வங்கதேச அணிக்கு எதிரான சூப்பர் 8 சுற்று போட்டியில் முதலில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 3 பவுண்டரி அடித்ததன் மூலமாக டி20 உலகக் கோப்பையில் 100 பவுண்டரி அடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.
இந்தியா மற்றும் வங்கதேச அணிக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்று போட்டி தற்போது ஆண்டிகுவாவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் நஜ்முல் ஹூசைன் ஷாண்டோ பவுலிங் தேர்வு செய்தார். வங்கதேச அணியில் தஸ்கின் அகமது நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக ஜாக்கெர் அலி அணியில் இடம் பெற்றுள்ளார்.
ஆனால், இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இந்த நிலையில் தான் இந்திய அணியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், ரோகித் சர்மா ஆரம்பம் முதலே அதிரடி காட்டினார். 11 பந்துகளில் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 23 ரன்கள் எடுத்த ரோகித் சர்மா ஷாகிப் அல் ஹசன் பந்தில் ஜாக்கெர் அலியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
இந்தப் போட்டியில் 3 பவுண்டரி அடித்ததன் மூலமாக ரோகித் சர்மா டி20 உலகக் கோப்பை தொடரில் 100 பவுண்டரி அடித்த 5ஆவது வீரராக சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்னதாக இலங்கை வீரர் மகீலா ஜெயவர்தனே 111 பவுண்டரி அடித்து முதலிடம் பிடித்துள்ளார். விராட் கோலி 105 பவுண்டரியுடன் 2ஆவது இடத்திலும், டேவிட் வார்னர் 102 பவுண்டரியுடன் 3ஆவது இடத்திலும், ரோகித் சர்மா 100 பவுண்டரியுடன் 4ஆவது இடத்திலும் இருக்கின்றனர்.