பிசிசிஐ-க்கு ராபின் உத்தப்பாவின் நியாயமான கோரிக்கை

By karthikeyan VFirst Published May 23, 2020, 10:49 PM IST
Highlights

வெளிநாட்டு டி20 லீக் தொடர்களில் இந்திய வீரர்களை ஆட அனுமதிக்க வேண்டும் என்று ராபின் உத்தப்பா கோரிக்கை விடுத்துள்ளார்.
 

இந்தியாவில் 2008ம் ஆண்டிலிருந்து ஐபிஎல் நடத்தப்பட்டுவருகிறது. இதுவரை 12 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளன. ஐபிஎல்லை போலவே உலகம் முழுதும் பல்வேறு நாடுகளில் டி20 லீக் தொடர்கள் நடத்தப்படுகின்றன. 

பிக்பேஷ் லீக், மசான்ஸி சூப்பர் லீக், கனடா பிரீமியர் லீக், கரீபியன் பிரீமியர் லீக், பாகிஸ்தான் சூப்பர் லீக், வங்கதேசம் பிரீமியர் லீக் என உலகம் முழுதும் பல்வேறு டி20 லீக் தொடர்கள் நடத்தப்பட்டுவருகின்றன. 

ஆனாலும் அதிகமான பணம் புழங்கும் டி20 லீக் தொடர் ஐபிஎல் தான் என்பதால், வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல்லில் ஆட அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ஐபிஎல்லில் பாகிஸ்தான் வீரர்களுக்கு ஆட தடைவிதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

அனைத்து நாட்டு வீரர்களும் ஐபிஎல்லில் ஆடினாலும், இந்திய வீரர்கள் வெளிநாட்டு டி20 லீக் தொடர்களில் ஆட அனுமதிக்கப்படுவதில்லை. இந்திய வீரர்களின் பணிச்சுமையை குறைக்கும் வகையிலும், அவர்களது ஃபிட்னெஸை கருத்தில்கொண்டும் வெளிநாட்டு லீக் தொடர்களில் ஆட பிசிசிஐ அனுமதிப்பதில்லை.  அதுமட்டுமல்லாமல், பொருளாதார ரீதியாக நல்ல சம்பளம் கொடுத்து வீரர்களை நன்றாக பார்த்துக்கொள்வதால் வெளிநாட்டு டி20 லீக் தொடர்களில் ஆட வேண்டிய அவசியம் இல்லை என்பதால் பிசிசிஐ அனுமதிப்பதில்லை.

சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் என முழுமையாக ஓய்வு பெறும் வீரர்களுக்கு மட்டும் வெளிநாட்டு டி20 லீக் தொடர்களில் ஆட அனுமதி வழங்கப்படுகிறது. அந்தவகையில், யுவராஜ் சிங் ஐபிஎல்லில் இருந்தும் ஓய்வுபெற்று விட்டதால் அவருக்கு வெளிநாட்டு தொடர்களில் ஆட அனுமதியளிக்கப்பட்டது.

ஆனால், பிசிசிஐ-யின் ஒப்பந்த பட்டியலில் இடம்பெறாத வீரர்களை வெளிநாட்டு லீக் தொடர்களில் ஆட அனுமதிக்க வேண்டும் என்று ராபின் உத்தப்பா கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து பேசிய ராபின் உத்தப்பா, பிசிசிஐ ஒப்பந்த பட்டியலில் இல்லாத இந்திய வீரர்களை, ஒருசில வெளிநாட்டு டி20 லீக் தொடர்களிலாவது ஆட அனுமதிக்க வேண்டும். அதன்மூலம் இன்னும் நிறைய கற்றுக்கொள்ள முடியும் என்று ராபின் உத்தப்பா கோரிக்கை விடுத்துள்ளார்.

பிசிசிஐ ஒப்பந்த பட்டியலில் இல்லாத வீரர்களின் வருமானமும் குறைவுதான். அதுமட்டுமல்லாமல் அவர்கள் இந்திய அணியில் ஆடுவதில்லை என்பதால், ஐபிஎல் மற்றும் உள்நாட்டு போட்டிகளில் மட்டுமே ஆடிவருகின்றனர். எனவே வெளிநாட்டு டி20 லீக் தொடர்களில் ஆட அனுமதிக்க வேண்டும் என்ற குரல்கள் வலுத்துவருகின்றன. இதே விஷயத்தை ரெய்னாவும் வலியுறுத்தியுள்ளார்.
 

click me!