#IPL2021 டெல்லி கேபிடள்ஸ் அணிக்கு புதிய கேப்டன் நியமனம்..!

By karthikeyan VFirst Published Mar 31, 2021, 2:55 PM IST
Highlights

டெல்லி கேபிடள்ஸ் அணியின் புதிய கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.
 

ஐபிஎல் 14வது சீசன் வரும் ஏப்ரல் 9ம் தேதி தொடங்கி, மே 30ம் தேதி வரை நடக்கவுள்ளது. ஐபிஎல்லுக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவரும் நிலையில், முதல் முறையாக கோப்பையை எதிர்நோக்கியுள்ள டெல்லி கேபிடள்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

டெல்லி கேபிடள்ஸ் அணியின் கேப்டனும் நட்சத்திர பேட்ஸ்மேனுமான ஷ்ரேயாஸ் ஐயர், இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்காக ஆடியபோது ஃபீல்டிங் செய்தபோது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. அதனால் இங்கிலாந்துக்கு எதிரான கடைசி 2 ஒருநாள் போட்டிகளில் ஷ்ரேயாஸ் ஐயர் ஆடவில்லை.

இந்நிலையில், ஷ்ரேயாஸ் ஐயருக்கு வரும் ஏப்ரலில் தோள்பட்டையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது. அதனால் அடுத்த 6 மாதங்களுக்கு அவர் ஆடமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் தான் ஷ்ரேயாஸ் ஐயர் மீண்டும் களத்திற்கு வரவுள்ளார். அதனால் ஐபிஎல் 14வது சீசன் முழுவதிலும் அவர் ஆடப்போவதில்லை.

ஷ்ரேயாஸ் ஐயரின் கேப்டன்சியில் தான் டெல்லி அணி கொஞ்சம் கொஞ்சமாக தேறிவந்தது. கடந்த சீசனில் முதல் முறையாக இறுதி போட்டிக்கு முன்னேறியது. இந்நிலையில், ஷ்ரேயாஸ் ஐயர் ஆடாதது டெல்லி கேபிடள்ஸ் அணிக்கு பெரும் பாதிப்பாக இருந்தாலும், அந்த அணியின் மற்ற முக்கியமான வீரர்களான ரிஷப் பண்ட் மற்றும் பிரித்வி ஷா ஆகிய இருவரும் செம ஃபார்மில் உள்ளனர்.

பிரித்வி ஷா உள்நாட்டு தொடரான விஜய் ஹசாரேவில் தெறிக்கவிட்ட நிலையில், ரிஷப் பண்ட், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான தொடர்களில் அசத்தினார். ஷ்ரேயாஸ் ஐயர் இந்த சீசனில் ஆடாத நிலையில், இந்த சீசனுக்கான டெல்லி கேபிடள்ஸ் அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டுள்ளார். செம ஃபார்மில் இருக்கும் ரிஷப் பண்ட் பேட்டிங்கில் இருக்கும் தன்னம்பிக்கையை அப்படியே கேப்டன்சியிலும் எதிரொலிக்கும்பட்சத்தில், டெல்லி அணி இந்த சீசனிலும் அசத்துவதில் சந்தேகமில்லை.
 

click me!