று இந்திய முன்னாள் வீரர் சபா கரீம் தெரிவித்துள்ளார்.
 

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 3 விதமான போட்டிகளிலும் அபாரமாக ஆடி வெற்றிகளை குவித்து சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்த அணியாக கோலோச்சிவருகிறது.

விராட் கோலியும் வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்துவருகிறார். உலகம் முழுதும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வெற்றிகளை குவித்தாலும், கோலி தலைமையில் இதுவரை ஒரு ஐசிசி டிராபி கூட ஜெயிக்காதது அவருக்கு பெரும் பின்னடைவாக இருக்கிறது.

2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியில் பாகிஸ்தானிடம் தோற்று கோப்பையை இழந்த இந்திய அணி, 2019 ஒருநாள் உலக கோப்பை அரையிறுதியில் தோற்றது. ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் நியூசிலாந்திடம் தோற்றது. ஐபிஎல்லில் விராட் கோலியால் ஒருமுறை கூட கோப்பையை வெல்ல முடியவில்லை என்பதே அவருக்கு ஏற்கனவே பெரும் பிரச்னையாக இருந்துவருகிறது. இந்நிலையில், ஐசிசி தொடர்களிலும் தொடர்ச்சியாக முக்கியமான நாக் அவுட் போட்டிகளில் தோற்று கோப்பையை இழந்துவருகிறது இந்திய அணி.

இந்நிலையில், விராட் கோலி டி20 உலக கோப்பையை பெரிதும் எதிர்நோக்கியுள்ளார். வரும் அக்டோபர் 17ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் டி20 உலக கோப்பை தொடர் தொடங்குகிறது. அந்த தொடரை ஒரு கேப்டனாக விராட் கோலி எதிர்நோக்கியிருக்கிறார்.

இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சபா கரீம்,  டி20 உலக கோப்பை விராட் கோலியின் கேப்டன்சி கெரியரில் மிக முக்கியமான தொடர். அவர் இதுவரை ஒரு ஐசிசி கோப்பை கூட வெல்லவில்லை என்பது அவர் மீதான விமர்சனமாக இருந்துவருகிறது. இப்படியான சூழலில், டி20 உலக கோப்பையை வென்றால் அது அவர் மீதான நெருக்கடியை குறைக்க உதவும். அவர் கேப்டனாக எவ்வளவு காலம் நீடிக்க விரும்புகிறார் என்பதை அவரால் தீர்மானிக்க முடியும். ஆனால் ஐசிசி கோப்பை அவரிடமிருந்து வெகுதொலைவில் உள்ளது என்று சபா கரீம் தெரிவித்துள்ளார்.
 

click me!