
ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இந்த சீசனில் சிஎஸ்கே அணி படுமோசமாக ஆடிவருகிறது. தோனி கேப்டன்சியிலிருந்து விலகியதையடுத்து, இந்த சீசனில் ரவீந்திர ஜடேஜாவின் கேப்டன்சியில் ஆடிவரும் சிஎஸ்கே அணி இதுவரை ஆடிய 6 போட்டிகளில் 5 தோல்வியை தழுவி புள்ளி பட்டியலில் கடைசிக்கு முந்தைய 9ம் இடத்தில் உள்ளது.
சிஎஸ்கே அணிக்கு வெற்றி அவசியமாகியுள்ள நிலையில், டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் ருதுராஜ் கெய்க்வாட் ஃபார்முக்கு வந்து குஜராத் டைட்டன்ஸூக்கு எதிரான போட்டியில் 48 பந்தில் 73 ரன்களை குவித்தது நல்ல விஷயம். ருதுராஜ் நன்றாக ஆடி கடந்த சீசனில் அதிக ரன்களை குவித்ததால் தான் சிஎஸ்கே அணி கோப்பையை வென்றது.
இந்த சீசனின் முதல் 4 போட்டிகளில் ருதுராஜ் சரியாக ஆடாத நிலையில், அதன்பின்னர் ஸ்கோர் செய்ய தொடங்கியிருக்கிறார். இன்று சிஎஸ்கே அணி மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக ஆடும் போட்டியில் 53 ரன்கள் அடித்தால் சச்சின் சாதனையை தகர்த்துவிடுவார் ருதுராஜ் கெய்க்வாட்.
ஐபிஎல்லில் 28 இன்னிங்ஸ்களில் 947 ரன்களை குவித்துள்ள ருதுராஜ், மும்பைக்கு எதிராக 53 ரன்கள் அடித்தால் 1000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டிவிடுவார். சச்சின் டெண்டுல்கர் ஐபிஎல்லில் 31 இன்னிங்ஸ்களில் 1000 ரன்களை அடித்துள்ள நிலையில், விரைவில் 1000 ரன்களை எட்டிய சாதனைக்குரிய வீரராக சச்சின் டெண்டுல்கர் திகழ்கிறார். இந்நிலையில், மும்பைக்கு எதிரான போட்டி மற்றும் அதற்கடுத்த போட்டி ஆகிய இரண்டிலும் சேர்த்து 53 ரன்கள் அடித்தால் கூட சச்சின் சாதனையை ருதுராஜ் தகர்த்துவிடுவார்.
இந்த பட்டியலில் 34 இன்னிங்ஸ்களில் 1000 ரன்களை அடித்த ரெய்னா இரண்டாமிடத்தில் உள்ளார். ரிஷப் பண்ட் (35) மற்றும் தேவ்தத் படிக்கல்(35) ஆகிய இருவரும் 3ம் இடத்திலும், ரோஹித் சர்மா (37) மற்றும் தோனி(37) ஆகிய இருவரும் 4ம் இடத்திலும் உள்ளனர்.