உன் ஆர்வக்கோளாறுக்கு அளவே இல்லையா தம்பி.. சொதப்பல் மன்னன் ரிஷப் பண்ட்.. வீடியோ

By karthikeyan VFirst Published Nov 8, 2019, 10:19 AM IST
Highlights

இந்தியா - வங்கதேசம் இடையேயான இரண்டாவது டி20 போட்டியில் ரிஷப் பண்ட்டின் ஆர்வக்கோளாறால், ஒரு விக்கெட் பறிபோனது. அதே வீரரை ரிஷப் பண்ட்டே மறுபடியும் வீழ்த்தியிருந்தாலும், அவர் முதலில் செய்த தவறு தவறுதான். 
 

தோனிக்கு அடுத்து இந்திய அணியின் விக்கெட் கீப்பராக உருவெடுக்கும் ரிஷப் பண்ட்டுக்கு, ஒருவிதமான அழுத்தம் இருந்துகொண்டே இருக்கிறது. அவர் விக்கெட் கீப்பிங்கில் இன்னும் கத்துக்குட்டியாகவே இருக்கிறார். அவரது விக்கெட் கீப்பிங் தொடர்ச்சியாக விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது. பேட்டிங்கிலும் தனது இயல்பான ஆட்டத்தையும் ஆடமுடியாமல் அணியின் சூழலுக்கு ஏற்பவும் ஆடமுடியாமல் இரண்டுங்கெட்டானாக திணறிவருகிறார். 

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தவறான ரிவியூ எடுக்க வலியுறுத்தி கடுமையான விமர்சனத்துக்கும் கிண்டலுக்கும் உள்ளான ரிஷப் பண்ட், இரண்டாவது போட்டியில் ஒரு தவறிழைத்தார். 

ராஜ்கோட்டில் நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேச அணி 20 ஓவரில் 153 ரன்கள் அடித்தது. 154 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான ரோஹித் சர்மா, தொடக்கம் முதலே அதிரடியாக ஆடி 43 பந்துகளில் 85 ரன்களை குவித்து இந்திய அணி எளிதாக வெற்றி பெற காரணமாக திகழ்ந்தார். ரோஹித் அமைத்து கொடுத்த அபாரமான தொடக்கத்தால் இந்திய அணி 16வது ஓவரிலேயே இலக்கை எட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் வங்கதேச அணியின் தொடக்க வீரர்களான லிட்டன் தாஸும் முகமது நைமும் இணைந்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். இவர்கள் நன்றாக ஆடிக்கொண்டிருந்த நிலையில், லிட்டன் தாஸை 6வது ஓவரில் வீழ்த்தும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் ரிஷப் பண்ட்டின் ஆர்வக்கோளாறால் அந்த வாய்ப்பு பறிபோனது. 

6வது ஓவரை சாஹல் வீசினார். அந்த ஓவரின் மூன்றாவது பந்தை மிகவும் மெதுவாக வீசினார். லிட்டன் தாஸ் இறங்கிவந்து அடிக்க முயல, அந்த பந்தை மெதுவாக வீசினார் சாஹல். அதனால் அந்த பந்தை அடிக்கமுடியாமல் லிட்டன் தாஸ் விட்டார். பந்து மிகவும் மெதுவாக வந்ததால், லிட்டன் தாஸ் திரும்பியும் கிரீஸுக்குள் வந்துவிடக்கூடாது; அதற்குள் ஸ்டம்பிங் செய்ய வேண்டும் என்ற அவசரத்தில், பந்து ஸ்டம்பை கடப்பதற்கு முன்பாகவே பந்தை பிடித்து ஸ்டம்பிங் செய்துவிட்டார் ரிஷப் பண்ட். 

ஐசிசி விதிப்படி, பந்து ஸ்டம்பை கடந்த பிறகுதான் பந்தை பிடித்து ஸ்டம்பிங் செய்ய வேண்டும். ஆனால் ரிஷப் முன்கூட்டியே பந்தை பிடித்து ஸ்டம்பிங் செய்ததால் அது அவுட்டும் இல்லை. அதுமட்டுமல்லாமல் அதற்கு நோ பாலும் கொடுக்கப்பட்டது. அந்த ஃபிரிஹிட்டில் ஒரு பவுண்டரியும் போனது. அதன்பின்னர் தொடக்க ஜோடி பெரியளவில் ஆடியிருந்தால் ரிஷப் பண்ட்டுக்கு பெரிய பிரச்னையாக அமைந்திருக்கும். ஆனால் லிட்டன் தாஸை 8வது ஓவரிலேயே ரன் அவுட் செய்து தான் செய்த தவறுக்கு தானே பரிகாரம் தேடிக்கொண்டார். 

messes up !! 🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️ pic.twitter.com/3rEVqnNG7Z

— Nishant Barai (@barainishant)

ஆனால் ஒவ்வொரு போட்டியிலும் ரிஷப் பண்ட் தொடர்ச்சியாக ஏதாவது தவறு செய்துகொண்டே இருப்பது அவருக்கு நல்லதல்ல. இதுமட்டுமல்ல, இந்த போட்டியில் நிறைய முறை பந்தை பிடிக்காமல் விட்டார். அதனால் பேட்ஸ்மேன் பந்தை அடிக்காமலேயே நிறைய சிங்கிள்கள் எடுக்கப்பட்டன. ரோஹித் சர்மா விட்ட த்ரோ ஒன்றையும் பிடிக்காமல் விட்டார். அதனால் கூடுதலாக ஒரு ரன் போனது. இவ்வாறு விக்கெட் கீப்பிங்கில் தொடர்ச்சியாக ரிஷப் பண்ட் சொதப்பிக்கொண்டே இருக்கிறார். 
 

click me!