112 வருஷத்துக்கு பிறகு இங்கிலாந்து பண்ண தரமான சாதனை.. அயர்லாந்தை வீழ்த்தி அபார வெற்றி

By karthikeyan VFirst Published Jul 27, 2019, 10:28 AM IST
Highlights

அயர்லாந்துக்கு எதிரான ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் வெறும் 85 ரன்கள் மட்டுமே அடித்த இங்கிலாந்து அணி, 143 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தி சாதனை படைத்துள்ளது. 

ஆஷஸ் தொடர் வரும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அயர்லாந்துக்கு எதிராக ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் ஆடியது இங்கிலாந்து அணி. 

லண்டன் லார்ட்ஸில் நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி வெறும் 85 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி அதிர்ச்சியளித்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய அயர்லாந்து அணி 207 ரன்கள் அடித்தது. 

122 ரன்கள் பின் தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை ஆடியது இங்கிலாந்து அணி. இரண்டாவது இன்னிங்ஸில் பர்ன்ஸுடன் தொடக்க வீரராக நைட் வாட்ச்மேன் ஜாக் லீச் இறக்கப்பட்டார். பர்ன்ஸ் 6 ரன்களில் ஆட்டமிழந்தபோதிலும், யாருமே எதிர்பார்த்திராத வகையில், 11ம் வரிசை வீரரான ஜாக் லீச் அபாரமாக ஆடி 92 ரன்களை குவித்தார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடிய ராய் 72 ரன்களை குவித்தார். இவர்கள் இருவர் மட்டுமே இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக ஆடினர். இவர்கள் தவிர ரூட் மற்றும் சாம் கரன் மட்டுமே 30 ரன்களுக்கு மேல் அடித்தனர். 

இரண்டாவது இன்னிங்ஸில் 303 ரன்களை குவித்தது இங்கிலாந்து அணி. இங்கிலாந்து அணியை வீழ்த்த 181 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய அயர்லாந்து அணிக்கு கிறிஸ் வோக்ஸும் ஸ்டூவர்ட் பிராடும் இணைந்து துவம்சம் செய்தனர். வெறும் 16 ஓவர்களில் 38 ரன்களுக்கு அயர்லாந்து அணியை ஆல் அவுட் செய்தனர். வோக்ஸ் 6 விக்கெட்டுகளையும் பிராட் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஆட்டநாயகனாக நைட் வாட்ச்மேனாக இறங்கி 92 ரன்களை குவித்த ஜாக் லீச் தேர்வு செய்யப்பட்டார். 

இந்த போட்டியில் வென்றதன் மூலம் 112 ஆண்டுகளுக்கு பிறகு தரமான சம்பவத்தை செய்துள்ளது இங்கிலாந்து அணி. முதல் இன்னிங்ஸில் குறைந்த ஸ்கோர் அடித்தும் அந்த போட்டியை வென்றதில் முதலிடத்தில் இங்கிலாந்து அணி உள்ளது. 1886/87ம் ஆண்டில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 45 ரன்கள் அடித்தும் அந்த போட்டியில் வென்றது. அது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி. 1907ம் ஆண்டில் முதல் இன்னிங்ஸில் 76 ரன்கள் அடித்த இங்கிலாந்து அணி, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான அந்த போட்டியை வென்றது. 

அதன்பிறகு 112 ஆண்டுகள் கழித்து, முதல் இன்னிங்ஸில் குறைந்த ஸ்கோர் அடித்தும் அந்த போட்டியில் ஒரு அணி வென்றது இந்த போட்டியில் தான். முதல் இன்னிங்ஸில் 85 ரன்கள் அடித்த இங்கிலாந்து அணி, அயர்லாந்தை 143 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த இடைப்பட்ட 112 ஆண்டுகளில், முதல் இன்னிங்ஸில் குறைந்த ஸ்கோர் அடித்த எந்த அணியும் வென்றதில்லை. 
 

click me!