மும்பை இந்தியன்ஸின் கேப்டனாக வேண்டியவர் அவருதான்.. பாண்டிங் தான் என்னை கேப்டனாக்கினார்! ரோஹித் சர்மா ஓபன் டாக்

By karthikeyan VFirst Published May 20, 2020, 10:23 PM IST
Highlights

தன்னை மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக்கியது ரிக்கி பாண்டிங் தான் என்று ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். 
 

ஐபிஎல்லின் வெற்றிகரமான அணி மும்பை இந்தியன்ஸ். ரோஹித் சர்மா 2013ல் மும்பை இந்தியன்ஸின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அந்த சீசனிலேயே மும்பை இந்தியன்ஸுக்கு முதல் கோப்பையை வென்று கொடுத்தார் ரோஹித் சர்மா. அதன்பின்னர் 2015, 2017, 2019 ஆகிய சீசன்களில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை வென்றது. மொத்தமாக 4 முறை ஐபிஎல் கோப்பையை வென்று அதிகமான முறை டைட்டிலை வென்ற அணி என்ற பெருமையடன் கெத்தாக திகழ்கிறது மும்பை இந்தியன்ஸ். 

சிஎஸ்கேவைவிட ஒருமுறை கூடுதலாக கோப்பையை வென்று  மும்பை இந்தியன்ஸ் வெற்றிகரமான ஐபிஎல் அணியாக திகழ்வதற்கு ரோஹித் சர்மா மிக முக்கிய காரணம். கேப்டனாகவும் பேட்ஸ்மேனாகவும் மிகச்சிறந்த பங்காற்றியுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணி நான்கு முறை கோப்பையை வெல்ல ரோஹித்தின் கேப்டன்சி முக்கிய காரணம். 

ரோஹித் சர்மா 2013ல் தான் கேப்டனான சம்பவம் குறித்து அஷ்வினுடனான உரையாடலில் பேசியுள்ளார். அஷ்வினுடன் இன்ஸ்டாகிராம் லைவ் உரையாடலில் பேசிய ரோஹித் சர்மா, மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டது குறித்து பேசினார். 

“2013ல் ரிக்கி பாண்டிங்கை மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. மற்ற வெளிநாட்டு வீரர்களுக்கு முன்பாக, முதல் ஆளாக இந்தியாவிற்கு வந்த ரிக்கி பாண்டிங், அணி வீரர்களை பற்றி புரிந்துகொள்வதற்காக ஒரு மீட்டிங் போட்டார். ஏற்கனவே கேப்டன்சி செய்த ஹர்பஜன் சிங், 2013ல் கேப்டனாக்கப்படவில்லை. எனவே நான் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று நினைத்தேன். எனவே அதற்கு தயாராகவே இருந்தேன். 

ஆனால் தினேஷ் கார்த்திக்கை கேப்டனாக்கலாம் என சிலர் தெரிவித்தனர். ரிக்கி பாண்டிங் தான் என்னை கேப்டனாக்கினார். ரிக்கி பாண்டிங் வேற்று கிரகத்திலிருந்து வந்தவர் என்றே கருதுகிறேன். ஒரு வீரரிடமிருந்து அவரது சிறப்பான ஆட்டத்தை வெளிக்கொண்டுவரும் கலையை அறிந்தவர் ரிக்கி பாண்டிங். அதனால் தான் அவர் ஆஸ்திரேலிய அணிக்கு தொடர்ச்சியாக 2 முறை உலக கோப்பையை வென்றுகொடுத்தார். சாம்பியன்ஷிப்பை வெல்லும் உத்தியறிந்தவர் பாண்டிங் என்று ரோஹித் சர்மா புகழாரம் சூட்டியுள்ளார். 
 

click me!