இந்திய டி20 அணியிலிருந்து ஒரேயடியாக ஓரங்கட்டப்படும் கேஎல் ராகுல்..?

By karthikeyan VFirst Published Mar 21, 2021, 5:07 PM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் ராகுல் புறக்கணிக்கப்பட்டது, அவருக்கு அணியில் இனி இடமில்லை என்று அனுப்பப்படும் சிக்னலா என்பது குறித்து இந்திய டி20 அணியின் துணை கேப்டன் ரோஹித் சர்மா பேசியுள்ளார்.
 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 3-2 என வென்றது. முதல் 4 போட்டிகளிலும் தொடக்க வீரர் கேஎல் ராகுல், 2 போட்டிகளில் டக் அவுட்டானார். மற்ற 2 போட்டிகளில் சேர்த்தே 15 ரன்கள் மட்டுமே அடித்தார். 

இதையடுத்து கடைசி டி20 போட்டியில் ராகுலை நீக்கிவிட்டு கூடுதல் பவுலராக நடராஜன் சேர்க்கப்பட்டார். அதனால் ரோஹித்துடன் கோலியே தொடக்க வீரராக இறங்கினார். அணியின் சீனியர் வீரர்களான ரோஹித்தும் கோலியும் தொடக்க வீரர்களாக இறங்கி அபாரமாக ஆடினர். இருவரும் தங்கள் அனுபவத்தை பயன்படுத்தி அருமையாக ஆடி முதல் விக்கெட்டுக்கு 94 ரன்களை குவித்தனர். ரோஹித் இந்த போட்டியில் 34 பந்தில் 64 ரன்களும், கோலி 52 பந்தில் 80 ரன்களும் குவித்தனர்.

ரோஹித்தும் கோலியும் அபாரமான தொடக்கத்தை அமைத்து கொடுக்க, அதைக்கண்ட கவாஸ்கர் உள்ளிட்ட முன்னாள் ஜாம்பவான்கள் சிலர் அவர்கள் இருவருமே டி20 கிரிக்கெட்டில் தொடக்க வீரர்களாக இறங்கலாம் என்று கருத்து தெரிவித்துள்ளனர். டி20 உலக கோப்பை நெருங்கிவரும் நிலையில், ராகுலின் புறக்கணிப்பு, இந்திய அணியில் அவருக்கான இடமில்லை என்று சொல்லப்படும் மெசேஜா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில், அதுகுறித்து பேசிய இந்திய டி20 அணியின் துணை கேப்டன் ரோஹித் சர்மா, டி20 உலக கோப்பைக்கு இன்னும் நீண்டகாலம் இருக்கிறது. அதற்குள்ளாக உலக கோப்பைக்கான பேட்டிங் ஆர்டர் பற்றி கருத்து கூறமுடியாது. ராகுல் இந்திய அணியின் முக்கியமான பேட்ஸ்மேன். அவர் ஃபார்மில் இல்லாததால் அணியிலிருந்து நீக்கப்பட வேண்டியதாயிற்று. அணியின் பெஸ்ட் லெவனுடன் இறங்க வேண்டியதால் அவரது ஃபார்மை கருத்தில்கொண்டு மட்டுமே நீக்கப்பட்டார்.

அவர் நீக்கப்பட்டதால் அவருக்கு எந்த விதமான சிக்னலும் அனுப்பப்பட்டதாக அர்த்தமில்லை. உலக கோப்பை நெருங்க நெருங்க அனைத்தும் மாறும் என்று ரோஹித் தெரிவித்தார்.
 

click me!