Latest Videos

கோலிக்காக பிசிசிஐயிடம் வரிந்து கட்டிய ரோகித் சர்மா – 6 மாசத்துக்கு முன்னாடியே நடந்த சம்பவம்!

By Rsiva kumarFirst Published Jul 2, 2024, 9:38 PM IST
Highlights

விராட் கோலி விளையாடவில்லை என்றால் தானும் விளையாடமாட்டேன் என்றும் ரோகித் சர்மா பிசிசிஐயிடம் கூறியதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2ஆவது முறையாக டிராபியை கைப்பற்றியது. அதன் பிறகு விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். ஆனால், ஓய்வு குறித்த முடிவு இப்போது எடுக்கப்படவில்லை என்றும், 6 மாதங்களுக்கு முன்பே அவர்கள் எடுத்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

அதோடு, ஓய்வு குறித்த முடிவு ஜெய் ஷா உள்ளிட்ட அதிகாரிகளுடன் நீண்ட விவாதம் நடந்ததாகவும் சொல்லப்படுகிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியானது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் தோல்வி அடைந்து பரிதாபமாக வெளியேறியது. இதன் காரணமாக இனிமேல் அணியில் எந்த சீனியர் வீரர்களுக்கு இடம் இல்லை என்றும், இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று பிசிசிஐ தீர்மானித்திருக்கிறது. இதன் காரணமாகத்தான் ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமிக்க முயற்சிகள் நடந்துள்ளது.

ஆனால், கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் போது ஹர்திக் பாண்டியா காயம் அடைந்த நிலையில் தொடரிலிருந்து வெளியேறினார். இதையடுத்து தென் ஆப்பிரிக்கா தொடருக்கான டி20 போட்டிகளுக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

ஆனால், அவருக்கும் காயம் ஏற்பட்ட நிலையில் இதன் காரணமாக அடுத்து நடைபெற்ற எந்த தொடரிலும் இருவருமே கலந்து கொள்ளவில்லை. நேரடியாக ஐபிஎல் தொடரில் களமிறங்கினர். ஆனால், அதற்கு முன்னதாகவே நடைபெற்ற டி20 போட்டிகளில் ரோகித் சர்மாவும், விராட் கோலியும் இருவரும் கலந்து கொண்டு விளையாடினர்.

ஹர்திக் பாண்டியா மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவரும் இல்லாத நிலையில் டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணிக்கு ரோகித் சர்மாவை கேப்டனாக்க பிசிசிஐ முடிவு செய்தது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த நிலையில் எப்படியும் டி20 உலகக் கோப்பை தொடரை வென்று கொடுப்பேன் என்று ரோகித் சர்மா உறுதி அளித்தார்.

மேலும், விராட் கோலியும் டி20 உலகக் கோப்பை தொடரில் இடம் பெற்று விளையாட வேண்டும் என்ற ஆவலில் இருந்தார். ஆனால், அதற்கு பிசிசிஐ ஒப்புதல் அளிக்கவில்லை. மேலும், இளம் வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில் ஆகியோருக்கு வாய்ப்பளிக்க பிசிசிஐ திட்டமிட்டது. ஆனால், டி20 உலகக் கோப்பை தொடரில் விராட் கோலி விளையாடாவிட்டால் நானும் விளையாடமாட்டேன் என்று ரோகித் சர்மா மறுத்திருக்கிறார். அதன் பிறகு தான் விராட் கோலி விளையாட பிசிசிஐ சம்மதம் தெரிவித்திருக்கிறது.

மேலும், ரோகித் சர்மாவிற்கு ஏற்றாற் போன்று அணியை தேர்வு செய்ய பிசிசிஐ முன் வந்தது. இந்த தொடரில் தொடக்க வீரராக களமிறங்கிய விளையாடிய விராட் கோலி 7 போட்டிகளில் விளையாடி 75 ரன்கள் எடுத்து மோசமான ஃபார்மை வெளிப்படுத்திய நிலையில் அவர் மீது விமர்சனம் எழுந்தது. மேலும், அவரை அணியிலிருந்து நீக்க வேண்டும் என்றும், பேட்டிங் ஆர்டரை மாற்ற வேண்டும் என்றும் விமர்சனம் எழுந்தது.

எனினும் விராட் கோலி மீது நம்பிக்கை வைத்த ரோகித் சர்மா அவரை தொடக்க வீரராகவே களமிறக்கினார். 7 போட்டிகளில் சிறப்பாக விளையாடாத கோலி இறுதிப் போட்டியில் 76 ரன்கள் விளாசி இந்திய அணி அதிக ரன்கள் குவிக்க காரணமாக இருந்தார். இந்தப் போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டிராபியை கைப்பற்றியது.

இதையடுத்து விராட் கோலி முதலில் ஓய்வு அறிவிக்கவே, ரோகித் சர்மா பின்னர் ஓய்வு அறிவித்தார். 6 மாதங்களுக்கு முன்பே இருவரும் இந்த முடிவு குறித்து திட்டமிட்டிருக்கின்றனர். இந்த தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்திருந்தாலும் இருவரும் ஓய்வு அறிவித்திருப்பார்கள். கோலி மற்றும் ரோகித் இருவரும் டி20 உலகக் கோப்பை தொடருடன் ஓய்வு பெறுவார்கள் என்பது பிசிசிஐ ஏற்கனவே அறிந்த ஒன்று தான் என்று கூறப்படுகிறது.

click me!