கேப்டன் பொறுப்பிலிருந்து விலகும் கோலி..? கேப்டனாகிறார் ரோஹித் சர்மா

By karthikeyan VFirst Published Sep 13, 2021, 3:59 PM IST
Highlights

டி20 உலக கோப்பைக்கு பின் இந்திய அணியின் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகி, ரோஹித் சர்மாவிடம் கேப்டன் பதவியை ஒப்படைப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
 

2014ம் ஆண்டு தோனி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றதையடுத்து, 2014ல் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார் விராட் கோலி. 2017ம் ஆண்டு தோனி ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கான கேப்டன்சியிலிருந்து விலகியதையடுத்து, கோலி வெள்ளைப்பந்து அணிகளின் கேப்டன்சி பொறுப்பையும் ஏற்றார்.

2017 முதல் 3 விதமான இந்திய அணிகளின் கேப்டனாக இருந்துவரும் விராட் கோலி, டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவில் 2 முறை டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்தார். இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா என பல நாடுகளிலும் வெற்றி பெற்று டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகச்சிறந்த அணியாக இந்திய அணியை வழிநடத்திவருகிறார்.

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வரை சென்ற கோலி தலைமையிலான இந்திய அணி, ஃபைனலில் தோற்று சாம்பியன்ஷிப்பை இழந்தது. 

விராட் கோலி ஒரு கேப்டனாக எந்த ஐசிசி கோப்பையையும் வெல்லவில்லை என்பது அவர் மீதான விமர்சனமாக உள்ளது. 2017 சாம்பியன்ஸ் டிராபி, 2019 ஒருநாள் உலக கோப்பை ஆகிய தொடர்களில் முறையே ஃபைனல் மற்றும் அரையிறுதியில் தோற்றது. விராட் கோலி ஐபிஎல்லிலும் ஒருமுறை கூட கோப்பையை வெல்லாத அதேவேளையில், ரோஹித் சர்மா 5 முறை ஐபிஎல் டைட்டிலை வென்றதுடன், 2018ல் ஆசிய கோப்பையையும் வென்று கொடுத்தார். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்த கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் சிறப்பாக வழிநடத்தி அணிக்கு வெற்றிகளை பெற்றுக்கொடுத்து, அவரது கேப்டன்சி திறனை நிரூபித்துள்ளார்.

எனவே வெள்ளைப்பந்து கிரிக்கெட் அணிகளுக்கான கேப்டன் பொறுப்பை ரோஹித்திடம் கொடுப்பதன் மூலம் கோலி மீதான அழுத்தத்தை குறைக்கமுடியும் என்பதால், ரோஹித்தை ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டனாக்கலாம் என்ற கருத்து இருந்துவருகிறது.

விராட் கோலி ஒரு ஐசிசி கோப்பை கூட ஜெயிக்கவில்லை என்ற விமர்சனம் இருந்துவரும் நிலையில், கோலியின் பேட்டிங் ஃபார்மும் மோசமாக இருக்கிறது. எனவே இந்திய அணி மற்றும் கோலியின் நலன் கருதி கேப்டன்சியை மாற்றும் திட்டத்தில் பிசிசிஐ இருப்பதாகவும், இதுதொடர்பாக அண்மையில் ரோஹித் மற்றும் கோலியுடன் அணி நிர்வாகம் ஆலோசனை நடத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் டி20 உலக கோப்பைக்கு பின் விராட் கோலி கேப்டன்சி பொறுப்பிலிருந்து விலகி, அவரே கேப்டன் பொறுப்பை ரோஹித்திடம் ஒப்படைப்பார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

விராட் கோலி 95 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தி 65 வெற்றிகளையும், 45 டி20 போட்டிகளில் 27 வெற்றிகளையும், 14 தோல்விகளையும் பெற்றுள்ளார்.

ரோஹித் சர்மா 19 டி20 போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தி 15 வெற்றிகளை இந்திய அணிக்கு பெற்று கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

click me!