
ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இந்த சீசனில் இளம் வீரர்கள் பலர் அபாரமாக ஆடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர். உம்ரான் மாலிக், மோசின் கான், யஷ் தயால், ஆயுஷ் பதோனி, அபிஷேக் ஷர்மா ஆகியோர் அபாரமாக விளையாடி வருகின்றனர்.
அந்தவரிசையில் ரிங்கு சிங்கும் உள்ளார். 2017ம் ஆண்டு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் இடம்பெற்றிருந்த ரிங்கு சிங், 2018லிருந்து கேகேஆர் அணியில் அங்கம் வகிக்கிறார். ஆனால் 5 ஆண்டுகளில் அவருக்கு கேகேஆர் அணி போதுமான வாய்ப்பு அளித்ததில்லை. அவர் மிகச்சிறந்த ஃபீல்டர் என்பதால், அவரை ஆடும் லெவனில் எடுக்காமல் வெறும் ஃபீல்டராக மட்டுமே 4 ஆண்டுகளாக பயன்படுத்திவந்த கேகேஆர் அணி, இந்த சீசனில் அவருக்கு தொடர்ச்சியாக ஆடும் லெவனில் வாய்ப்பளித்துவருகிறது. அந்த வாய்ப்பை அவரும் அருமையாக பயன்படுத்தி சிறப்பாக ஆடிக்கொண்டிருக்கிறார்.
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக 153 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய கேகேஆர் அணி கடைசி ஓவரில் இலக்கை அடித்து வெற்றி பெற்றது. ரிங்கு சிங் இந்த போட்டியில் 23 பந்தில் 42 ரன்களை விளாசி கேகேஆரின் வெற்றிக்கு உதவினார். அதன் விளைவாக ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.
போட்டிக்கு பின்னர் பேசிய ரிங்கு சிங், அலிகாரிலிருந்து வந்த வீரர்கள் பலர் ரஞ்சி கிரிக்கெட்டில் ஆடியிருக்கின்றனர். ஆனால் ஐபிஎல்லில் ஆடும் முதல் வீரர் நான் தான். மிகப்பெரிய லீக் தொடரான ஐபிஎல்லில் ஆடும்போது மிகப்பெரிய அழுத்தம் இருக்கும். கடந்த 5 ஆண்டுகளாக இந்த வாய்ப்புக்காக நான் காத்திருந்தேன். கடைசி வரை களத்தில் நின்று பேட்டிங் ஆடுமாறும் மெக்கல்லம் மற்றும் நிதிஷ் ராணா ஆகிய இருவரும் கூறினர். அவ்வாறே செய்தேன் என்று ரிங்கு சிங் தெரிவித்தார்.