T20 கேப்டன் ஆனார் ரோஹித்.. நியூசி.க்கு எதிராக இந்திய அணி அறிவிப்பு.. அணிக்கு வரும் ஐபிஎல் ஹீரோக்கள்.!

By Asianet TamilFirst Published Nov 9, 2021, 9:18 PM IST
Highlights

உலகக் கோப்பையில் இடம்பிடித்த தமிழக வீரர் வருண் சக்கரவர்த்திக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இன்னொரு தமிழக மூத்த வீரர் அஸ்வின் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்திய டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, ஐபிஎல் போட்டியில் கலக்கிய வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டோடு டி20 கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக விராட் கோலி ஏற்கெனவே அறிவித்திருந்தார். எனவே, டி20 அணியின் புதிய கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்தது. அதற்கு தற்போது விடை கிடைத்திருக்கிறது. டி20 அணியின் புதிய கேப்டனாக ரோஹித் சர்மா அறிவிக்கப்பட்டுள்ளார். அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ள நிலையில், எதிர்பார்த்ததுபோலவே ரோஹித் சர்மா கேப்டனாக ஆகியுள்ளார். ரோஹித்துக்கு துணையாக கே.எல்.ராகுல் துணை கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட நியூசிலாந்து அணி இந்தியா வருகிறது. முதல் டி20 போட்டி ஜெய்ப்பூரில் நவ.17 அன்று தொடங்குகிறது. இந்தப் போட்டியிலிருந்து ரோஹித் சர்மா தனது கேப்டன் பணியைத் தொடங்குகிறார். அதோடு நியூசிலாந்துக்கு எதிராக டி20 போட்டிகளில் விளையாட உள்ள இந்திய அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. சீனியர் வீரர்களான ஹர்திக் பாண்ட்யா,  ரவீந்திர ஜடேஜா, முகம்மது ஷமி ஆகியோர் அணியில் சேர்க்கப்படவில்லை. 

அதேவேளையில் புது முகங்களுக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது. குறிப்பாக ஐபிஎல் போட்டிகளில் கலக்கிய ரிதுராஜ் கெய்க்வாட், வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஹர்திக் பாண்டாவின் இடத்தைப் பூர்த்தி செய்யும் வகையில் ஆல்ரவுண்டர் இடத்துக்கு வெங்கடேஷ் ஐயர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். உலகக் கோப்பையில் கழற்றிவிடப்பட்ட யுவேந்திர சலால் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். டெஸ்ட் தொடர்களில் கலக்கிய முகம்மது சிராஜூக்கு டி20 அணியில் இடம் கிடைத்துள்ளது. உலகக் கோப்பையில் இடம்பிடித்த தமிழக வீரர் வருண் சக்கரவர்த்திக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இன்னொரு தமிழக மூத்த வீரர் அஸ்வின் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணியில்  சிறப்பாக செயல்பட்ட ஹர்ஷல் படேலுக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது.


அணி விவரம் வருமாறு: ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), ரிதுராஜ் கெய்க்வாட், ஷேர்யாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), வெங்கடேஷ் ஐயர், யுவேந்திர சலால், ஆர்.அஸ்வின், அக்‌ஷர் படேல், ஆவேஷ்கான், புவனேஸ்வர் குமார், தீபக் சரார், ஹர்ஷல் படேல், முகம்மது சிராஜ்.
  

click me!