
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 2வது டெஸ்ட் போட்டி பகலிரவு போட்டியாக அடிலெய்டில் நடந்துவருகிறது. டிசம்பர் 16ம் தேதி தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி, டேவிட் வார்னர் (95), ஸ்டீவ் ஸ்மித் (93) ஆகிய இருவரின் சிறப்பான பேட்டிங், மார்னஸ் லபுஷேனின் அபார சதம் (103), அலெக்ஸ் கேரியின் அரைசதம் (51) மற்றும் பின்வரிசையில் மிட்செல் ஸ்டார்க் மற்றும் மைக்கேல் நெசெரின் கேமியோ பங்களிப்பால் 473 ரன்களை குவித்து முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது ஆஸ்திரேலிய அணி.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிவரும் இங்கிலாந்து அணி, 2ம் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 17 ரன்கள் அடித்துள்ளது.
ஆஸ்திரேலிய அணியில் சரியாக பேட்டிங் ஆடாத வீரர்களில் ஒருவர் கேமரூன் க்ரீன். 5 பந்தில் வெறும் 2 ரன்னுக்கு பென் ஸ்டோக்ஸின் பந்தில் க்ளீன் போல்டாகி வெளியேறினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 8 இன்னிங்ஸ்களில் ஆடியுள்ள கேமரூன் க்ரீன் ஒரேயொரு அரைசதம் மட்டுமே அடித்துள்ளார். அவரது சராசரி வெறும் 29 ரன்கள். அவரது தடுமாற்றம் இன்னும் தொடர்ந்துவரும் நிலையில், அனைத்து வீரர்களின் பேட்டிங்கையும் கவனிப்பதை போலவே க்ரீனின் பேட்டிங்கையும் உன்னிப்பாக கவனித்துள்ள முன்னாள் லெஜண்ட் கிரிக்கெட்டரான ரிக்கி பாண்டிங், வர்ணனையில் க்ரீன் எப்படி அவுட்டாவார் என்பதை முன்கூட்டியே கூறினார். அவர் கூறியதை போலவே பென் ஸ்டோக்ஸின் பந்தில் க்ரீன் அவுட்டானார். இச்சம்பவம் ரிக்கி பாண்டிங்கின் கிரிக்கெட் மூளையை மீண்டுமொருமுறை அனைவரும் வியந்து புகழ காரணமாக அமைந்தது.
க்ரீன் அவுட்டாதற்கு முன் அவரது பேட்டிங் குறித்து வர்ணனையின்போது பேசிய ரிக்கி பாண்டிங், கேமரூன் க்ரீனின் பேட்டிங் உத்தியில் மாற்றம் தெரிகிறது. இவர் பேட்டிங் ஆடுவதை பார்க்கையில், இங்கிலாந்து பவுலர்கள் ஃபுல் லெந்த்தில் ஸ்டம்ப்புக்கு நேராகத்தான் வீசுவார்கள். ஏனெனில் அவரது முன்னங்கால் மிகவும் வெளியே உள்ளது. எல்பிடபிள்யூ ஆகிவிடுவோமோ என்று பயப்படுபவர்கள் தான் இப்படி நிற்பார்கள். மேலும் ஸ்டம்ப்புக்கு குறுக்காக முன்னங்காலை கொண்டுசெல்லமாட்டார்கள். எனவே இங்கிலாந்து பவுலர்கள் ஸ்டம்ப்புக்கு நேராகத்தான் வீசி அவுட்டாக்க முயல்வார்கள் என்று பாண்டிங் கூறினார்.
பாண்டிங் சொல்லி வாயை மூடவில்லை. அவர் சொன்னதை போலவே ஸ்டம்புக்கு நேராக வீசி க்ரீனை போல்டாக்கி அனுப்பினார் பென் ஸ்டோக்ஸ்.
ரிக்கி பாண்டிங்கின் கணிப்பின்படியே நடப்பது இது முதல்முறையல்ல. இதற்கு முன் பலமுறை அவர் கூறியதை போலவே பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழந்திருக்கின்றனர். பாண்டிங் பெரிய லெஜண்ட் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக்கொண்டே இருக்கிறார். பாண்டிங் சரியாக கணித்ததையடுத்து, அவரை பலரும் புகழ்ந்துவருகின்றனர்.