தோனி பேச்சை கேட்டிருந்தால் நான் இரட்டை சதமே அடித்திருக்க முடியாது..! ரோஹித் சர்மா பகீர்

By karthikeyan VFirst Published May 20, 2020, 4:55 PM IST
Highlights

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2013ல் ஒருநாள் போட்டியில் தனது முதல் இரட்டை சதத்தை அடித்தபோது, தோனியின் அறிவுரையை நிராகரித்ததாக ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். 
 

ரோஹித் சர்மா சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழ்கிறார். குறிப்பாக வெள்ளைப்பந்து(ஒருநாள் மற்றும் டி20) கிரிக்கெட்டில் தலைசிறந்து விளங்குகிறார். சதங்களையும் சாதனைகளையும் குவித்துவருகிறார். டெஸ்ட் அணியில் நிரந்தர இடம் கிடைக்காமல் தவித்துவந்த ரோஹித் சர்மா, கடந்த ஆண்டு வங்கதேசம் மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சிறப்பாக ஆடி டெஸ்ட் அணியிலும் நிரந்தர இடம் பிடித்துவிட்டார். 

2007ல் இந்திய அணியில் அறிமுகமான ரோஹித் சர்மா, ஆரம்பத்தில் சரியாக சோபிக்கவில்லை. அதனால் அணியில் சேர்க்கப்படுவதும் நீக்கப்படுவதுமாக இருந்தார். அணியில் ரோஹித் சர்மாவிற்கு நிரந்தர இடம் கிடைக்காமல் இருந்தது. தொடக்க வீரராக இறங்க கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திய ரோஹித் சர்மா, 2013ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இரட்டை சதமடித்து அணியில் தனக்கான இடத்தை உறுதி செய்தார். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2013ல் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்த ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா அடித்த இரட்டை சதம் தான் அவரது கெரியரின் திருப்புமுனையாக அமைந்தது. அதன்பின்னர் இலங்கைக்கு எதிராக 2014ல் மறுபடியும் ஒரு இரட்டை சதம்(264), 2017ல் மீண்டும் இலங்கைக்கு எதிராக மற்றொரு இரட்டை சதம் என மொத்தம் 3 இரட்டை சதங்களை விளாசியுள்ளார். 

இந்நிலையில், அஷ்வினுடன் இன்ஸ்டாகிராம் லைவ் உரையாடலில் பேசிய ரோஹித் சர்மா, தனது முதல் இரட்டை சதம் குறித்து பேசியுள்ளார். அப்போது, அந்த இரட்டை சதம் அடித்தபோது, தன்னுடன் களத்தில் இருந்த கேப்டன் தோனியின் அறிவுரையை நிராகரித்ததாக ரோஹித் சர்மா கூறியுள்ளார்.

இதுகுறித்து அஷ்வினிடம் பேசிய ரோஹித் சர்மா, அந்த போட்டியில் தவான், கோலி, யுவராஜ் சிங் ஆகியோர் சோபிக்கவில்லை. தொடக்க வீரராக இறங்கிய நானும், ரெய்னாவும் இணைந்து சிறப்பாக ஆடி ஸ்கோர் செய்தோம். ரெய்னாவும் ஆட்டமிழந்த பின்னர், என்னுடன் தோனி ஜோடி சேர்ந்தார். 

உங்களுக்கே(அஷ்வின்) தெரியும்.. தோனி மிடில் ஓவர்களில் பேட்டிங் ஆடினால், என்ன செய்வார் என்று.. மறுமுனையில் உள்ள வீரர்களுக்கு ஆலோசனை கூறி வழிநடத்துவார். அதேபோலத்தான் என்னிடமும், நீ(ரோஹித்) நன்றாக களத்தில் நிலைத்துவிட்டாய். எனவே எந்த பவுலரின் பவுலிங்கையும் உன்னால் அசால்ட்டாக அடிக்க முடியும். அதனால் நீ கடைசி வரை களத்தில் நிலைத்து நிற்க வேண்டும். எனவே நீ சிங்கிள் எடுத்து ஆடு.. இடையிடையே கேப் பார்த்து பவுண்டரிகளை மட்டும் அடி.. நான் அடித்து ஆடிக்கொள்கிறேன் என்று தோனி என்னிடம் சொன்னார். 

ஆனால் நான் களத்தில் நிலைத்துவிட்டதால், என்னால் அனைவரின் பவுலிங்கையும் அடித்து ஆடமுடிந்தது. அதனால் தோனி சொன்னதை கேட்காமல் பந்துகளை சிக்ஸருக்கு பறக்கவிட்டேன் என்றார் ரோஹித் சர்மா. 

ரோஹித் சர்மா அந்த குறிப்பிட்ட போட்டியில் 158 பந்தில் 12 பவுண்டரிகள் மற்றும் 16 சிக்ஸர்களுடன் 209 ரன்களை குவித்து கடைசி ஓவரின் 3வது பந்தில் ஆட்டமிழந்தார். அந்த போட்டியில் 383 ரன்களை குவித்த இந்திய அணி, 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. தோனி சொன்னதுபோல, அடிக்க முடிந்தும் கூட ரோஹித், அடிக்காமல் இருந்திருந்தால் இரட்டை சதம் சாத்தியமில்லை. 
 

click me!