ENG vs IND: ரிஷப் பண்ட், ஜடேஜா அபார சதம்; பும்ராவின் கடைசி நேர காட்டடியால் 416 ரன்களை குவித்தது இந்தியா

By karthikeyan VFirst Published Jul 2, 2022, 4:21 PM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட்டில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி ரிஷப் பண்ட், ஜடேஜா ஆகியோரின் சதம் மற்றும் பும்ராவின் கடைசி நேர காட்டடியால் முதல் இன்னிங்ஸில் 416 ரன்களை குவித்தது.
 

இங்கிலாந்து - இந்தியா இடையே கடந்த ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நேற்று தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, இந்திய அணி முதலில்  பேட்டிங் ஆடிவருகிறது.

முதலில் பேட்டிங் ஆடிவரும் இந்திய அணி 98 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. ஷுப்மன் கில், புஜாரா, விஹாரி, கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய 5 விக்கெட்டுகளை 98 ரன்களுக்கே இழந்துவிட்டது. 

அதன்பின்னர் ரிஷப் பண்ட்டும் ஜடேஜாவும் இணைந்து அபாரமாக பேட்டிங் ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ரிஷப் பண்ட் சதமும், ஜடேஜா அரைசதமும் அடித்தனர். ரிஷப்பும் ஜடேஜாவும் இணைந்து 6வது விக்கெட்டுக்கு 222 ரன்களை குவித்தனர்.

89 பந்தில் சதமடித்த ரிஷப் பண்ட் 111 பந்தில் 146 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ஷர்துல் தாகூரும் ஒரு ரன்னில் ஆட்டமிழக்க, முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 338 ரன்களை குவித்திருந்தது. ஜடேஜா 83 ரன்களுடனும் ஷமியும் களத்தில் இருந்தனர். 

2ம் நாளான இன்றைய ஆட்டத்தில் ஜடேஜா அவரது சதத்தை பூர்த்தி செய்து 104 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஷமி 16 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 375 ரன்களுக்கு இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அதன்பின்னர் கடைசி நேரத்தில் பும்ரா காட்டடி அடித்தார். ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஒரே ஓவரில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களை விளாசினார். அந்த ஓவரில் மட்டும் 35 ரன்கள் இந்தியாவிற்கு கிடைத்தது. அதன்விளைவாக 400 ரன்களை கடந்தது இந்திய அணி.

கடைசி விக்கெட்டாக சிராஜ் ஆட்டமிழக்க, இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 416 ரன்களை குவித்தது. பும்ரா 16 பந்தில் 31 ரன்களை விளாசினார்.
 

click me!