ராகுல் டிராவிட்டுடனான வாக்குவாதம்.. நடந்தது என்ன..? மௌனம் கலைத்த ஸ்ரீசாந்த்

By karthikeyan VFirst Published May 18, 2020, 9:26 PM IST
Highlights

2013 ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஆடியபோது, ராகுல் டிராவிட்டை ஸ்ரீசாந்த் திட்டியதாக சொல்லப்படும் சம்பவம் குறித்து ஸ்ரீசாந்த் மனம் திறந்துள்ளார்.
 

ஸ்ரீசாந்த் கிரிக்கெட்டில் ஆடியவரை சர்ச்சைக்கு பஞ்சாமில்லாதவர். குறிப்பாக ஐபிஎல்லில் தொடர் சர்ச்சைகளில் சிக்கினார். ஹர்பஜன் சிங்கிடம் அறை வாங்கியது, 2013 ஐபிஎல்லில் சூதாட்ட புகாரில் சிக்கி தடை பெற்றது என ஸ்ரீசாந்த்தை சுற்றி எப்போதுமே சர்ச்சை தான். 

தோனி தலைமையிலான இந்திய அணி வென்ற இரண்டு முக்கியமான உலக கோப்பைகளான, 2007 டி20 உலக கோப்பை, 2011 ஒருநாள் உலக கோப்பையிலும் ஆடியவர் ஸ்ரீசாந்த். இந்திய அணிக்காக 27 டெஸ்ட், 53 ஒருநாள் மற்றும் 10 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார்.

இந்நிலையில், 2013 ஐபிஎல்லில் ராகுல் டிராவிட் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஆடியபோது, கேப்டன் ராகுல் டிராவிட் மற்றும் பயிற்சியாளர் பாடி அப்டான் ஆகிய இருவருடன் ஸ்ரீசாந்த் வாக்குவாதம் செய்த தகவலை பாடி அப்டான் ஏற்கனவே பகிர்ந்துள்ளார். 

சூதாட்டப்புகாரில் சிக்குவதற்கு நான்கு நாட்கள் முன் நடந்த அந்த சம்பவம் குறித்து பேசிய ஸ்ரீசாந்த், நான் ராகுல் டிராவிட்டை திட்டவெல்லாம் இல்லை. சிஎஸ்கே அணிக்கு எதிரான முந்தைய போட்டியில் தோனியின் விக்கெட்டை வீழ்த்தினேன். சிஎஸ்கேவுக்கு எதிராக சிறப்பாக ஆடி வெற்றி பெற எனக்கு பிடிக்கும். அதிலும் முந்தைய போட்டியில் தோனியின் விக்கெட்டை வீழ்த்தியதால் நான் அணியில் இருப்பேன் என்றுதான் நினைத்தேன். 

ஆனால் நான் ஆடும் லெவனில் இல்லை. அதுகுறித்து ராகுல் டிராவிட்டிடம் கேட்டேன். அவர் சரியான விளக்கம் அளிக்கவில்லை. அணி நிர்வாகமும் சரியான விளக்கமளிக்கவில்லை. எனவே தான் அவர்களிடம் கோபப்பட்டேனே தவிர, தகாத வார்த்தைகளில் எல்லாம் பேசவில்லை என்று ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார்.
 

click me!