நான் அப்பவே கோலிகிட்ட சொன்னேன்.. ஆர்சிபி தவறவிட்ட அருமையான வீரர்..! பார்த்திவ் படேல் சொல்லும் ஃப்ளாஷ்பேக்

By karthikeyan VFirst Published May 20, 2020, 9:37 PM IST
Highlights

ஆர்சிபி அணி சிறந்த வீரர் ஒருவரை தவறவிட்டதை பற்றி பார்த்திவ் படேல் பேசியுள்ளார். 
 

ஐபிஎல்லில் இதுவரை 12 சீசன்கள் நடந்துமுடிந்துள்ளன. ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 4 முறையும் சிஎஸ்கே 3 முறையும் ஐபிஎல் டைட்டிலை வென்றுள்ள நிலையில், விராட் கோலி - டிவில்லியர்ஸ் என்ற ஜாம்பவான்கள் இருந்தும் ஆர்சிபி ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை. 

ஒவ்வொரு சீசனிலும் ஆர்சிபி அணியின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறிக்கொண்டேயிருக்கிறது. ஆனால் ஆர்சிபி அணி கோப்பையை மட்டும் வென்றதில்லை. கெய்ல், ஷேன் வாட்சன், கேஎல் ராகுல், மிட்செல் ஸ்டார்க் ஆகிய ஐபிஎல்லின் சிறந்த வீரர்கள் ஆர்சிபியில் ஆடியிருக்கிறார்கள். ஆனால் சிறந்த வீரர்களையெல்லாம் ஆர்சிபி தக்கவைத்து கொள்வதில்லை. ஒருசில சீசன்களிலோ அல்லது தொடர்ச்சியாக சில போட்டிகளிலோ சரியாக ஆடவில்லையென்றால் ஆர்சிபி கழட்டிவிடுகிறது. 

அதனால் தான், மும்பை இந்தியன்ஸ், சிஎஸ்கே அணிகளை போல கோர் டீம் ஆர்சிபிக்கு வலுவானதாக அமையவில்லை. விராட் கோலி - டிவில்லியர்ஸ் மட்டும் தான் நிரந்தர வீரர்கள். இப்போது அந்த பட்டியலில் சாஹலும் இணைந்துள்ளார். ஆர்சிபி அணியின் பேட்டிங் ஆர்டர் எல்லா சீசன்களிலும் வலுவாகவே இருந்திருக்கிறது. இப்போதும் வலுவாகவே இருக்கிறது. ஸ்பின் பவுலிங்கில் சாஹல் நம்பிக்கையளிக்கிறார். அந்த அணியின் பெரிய பிரச்னையே, கோர் டீமில் சிறந்த ஃபாஸ்ட் பவுலர் இல்லாததுதான். 

அந்தவகையில், அந்த குறையை தீர்க்க, தான் விராட் கோலியிடம் ஒரு ஐடியா சொன்னதாக பார்த்திவ் படேல் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து பேசிய பார்த்திவ் படேல், பும்ராவை மும்பை இந்தியன்ஸ் அணி எடுப்பதற்கு முன்பாகவே, பும்ராவை காட்டி அவரை நமது அணியில் எடுக்க வேண்டும் என்று கூறினேன். ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் பும்ராவை தட்டி தூக்கியது என்று பார்த்திவ் படேல் தெரிவித்தார். 

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஏற்கனவே மலிங்கா இருந்த நிலையில், பும்ராவும் அணியில் இணைந்ததால் அந்த அணியின் பவுலிங் யூனிட் மேலும் வலுப்பெற்றது. இருவருமே டெத் ஓவர்களை வீசுவதில் வல்லவர்கள். 2017 மற்றும் 2019 ஆகிய இரண்டு சீசன்களிலும் மும்பை இந்தியன்ஸ் டைட்டில் வெல்ல அவர்கள் இருவரும் தான் முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதுமாதிரி பல சிறந்த வீரர்களை தவறவிட்டது மட்டுமல்லாமல், அணியில் இருக்கும் சிறந்த வீரர்களையும் கட்டிக்காக்காமல் அவ்வப்போது கழட்டிவிட்டு கொண்டே இருப்பதால் தான் ஆர்சிபியால் இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் டைட்டிலை வெல்ல முடியவில்லை. 

click me!