
இந்தியா - இங்கிலாந்து இடையேயான கடைசி டி20 போட்டி நேற்று நடந்தது. அந்த போட்டியில் 36 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 3-2 என தொடரை வென்றது.
கடைசி டி20 போட்டியில் இந்திய அணியில் நான்கே பேட்ஸ்மேன்கள் தான் பேட்டிங் ஆடினர். ஆனால் அவர்கள் அனைவருமே அபாரமாக ஆடி ஸ்கோர் செய்தனர். தொடக்க வீரர்களாக இறங்கிய ரோஹித் 64 ரன்களும், கோலி 80 ரன்களும் குவித்தனர். 3ம் வரிசையில் இறங்கிய சூர்யகுமார் யாதவ் 17 பந்தில் 32 ரன்களும், ஹர்திக் பாண்டியா 17 பந்தில் 39 ரன்களும் குவித்தனர். அதனால் 20 ஓவரில் 224 ரன்களை குவித்த இந்திய அணி, 188 ரன்களில் இங்கிலாந்தை சுருட்டி 36 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
188 ரன்கள் என்ற இலக்கை இங்கிலாந்து விரட்டும்போது ஜேசன் ராய் முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்துவிட்டார். அதன்பின்னர் பட்லரும் டேவிட் மாலனும் இணைந்து இந்திய பவுலிங்கை அடித்து நொறுக்கினர்.
பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி வேகமாக ஸ்கோர் செய்தனர். பட்லரும் மாலனும் இணைந்து 13 ஓவரில் 130 ரன்களை குவித்தனர். அவர்கள் இருவரும் களத்தில் இருந்தபோது இங்கிலாந்து அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. 13வது ஓவரில் 52 ரன்னில் பட்லரை வீழ்த்தி பிரேக் கொடுத்தார் புவனேஷ்வர் குமார்.
பட்லரும் மாலனும் இணைந்து ஆடும்போது இங்கிலாந்தின் வெற்றிக்கு வாய்ப்பிருந்தது. அந்த பார்ட்னர்ஷிப்பை உடைப்பதற்காகத்தான் 13வது ஓவரில் புவனேஷ்வர் குமாரை கொண்டுவந்தார் கேப்டன் கோலி. அவர் நினைத்ததை போலவே புவனேஷ்வர் குமார் பட்லரை வீழ்த்தி பிரேக் கொடுத்தார்.
பட்லரின் விக்கெட்டை விராட் கோலி மிகுந்த உற்சாகத்துடன் ரொம்ப கத்தி கொண்டாடினார். அதைக்கண்டு விரக்தியும் வெறுப்பும் அடைந்த பட்லர், கோலியை முறைத்து ஏதோ சொல்ல, சும்மா விடுவாரா கோலி? கடுங்கோபத்துடன் பட்லரை நோக்கிச்சென்று, விரலை உயர்த்தி அவருடன் வாக்குவாதம் செய்ய, மோதல் மூண்டது. இதைக்கண்ட அம்பயர் நிதின் மேனன், நிலைமை மோசமடைவதை தடுக்க, அவர்களிடம் பேசி விலக்கிவிட்டார்.