இந்தியாகிட்ட பண்ண மாதிரி எங்ககிட்ட முடியாது.. இங்கிலாந்தின் வியூகத்தை தவிடுபொடியாக்க பாண்டிங்கின் அதிரடி திட்டம்

By karthikeyan VFirst Published Jul 27, 2019, 12:54 PM IST
Highlights

ராய், பட்லர், பேர்ஸ்டோ என அதிரடி மன்னர்கள் இங்கிலாந்து அணியில் உள்ள நிலையில், சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான ரூட் மற்றும் ஸ்டோக்ஸ் ஆகியோரும் அணியில் உள்ளனர். பேட்டிங், ஃபாஸ்ட் பவுலிங், ஃபீல்டிங் அனைத்திலும் சிறந்த அணியாக இங்கிலாந்து திகழ்கிறது. 
 

ஆஷஸ் தொடர் வரும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி தொடங்குகிறது. இங்கிலாந்து அணி உலக கோப்பையை விட முக்கியமாக கருதுவது ஆஷஸ் தொடரைத்தான். கிரிக்கெட் வரலாற்றில் பழமையான ஆஷஸ் தொடர், இரு அணிகளுக்குமே மிக முக்கியமான தொடர். 

உலக கோப்பையை வென்ற உற்சாகத்திலும் உத்வேகத்திலும் ஆஷஸ் தொடரை எதிர்கொள்கிறது இங்கிலாந்து அணி. உலக கோப்பையில் அசத்திய ஜேசன் ராய், அயர்லாந்துக்கு எதிராக தனது முதல் டெஸ்ட் போட்டியை ஆடிய நிலையில், ஆஷஸ் தொடருக்கான அணியிலும் இடம்பிடித்துள்ளார். 

ராய், பட்லர், பேர்ஸ்டோ என அதிரடி மன்னர்கள் இங்கிலாந்து அணியில் உள்ள நிலையில், சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான ரூட் மற்றும் ஸ்டோக்ஸ் ஆகியோரும் அணியில் உள்ளனர். பேட்டிங், ஃபாஸ்ட் பவுலிங், ஃபீல்டிங் அனைத்திலும் சிறந்த அணியாக இங்கிலாந்து திகழ்கிறது. 

அதேபோல ஆஸ்திரேலிய அணிக்கு ஸ்மித் மற்றும் வார்னர் திரும்பியிருப்பது பெரிய பலம். பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கி தடைபெற்ற பான்கிராஃப்ட் மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளார். இவர்கள் தவிர டிராவிஸ் ஹெட், மார்கஸ் ஹாரிஸ், உஸ்மான் கவாஜா, மேத்யூ வேட் என ஆஸ்திரேலிய அணியும் சிறந்த பேட்டிங் வரிசையை கொண்டுள்ளது. மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ், பாட்டின்சன், ஹேசில்வுட் என ஃபாஸ்ட் பவுலிங் யூனிட் வலுவாக உள்ளதோடு, ஸ்பின்னில் கலக்க நாதன் லயன் உள்ளார். 

இந்நிலையில், இங்கிலாந்து அணி ஆஃப் ஸ்பின்னர் மொயின் அலியை ஆயுதமாக வைத்து ஆஸ்திரேலிய பேட்டிங் ஆர்டரை சிதைக்க நினைக்கும் என்பதை உணர்ந்த ரிக்கி பாண்டிங், மொயின் அலியை சமாளிப்பதற்கான வியூகம் ஒன்றை வைத்துள்ளார். 

இதுகுறித்து பேசிய ரிக்கி பாண்டிங், ஆஸ்திரேலிய அணியில் நிறைய இடது கை பேட்ஸ்மேன்கள் உள்ளனர். வலது கை ஆஃப் ஸ்பின்னரான மொயின் அலி, இடது கை பேட்ஸ்மேன்களுக்கு அபாரமாக வீசி சிக்கலை ஏற்படுத்தக்கூடியவர். எனவே மொயின் அலியை வைத்து ஆஸ்திரேலிய பேட்டிங் ஆர்டரை இங்கிலாந்து சரிக்க நினைக்கும். பொதுவாக வலது கை ஆஃப் ஸ்பின்னர்கள் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு பெரிய பிரச்னையாக இருப்பார்கள். எனவே மொயின் அலிதான் அவர்களது ஆயுதமாக இருப்பார். ஆனால் மிடில் ஆர்டரில் வலது கை பேட்ஸ்மேன்களை மட்டுமே ஆடவைப்பதன் மூலம் மொயின் அலியை எளிதாக சமாளிக்க முடிவதோடு, அவருக்கு நெருக்கடியையும் ஏற்படுத்த முடியும். மிடில் ஆர்டரில் வலது கை பேட்ஸ்மேன்களை எடுப்பதன் மூலம்தான் இங்கிலாந்து அணியின் திட்டத்தை முறியடிக்க முடியும் என்று ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். 

கடந்த ஆண்டு இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடியபோது டெஸ்ட் தொடர் முழுவதுமே இந்திய பேட்ஸ்மேன்களுக்கு மொயின் அலிதான் பெரிய சிக்கலாக இருந்தார். இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரை தனது சுழலில் வீழ்த்தி, இந்திய அணி தோற்பதற்கே முக்கிய காரணமாக மொயின் அலி திகழ்ந்தார். இந்நிலையில், மொயின் அலியை சமாளிப்பதற்கு ரிக்கி பாண்டிங் முன்கூட்டியே தெளிவான திட்டத்தை வைத்திருக்கிறார். 
 

click me!