இந்த பையன் பெரிய ஆளா வருவான்.. 15 வருஷத்துக்கு முன்பே தற்போதைய இந்திய வீரரின் எதிர்காலத்தை கணித்த டிராவிட்

By karthikeyan VFirst Published May 20, 2020, 6:31 PM IST
Highlights

இந்திய அணியின் இளம் வீரர் கேஎல் ராகுலுக்கு கிரிக்கெட்டில் சிறந்த எதிர்காலம் இருப்பதாக 15 ஆண்டுகளுக்கு முன்பே லெஜண்ட் ராகுல் டிராவிட் கணித்துள்ளார்.
 

இந்திய அணியின் இளம் திறமையான வீரர் கேஎல் ராகுல். விராட் கோலி - ரோஹித் சர்மாவுக்கு அடுத்து இந்திய அணியின் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக திகழ்கிறார். இந்திய அணியில் 2014ம் ஆண்டு அறிமுகமாகி, இதுவரை 36 டெஸ்ட், 32 ஒருநாள் மற்றும் 42 டி20 போட்டிகளில் ஆடியுள்ள கேஎல் ராகுல், தரமான பேட்ஸ்மேனாக திகழ்கிறார்.

கேஎல் ராகுலின் பேட்டிங்கிற்கு, லெஜண்ட் பிரயன் லாராவே பெரிய ரசிகர் என்பதை லாராவே பலமுறை வெளிப்படையாக தெரிவித்துள்ளார். ராகுல் 2018ல் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக சொதப்பியபோதிலும், உலகின் பல பெரிய ஜாம்பவான்கள், கேஎல் ராகுல் சிறந்த பேட்ஸ்மேன் என்பதை திரும்ப திரும்ப வலியுறுத்தினர். ஆனால் தொடர் சொதப்பலால், டெஸ்ட் அணியிலிருந்து கடந்த ஆண்டு ஓரங்கட்டப்பட்ட ராகுல், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சிறப்பாக ஆடி வெள்ளைப்பந்து கிரிக்கெட்டுக்கான இந்திய அணியில் நட்சத்திர வீரராக நிரந்தர இடம் பிடித்துவிட்டார். விரைவில், டெஸ்ட் அணியில் இழந்த இடத்தையும் பிடித்துவிடுவார்.

இந்நிலையில், கேஎல் ராகுல் சிறுவயது பயிற்சியாளர் ஜெயராஜ், சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றை பகிர்ந்துள்ளார். ராகுல் டிராவிட், கேஎல் ராகுல் பெரிய வீரராக வருவார் என்று கணித்த சம்பவம் குறித்து பேசியுள்ளார். 

அந்த சம்பவம் குறித்து பேசிய கேஎல் ராகுலின் சிறுவயது பயிற்சியாளர் ஜெயராஜ், அண்டர் 13 தொடரில் ஆடியபோது கேஎல் ராகுல் தொடர்ச்சியாக இரண்டு இரட்டை சதங்களை விளாசினார். அதில் இரண்டாவது இரட்டை சதம் அடித்தது பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில்.. அதிர்ஷ்டவசமாக அந்த சமயத்தில் ராகுல் டிராவிட், ட்ரெய்னிங்கிற்காக அங்கு இருந்தார். 

அப்போது, டிராவிட் பயிற்சி செய்யும்போது அவரது பேட்டிங் டெக்னிக்கையும் ஸ்டைலையும் பவுண்டரி லைனில் அமர்ந்து கவனிக்குமாறு ராகுலிடம் கூறினேன். ராகுல் தொடர்ச்சியாக ஒரு வாரம் டிராவிட் பயிற்சி செய்வதை கவனித்தார். 

அப்போது, ஒரு நாள் வலைப்பயிற்சியை முடித்துவிட்டு என்னிடம் வந்த டிராவிட், கேஎல் ராகுலை காட்டி, அந்த பையன் சிறந்த திறமைசாலி. 2 இரட்டை சதங்களை அடித்திருக்கிறான். அவனுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. அவனை கூடுதல் கவனம் செலுத்தி பார்த்துக்கொள்ளுங்கள் என்று டிராவிட் என்னிடம்(பயிற்சியாளர் ஜெயராஜ்) சொன்னார். 

நேரமிருந்தால் கேஎல் ராகுலிடம் கொஞ்சம் பேசுங்கள் என்று டிராவிட்டிடம் கேட்டுக்கொண்டேன். அவரும் மகிழ்ச்சியுடன் அதை ஏற்று ராகுலிடம் பேசினார். டிராவிட் தன்னிடம் பேசப்போவதை நினைத்து மிகவும் மகிழ்ச்சியடைந்த ராகுல், டிராவிட் தன்னிடம் பேசியதை இப்போதுவரை நினைவில் வைத்திருக்கிறார் என்று கேஎல் ராகுலின் சிறுவயது பயிற்சியாளர் ஜெயராஜ் தெரிவித்துள்ளார்.

click me!